பஸ், கார் அல்லது ரயிலில் நீண்ட தொலைவு பயணம் செய்யும்போது சிலருக்கு கால்கள் நன்றாக வீங்கிக்கொள்வதை பார்த்திருப்போம். இதற்கான காரணத்தையும், அதற்கான தீர்வையும் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வண்டியில் பிரயாணம் செய்யும்போது ஒரே இடத்தில் தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் அல்லது கால்களை தொங்கப் போட்டுக் கொண்டு வந்தால், கால்களில் உள்ள இரத்தக் குழாயில் அழுத்தம் அதிகமாகிறது. இதனால் இரத்தக்குழாயில் இருந்து நீர் வெளியே வந்து திசுக்களில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்கிறது. இதன் காரணமாகத்தான் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பது அல்லது அமர்ந்திருப்பது, அதிகமான உடல் எடை, ஜீன்ஸ் பேண்ட் அதிக நேரம் அணிந்திருப்பது கூட கால்களில் நீர் சேர்வதற்குக் காரணமாக இருக்கலாம்.
சிறுநீரகம், இதயத் தசைகள் பாதிப்பு, புற்றுநோய்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவு, காலில் உள்ள இரத்தகுழாயில் இருந்து இதயத்திற்கு இரத்தம் வந்து சேருவதில் பிரச்னை, ஹார்மோன் பிரச்னை, நிணநீர் மண்டல பாதிப்பு, சிறுநீரக வடிக்குழாயில் பிரச்னை, கர்ப்பக்காலம், அதிக உப்புள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, காலில் புண், மூட்டு வீக்கம், குளிர்பானம் அடிக்கடி சாப்பிடுவது போன்ற காரணங்களால் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது.
எனவே, பயணத்தின்போது கால்கள் வீங்காமல் இருக்க, அதிக உப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். கால்கள் நன்றாக அழுத்தக்கூடிய காலுறைகளைப் பயன்படுத்துங்கள். கால்களை ஒரே நிலையில் நீண்டநேரம் தொங்கப்போட்டுக் கொண்டு வரக் கூடாது. உணவில் நிறைய காய்கறிகள், பழங்கள், தண்ணீர் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். நொறுக்குத் தீனிகளான சோடா, சிப்ஸ், குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
வீட்டில் இருக்கும்போது கால்களை தலையணை மீதோ அல்லது மேஜை மீதோ வைத்துக்கொள்வது சிறந்தது. கால்களை வெறுமனே வைக்காமல் ஆட்டிக் கொண்டேயிருக்கலாம். இதனால் கால் வீக்கம் வராமல் தப்பிக்கலாம்.
சிலருக்கு பகலில் கால் வீங்கியிருக்கும். ஆனால், இரவு தூங்கி காலையில் எழுந்தால் வீக்கம் வடிந்துவிடும். இது போலவும் சிலருக்கு நடப்பதுண்டு. இப்படி ஆவதால் பெரிய பிரச்னையில்லை. எனினும், கால் வீக்கம் ஏற்பட்டு மூன்று நாட்கள் கழித்தும் வடியவில்லை என்றால், உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசிப்பது நல்லதாகும். இந்த டிப்ஸையெல்லாம் பின்பற்றி கால் வீக்கத்தில் இருந்து குணமாகி ஆரோக்கியமாக வாழுங்கள்.