வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிப்பது அனைவருக்கும் முக்கியம், குறிப்பாக, வெளியே சென்று ஓடி ஆடி வேலை செய்யும் ஆண்கள் வயதாகும்போது எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நமது எலும்புகளே ஒட்டுமொத்த உடலுக்கான கட்டமைப்பின் ஆதரவை வழங்குகின்றன. முக்கிய உறுப்புகளைப் பாதுகாத்து அத்தியாவசிய தாதுக்களை சேமிக்கின்றன. இந்த பதிவில் ஆண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வலுவான எலும்பைப் பராமரிக்க உதவும் சில பயனுள்ள குறிப்புகளைப் பார்க்கலாம்.
கால்சியம் நிறைந்த உணவுகள்: எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க கால்சியம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பால், சீஸ் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களாகும். உங்களுக்கு பால் பொருட்கள் பிடிக்காது என்றால் கீரைகள், காய்கறிகள், டோஃபு மற்றும் பாதாம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். ஆண்களுக்கு தினசரி 1000 முதல் 1200 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது. எனவே இதை நோக்கமாகக் கொண்டு உங்களது உணவை முறையாக எடுத்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் டி: கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி அவசியம். சூரிய ஒளி உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிப்பதால், காலையில் இயற்கையான சூரிய ஒளியைந் பெற சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். மேலும், கொழுப்பு நிறைந்த மீன், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தானியங்கள் போன்றவற்றில் விட்டமின் டி உள்ளன. எனவே இவற்றையும் உணவாக சாப்பிடலாம்.
உடற்பயிற்சி: தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள், பலு தூக்குதல், ஜாகிங், நடைபயணம் அல்லது ஏதேனும் விளையாட்டு போன்ற விஷயங்கள் உங்களது எலும்பு வளர்ச்சியைத் தூண்டி அதன் அடர்த்தியை அதிகரிக்க உதவும். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஆல்கஹால் மற்றும் காஃபினைக் கட்டுப்படுத்தவும்: ஆல்கஹால் மற்றும் காஃபின் போன்றவை எலும்பு ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அதிகப்படியான மது உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள். மேலும் தினசரி அதிகமாக காபி, தேநீர் போன்ற பானங்களைக் குடிப்பதையும் குறைத்துக் கொள்ளவும்.
புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்: புகைப்பிடித்தல் எலும்பு அடர்த்தி குறைவதற்கும், எலும்பு முறிவுகள் அதிகரிப்பதற்கும் காரணமாகிறது. நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்த அதை உடனடியாக நிறுத்துங்கள்.
ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்: எடை குறைவாக இருப்பது அல்லது அதிக எடையுடன் இருப்பது எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும். சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாக ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம். உங்களது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மூலமாக, எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
இதுபோக உங்களுக்கு வயதாக வயதாக எலும்புகளின் அடர்த்தி குறையும் வாய்ப்புள்ளது என்பதால், உங்களது எலும்பு ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம். எனவே குறிப்பிட்ட வயதுக்கு பிறகு உங்களது எலும்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள மருத்துவரிடம் ஆலோசிக்கவும். குறிப்பாக, ஆஸ்டியோபோரோசிஸ் குடும்ப வரலாறு உள்ளவர்கள், எலும்பின் நிலை குறித்த ஆய்வை கட்டாயம் மேற்கொள்வது நல்லது.