Superfoods that help keep the body healthy 
ஆரோக்கியம்

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில Superfoods! 

கிரி கணபதி

நாம் உண்ணும் உணவுகள்தான் நம் உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் சில உணவுகள் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் 'சூப்பர் ஃபுட்ஸ்' என அழைக்கப்படுகின்றன. இந்த சூப்பர் ஃபுட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நோய்களைத் தடுக்க மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

இந்த பதிவில் சில பிரபலமான சூப்பர் உணவுகளைப் பற்றியும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் முழுமையாகப் பார்க்கலாம். 

ப்ளூ பெர்ரி: ப்ளூபெர்ரிகள் ஆக்சிஜனேற்றிகளால் நிறைந்தவை. அவை உடல் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இவை கண் ஆரோக்கியத்திற்கும் மூளை செயல்பாட்டிற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ப்ளூ பெர்ரிகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்திகள் மற்றும் தயிரில் சேர்த்தும் சாப்பிடலாம். 

பாதாம்: பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்துக்கள், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை இதய நோய், நீரிழிவு மற்றும் சில வகையான புற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன. பாதாமை பச்சையாகவோ, வறுத்தோ அல்லது உப்பு சேர்த்தோ சாப்பிடலாம். பாதாம் பால், பாதாம் எண்ணெய் மற்றும் பாதாம் மாவையும் பயன்படுத்துவது, ஆரோக்கியத்திற்கு பெரிதளவில் உதவும். 

ப்ரோக்கோலி: ப்ரோக்கோலி வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. இது புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான அபாயத்தை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. ப்ரோக்கோலியை வாங்கி அப்படியே வேக வைத்து சாப்பிடலாம். அல்லது உங்கள் விருப்பம் போல பொரியல் செய்தோ அல்லது சூப்களில் சேர்த்தோ உணவாக எடுத்துக் கொள்ளலாம். 

அவாகாடோ: அவகாடோ எனப்படும் வெண்ணெய்ப் பழத்தில் கொழுப்புகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. இவை இதய நோய், பக்கவாதம் மற்றும் சில வகையான புற்று நோய்க்கான அபாயத்தைக் குறைக்க உதவும். அவகாடோ பழத்தை அப்படியே நீங்கள் சாப்பிடலாம். அல்லது சாலட்கள், சாண்ட்விச் மற்றும் ஜூஸ் போலவும் தயாரித்து சாப்பிடுவது சுவையாக இருக்கும். 

நட்ஸ் மற்றும் விதைகள்: நட்ஸ் மற்றும் விதைகளிலும் ஆரோக்கிய கொழுப்புகள் நார்ச்சத்து விட்டமின்கள் புரதம் நிறைந்துள்ளன. எனவே இவற்றை உட்கொள்வது உங்கள் இதயத்திற்கு ஒரு பாதுகாப்பு அரணாக அமையும். பாதாம், வால்நட், பிஸ்தா, சூரியகாந்தி விதைகள் மற்றும் சியா விதைகள் போன்ற பல்வேறு வகையான நட்ஸ் மற்றும் விதைகளை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். 

டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட் பிளாவனாய்டுகள் நிறைந்தது. இது ஒரு ஆக்சிஜனேற்றி. டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் பக்கவாதம், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும் என்கிறார்கள். 70% அதிகமான கோகோ உள்ளடக்கம் கொண்ட டார்க் சாக்லேட்டை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தால், உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். 

தக்காளி: தக்காளி லைகோபீன் என்ற சேர்மத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றி. தக்காளியை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து, எவ்விதமான தொற்று நோய்களும் உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்ளும். தக்காளியை அப்படியே நேரடியாக சாப்பிடலாம். அல்லது சாலட்கள் சூப்புகளில் சேர்த்தும் உங்கள் விருப்பம் போல ரசித்து உண்ணலாம். 

இந்த சூப்பர் ஃபுட் உணவுகளை நீங்கள் வழக்கமாக உட்கொண்டு வந்தால் அவை உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்களைத் தடுக்கவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கவும் உதவும். எனவே, தவறாமல் இவற்றை உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொண்டு நீண்ட காலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் வாழுங்கள்.   

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT