Causes and solutions for gas problems 
ஆரோக்கியம்

வாயு பிரச்னைக்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வாயு பிரச்னைக்கான காரணம் என்ன தெரியுமா? குடல் பகுதியில் தேங்கும் செரிக்காத உணவு அங்கு வாழும் பாக்டீரியாக்கள் உண்டாக்கும் ‘நொதித்தல்’ காரணமாக வாயுவை உண்டாக்குகிறது.

வாயு பிரச்னைக்கான அறிகுறிகள்: செரிமானத்தின்பொழுது குடலில் உண்டாகும் வாயு வெளியேறுவது இயல்புதான். ஆனால், இவை நம் அன்றாட வாழ்க்கை முறையை பாதிக்கும்பொழுது அதனை சரிசெய்ய வேண்டியது அவசியம். வயிற்று உப்புசம், வயிற்றில் கடமுடவென்று சத்தம், வயிறு இரைச்சல், உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படுதல், துர்நாற்றத்துடன் சத்தமாக வாயு வெளியேறுதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

காரணங்கள்:

* மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் மலம் கழிப்பது அவசியம். இல்லையெனில் குடற்பகுதியில் தேங்கி நொதித்தல் காரணமாக நாற்றத்துடன் கூடிய வாயுவாக வெளியேறும்.

* குடற் பகுதியில் வாழும் நல்ல பாக்டீரியாக்களின் அழிவும் வாயு ஏற்படுவதற்கு காரணமாகும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளும் சில மாத்திரைகள் குடற் பகுதியில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.

* செயற்கை சுவையூட்டிகளில் உள்ள (இனிப்புச் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படும்) ‘சார்பிடால்’ வாயுவை உண்டாக்கும். பாலில் உள்ள ‘லாக்டோஸ்’ சிலருக்கு வாயு பிரச்னையை உண்டுபண்ணும். இவற்றை எடுத்துக்கொள்வதை தவிர்த்தாலே வாயு பிரச்னை சரியாகிவிடும்.

* உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் காரணமாக வாயு பெருக்கம் உண்டாகலாம். பருப்பு வகைகள், வாழைக்காய் போன்றவையும் வாயுவை உண்டாக்கும்.

* முளைகட்டிய தானியங்கள் கூட சிலருக்கு வயிற்றுப் பொருமலையும், வாயு தொல்லையையும் ஏற்படுத்தும். எனவே, இவற்றை சமைக்கும்பொழுது இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து சமைக்க வாயு குடலில் உண்டாகாது.

* எண்ணெயில் பொரித்த பண்டங்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் வாயு பெருக்கத்தை உண்டாக்கும்.

வாயு பிரச்னையை தடுக்கும் உணவுகள்:

* மோர் வயிற்றுக்கு இதம் தரும் சிறந்த பானம். இவை குடலில் நலம் பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவும்.

* பூண்டு பற்களை பாலில் நன்கு வேக வைத்து சாப்பிடலாம்.

* புதினா துவையல் வாயு பிரச்னைக்கு சிறந்தது. பழங்களில் அன்னாசிப்பழத் துண்டுகளை தினம் சிறிது எடுத்துக் கொள்ளலாம்.

* ஓமத்தை வெறும் வானலியில் வறுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு பாதியாக சுருங்கியதும் குடித்து வர வாயு பிரச்னை சரியாகும்.

* உணவில் இஞ்சி துவையல், சுக்கு, மிளகு போன்றவற்றை சேர்த்துக்கொள்வது குடலில் வாயு உருவாகாமல் தடுக்கும்.

* குடிக்கும் நீரில் சீரகத்தை ஒரு ஸ்பூன் அளவு போட்டு நன்கு கொதிக்க வைத்து பருக சிறந்த பலன் அளிக்கும்.

* ஒரு கப் மோரில் உப்பு, பெருங்காயத்தூள், சுக்குப் பொடி சேர்த்து கலந்து பருக வயிறு உப்புசம், வாயு தொல்லை, வயிற்று வலி போன்றவை குணமாகும்.

தேவைப்பட்டால் அதிகப்படியான வாயு தொல்லைக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT