Mullai flower https://www.indiamart.com
ஆரோக்கியம்

மருந்தாக உண்ண உகந்த பத்து மலர்கள்!

கோவீ.ராஜேந்திரன்

ழகிற்கும், வாசனைக்கும், சூடி மகிழவும் பயன்படும் பல மலர்கள் மகத்தான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன என்கிறது பழம் பெரும் மருத்துவ நூல்கள். மருந்தாக மலர்களை உள்ளுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் பாலில் கலந்து காய்ச்சியோ, தேனில் ஊற வைத்தோ சாப்பிட வேண்டும். மலர்களை மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது மாமிச உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய மலர்களை மட்டுமே மருத்துவ நலன்களுக்கு பயன்படுத்த வேண்டும். சில மலர்களை நிழலில் உலர்த்தி நீண்ட நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

ரோஜாப்பூ: மலர்களில் மகத்துவம் வாய்ந்த ரோஜாப் பூவை குல்கந்தாகச் செய்தும், பாலில் வேகவைத்து உலர்த்தி கஷாயம் செய்து சாப்பிடலாம். இந்த முறையில் சாப்பிட பித்த வாந்தி, வாய்ப்புண், மலச்சிக்கல், ஆசன வாயில் எரிச்சல், இரத்த பேதி குணமாகும் ரோஜாப் பூவை தொடர்ந்து சாப்பிட ஈரல், நுரையீரல், கருப்பை, குடல் மற்றும் ஆசன வாய் முதலிய உறுப்புகள் பலம் பெறுகின்றன.

இஞ்சி பூக்கள்: உண்ணக்கூடிய பூக்களில் இதுவும்ஒன்று. இஞ்சிச் செடியில் வளரும் இஞ்சி வேரின் அதே சுவை மற்றும் நறுமணத்தைக் கொண்டுள்ளன. பொதுவாக, பூக்கள் அரோமா தெரபியில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நீங்கள் அவற்றை பச்சையாக சாப்பிடலாம். உங்கள் சமையலில் பூக்களை இஞ்சி வேருக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இதில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி, இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. இது குமட்டலைக் குறைக்கும் மற்றும் பல் வலியைக் குறைக்கும்.

சூரியகாந்தி பூ: சூரியகாந்திச் செடியை தோட்டத்தில் வளர்த்தால் அந்தப் பகுதியில் உள்ள அசுத்தமான காற்று சுத்தமாகும். நல்ல எண்ணெயில் இம்மலர்களைப் போட்டு காய்ச்சி தைலமாகப் பயன்படுத்தி வந்தால் அடிக்கடி சளி பிடிப்பது குணமாகிறது. உடலில் இந்த தைலத்தை தேய்ப்பதால் வாத ரோக வலி, கணுக்கால் வீக்கம், கைகால் குடைச்சல் முதலியன குணமாகும். சூரியகாந்தியில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இதன் கசப்பான சுவை ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளது. ஆரோக்கியமான முடி மற்றும் சரும பராமரிப்பிற்கு இது உதவுகிறது.

தென்னம்பூ: தென்னை மரத்தின் பாளையிலுள்ள இளம் பூக்களைப் பறித்து அதனை இடித்துச் சாறு எடுத்து வேளைக்குக் கால் அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டால், உள் காய்ச்சல், பித்தம், விஷ காய்ச்சல் போன்றவை குணமாகும்.

புளியம்பூ: புளியம்பூவைத் துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவதால் ருசியின்மை, பசியின்மை, வாயுத் தொல்லைகள் போன்றவை குணமாகும். உடல் குளிர்ச்சி அடையும், வாய் குமட்டல் இருந்தால் சரியாகும்.

மல்லிகைப் பூ: மல்லிகை மலரில் ஜாதி மல்லிகை, குண்டு மல்லிகை, கொடி மல்லிகை, ஊசி மல்லிகை, குட மல்லிகை என்று பல வகைகள் உண்டு. ஏறக்குறைய எல்லாவற்றுக்கும் குணம் ஒன்றுதான். மல்லிகை வாசனை மூளைக்குச் சுறுசுறுப்பையும், கண்ணுக்கு குளிர்ச்சியையும் தரவல்லது. மல்லிகைப் பூவை நல்ல எண்ணெயில் போட்டு சூரிய ஒளியில் இரண்டு நாட்கள் வைத்திருந்து. அந்த தைலத்தை தலைக்கு தடவி வர தலைமுடி நன்கு வளரும்.

அல்லி மலர்

அல்லி மலர்: அல்லிப்பூவை கஷாயம் செய்து சாப்பிட அடங்காத தாகம், உடல் சூடு சரியாகும். ஆறாத ரணங்கள் மீது அல்லி மலர்களின் இதழ்களை வைத்துக் கட்டி வந்தால் விரைவில் ஆறிவிடும். அல்லி மலர்களை விளக்கெண்ணெய்யில் ஊற வைத்து இளம் சூடாக புற்றுநோய் புண்கள் மீது தடவி வர விரைவில் ஆறிவிடும்.

முல்லைப் பூ: ஊசி மல்லிகை எனும் முல்லைப் பூ நறுமணமும் மருத்துவ குணங்களும் கொண்டது. இதை உள்ளுக்குள் சாப்பிட வேண்டியதில்லை. இதன் நறுமணத்தை நாசி வழியாக நுகர்ந்தாலே போதும் மன நோய்கள் குணமாகும். உடல் உஷ்ணம் குறையும். மூளைக்கு உற்சாகத்தையும், பலத்தையும் தரும். வயிறு உப்புசம், மந்தம் குணமாகும்.

செம்பருத்திப்பூ: இம்மலரைக் கஷாயமாகவோ, பாலில் காய்ச்சியோ சாப்பிட இரத்த குறைவால் ஏற்படும் நோய்கள், உதிரப்போக்கு, உதிரக்கடுப்பு, சிறுநீரக நோய்கள் குணமாகும். இரத்த வாந்தி உடல் கொதிப்பு நோய்களுக்கு இப்பூவை பசுவின் பாலில் காய்ச்சி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் இரு மலர்களுக்குரிய இதழ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிலுள்ள மகரந்தக் காம்புகளை நீக்கி விட வேண்டும்.

சாமந்திப்பூ: இந்தியாவில் ஜென்டா என்று அழைக்கப்படும் சாமந்தி, கண்களுக்கு நன்மை பயக்கும் கரோட்டினாய்டு, லுடீனின் ஆற்றல் மையமாகும். இது கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் கண் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது. சாமந்தியை தேநீராக காய்ச்சி அல்லது குளிர்ந்த சாலட்களாக சாப்பிடலாம்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT