உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.1 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய்க்கு வித்திடும் 70 சதவிகித காரணிகள் மனிதர்களால் தடுக்கக் கூடியவை. இரசாயன மற்றும் வளிமண்டல மாசுபாடுகள், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், நடமாட்டம் இல்லாத அமர்ந்த வாழ்க்கை முறை மற்றும் நோய்த்தொற்றுகள் ஆகியவை இதில் அடங்கும்.
புற்றுநோயின் ஆரம்பநிலைஅறிகுறிகள்: சில வகையான புற்றுநோய்களுக்கான அறிகுறிகளை அறிந்துகொள்வது புற்றுநோயை ஆரம்ப நிலையில் இருக்கும்போதே கண்டறிய உதவும்.
1. உடலின் எந்தப் பகுதியிலும் எந்த காரணமும் இல்லாமல் வலிப்பது.
2. எந்தக் காரணமும் இல்லாமல் திடீர் எடை இழப்பு.
3. எல்லா நேரத்திலும் உடலில் மிகுந்த சோர்வு.
4. குறையாத காய்ச்சல் அல்லது மீண்டும் மீண்டும் வரும் காய்ச்சல்.
5. சரும நிறம் அல்லது அமைப்பில் மாற்றங்கள்.
6. உடலின் எந்தப் பகுதியிலும் கட்டிகள் தோன்றுவது (வலி அல்லது வலியற்றவை).
7. உடலின் எந்தப் பகுதியிலிருந்தும் அசாதாரண இரத்தப்போக்கு வெளியேறுதல்.
8. சருமம் அல்லது வாயில் புண்கள் தோன்றுவது, எளிதில் குணமடையாத புண்கள்.
மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
புற்றுநோய் வராமல் தடுக்க:
1. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது: உட்கார்ந்த வாழ்க்கை முறை உடல் பருமனுக்கு வழிவகுக்கும். உடல் பருமன் பல நோய்களை இருகரம் நீட்டி வரவேற்கும். அதில் புற்றுநோயும் ஒன்றாகும். தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். வாரத்திற்கு ஐந்து முறை 30 நிமிட ஏரோபிக் உடற்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகள் கூட செய்யலாம்.
2. சீரான, ஆரோக்கியமான உணவு முறை: சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை சேர்த்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சியில் அதிகம் உள்ள கொழுப்பு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இத்தகைய உணவுகள் செரிமான அமைப்பில் நாள்பட்ட அழற்சிக்கு வழிவகுக்கும். இது நீரிழிவு மற்றும் இதய நோய் உட்பட, பல நோய்களுக்கு வழிவகுக்கிறது.
கீரை, பச்சை இலைக் காய்கறிகள், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், சால்மன் போன்ற மீன் வகைகள், முழு தானியங்களுடன் பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும்.
புகைப்பழக்கம், புகையிலை, ஆல்கஹால் மற்றும் சிவப்பு இறைச்சியின் அதிகப்படியான நுகர்வு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், இவற்றை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகள், பேக்கரி உணவுகள், பொறித்த, வறுத்த உணவுகளைத் தவிர்ப்பதும் நன்று.
பரிசோதனைகள்: மார்பகப் புற்றுநோய்களுக்கு, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஒவ்வொரு ஆண்டும் மேமோகிராபி பரிசோதனை செய்து கொள்ளலாம். இதேபோல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு, பாப் ஸ்மியர் சோதனை செய்து கொள்ளலாம். சில புற்றுநோய்களை தடுப்பூசி மூலம் பெருமளவில் தடுக்கலாம். எடுத்துக்காட்டாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்க, மருத்துவ ஆலோசனைப் பெற்று, 13 வயதில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.