தைராய்டு சுரப்பி என்பது கழுத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது உடலின் வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம் மற்றும் பல முக்கிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. தைராய்டு சுருப்பிகளில் ஏற்படும் கட்டி, தைராய்டு புற்றுநோய் எனப்படுகிறது. இந்த புற்றுநோய் மெதுவாக வளரும் தன்மை உடையது என்பதால், ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்த முடியும். இருப்பினும், இதை தாமதமாகக் கண்டுபிடித்தால் உயிருக்கே ஆபத்தானதாக மாறலாம்.
தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்:
தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப நிலையில் குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்காது. நோய் முற்றிய நிலையை அடையும்போது சில அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
தைராய்டு புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறி கழுத்தில் முடிச்சு உருவாகுதல் ஆகும். இந்த முடிச்சு வலிமிக்கதாகவோ அல்லது வலி இல்லாமலோ இருக்கலாம்.
நம்முடைய குரல் நாண்கள் தைராய்டு சுரப்பியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதால், புற்றுநோய் கட்டிகள் குரல் நாண்களை அழுத்தி குரல் கரகரப்பை ஏற்படுத்தும்.
தைராய்டு கட்டிகள் வளர்ந்தது தொண்டையை அழுத்தும்போது விழுங்குவதில் சிரமம் ஏற்படலாம்.
தைராய்டு கட்டிகள் வளர்ந்து மூச்சுக் குழாயை அழுத்தும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். மேலும் அவை வளர்ந்து சுற்றியுள்ள திசுக்களை அழுத்தி கழுத்தில் அதிக வலி ஏற்படும்.
தைராய்டு புற்றுநோய் கழுத்தில் உள்ள நிணநீர் கணுக்களுக்கு பரவக்கூடும். இதனால் கழுத்துப்பகுதி வீங்கி காணப்படும். சில நேரங்களில் தைராய்டு புற்றுநோய் எதிர்பாராத திடீர் எடை இழப்பை ஏற்படுத்தும்.
மேற்கண்ட அறிகுறிகள் சில சமயங்களில் தைராய்டு புற்றுநோயைக் குறிக்காது. இது மற்ற சில நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். எனவே, இந்த அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
தைராய்டு புற்று நோய்க்கான சிகிச்சைமுறை புற்றுநோயின் வகை, பரவி உள்ள அளவு, நோயாளியின் ஆரோக்கிய நிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். பெரும்பாலும் இதற்கு அறுவை சிகிச்சை முறைகளே பயன்படுத்தப்படுகின்றன. நேரடி அறுவை சிகிச்சை, ரேடியோ ஐசோடோப் சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சைகள் மூலமாக தைராய்டு புற்று நோய்க்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தைராய்டு புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். எனவே, கழுத்தில் முடிச்சு, குரல் கரகரப்பு, விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மூலமாக, தைராய்டு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்கலாம்.