Triphala- Thirikadugam 
ஆரோக்கியம்

திரிபலா - திரிகடுகம் இரண்டும் ஆரோக்கியத்தின் அச்சாணிகள்!

ஆர்.வி.பதி

யற்கை மருத்துவத்தில் திரிபலாவும் திரிகடுகமும் நமக்குத் தரும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் இவற்றின் மருத்துவ நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியமான ஒரு மருந்து திரிபலா. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என்ற மூன்று இயற்கை மூலிகைகளை குறிப்பிட்ட அளவில் கலந்து உருவாக்கப்படுவதே திரிபலா எனப்படுகிறது. ‘சர்க சம்ஹிதா’ என்ற ஆயுர்வேத நூலில் திரிபலாவின் அற்புதமான பயன்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நமது உடலானது முதுமையை அடையாமல் எப்போதும் இளமையுடன் திகழ திரிபலா மிகவும் உதவுகிறது. நமது உடலுக்குள் ஒவ்வொரு நொடியும் நோய்க்கிருமிகள் உள்ளே நுழைந்த வண்ணம் உள்ளன. இதை எதிர்க்கும் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் திரிபலா பயன்படுகிறது.

திரிபலா ஆன்டி ஆக்ஸிடெண்ட்டாகவும் செயல்பட்டு நமது உடலை நோய்கள் தாக்காதவாறு காக்கிறது. ஜீரணக்கோளாறுகளை சரிசெய்யும் ஆற்றலும் உணவை ஜீரணிக்க உதவும் கல்லீரல் உற்பத்தி செய்யும் பைல் என்ற திரவத்தை போதிய அளவில் சுரக்கச் செய்வதிலும் உணவுப் பாதையில் தேவையான கார அமில நிலையை போதிய அளவில் இருக்கச் செய்வதிலும் திரிபலா பெரும் பங்கு வகிக்கிறது.

நமது உடலுக்குள் சேரும் தேவையற்ற கெட்டக் கொழுப்புக்களைக் கரைக்கும் ஆற்றல் பெற்றது திரிபலா. எனவே, இதய நோய்கள் நம்மை அண்டதவாறு காக்கும் சிறப்பான பணியையும் இது செய்கிறது. நமது உடல் பருமனையும் திரிபலா குறைக்கும்.

நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் இருக்கவே கூடாது. மலச்சிக்கல் ஏற்படாதவாறு செய்வதில் திரிபலா முக்கியப் பங்கு வகிக்கிறது. இதுமட்டுமின்றி உடலிலிருந்து தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதிலும் திரிபலா சிறப்பாக செயலாற்றுகிறது. மொத்தத்தில் திரிபலா என்பது தேவாமிர்தத்திற்கு இணையானது என்றால் அது மிகையாகாது.

சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மூன்றும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்ந்தால் அது ‘திரிகடுகம்’ என்று அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் திரிகடுகம் மிகவும் போற்றப்படுகிறது. இந்த மூன்றுமே அரிய மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. ‘சுக்குக்கு மிஞ்சின மருந்துமில்லே, சுப்ரமணியனுக்கு விஞ்சின சாமியுமில்லே’ என்பது ஒரு பிரபலமான பழமொழி. மருத்துவ குணத்தில் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது இந்த சுக்கு. இஞ்சியே சுக்காக மாற்றப்படுகிறது. இஞ்சியின் தோலைச்சீவி பசுமாட்டு சாணத்தை எரித்து சாம்பல் தயாரித்து அதில் முக்கிக் காயவைத்து சுக்கு தயாரிக்கப்படுகிறது.

மிளகில் கருமிளகு, வெள்ளை மிளகு, வால்மிளகு என மூன்று வகையான மிளகுகள் உள்ளன. மிளகு பல வகையான நோய்களுக்கும் ஒரு சிறந்த மருந்து என்றால் அது மிகையாகாது.. இரத்தக் குழாய்களுக்குள் படியும் கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் மிளகிற்கு உண்டு. கரோனரி ஆர்டெரியல் டிசீஸ் எனப்படும் இரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு மிளகு ஒரு சிறந்த மருந்து என்று ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது. மிளகு காரத்தன்மை வாய்ந்தது. இதில் மாங்கனீஸ், இரும்புச்சத்து, நார்சத்து மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைய இருக்கின்றன. மிளகு உணவு செரிமானத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் உமிழ்நீரை அதிகம் சுரக்கச் செய்கிறது. பசியைத் தூண்டி உணவை நன்கு செரிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. இருமலை மிளகு மிக சுலபமாக குணப்படுத்திவிடும்.

தினமும் மூன்று மிளகை உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கத்தை கடைபிடியுங்கள். நம்மில் பலர் பொங்கலில் சேர்க்கப்படும் மிளகை மிகவும் நிதானமாக பொறுக்கி எடுத்து கீழே போட்டு விட்டு சாப்பிடுவதை நாம் தவறாது கடைபிடிக்கும் வழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். இது மிகவும் தவறான செயல். இதைத் தவிர்க்க மிளகை நன்கு பொடிசெய்து உணவில் போட்டு விடலாம்.

திப்பிலி துவர்ப்புச் சுவை உடையது. திப்பிலி உணவை எளிதில் ஜீரணிக்கும் மருத்துவ குணம் உடையது. மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் ஆற்றல் திப்பிலிக்கு உண்டு. சுவாசக் கோளாறுகள் வயிற்றுப்புண் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது இந்த திப்பிலி. திரிபலா, திரிகடுகம் இரண்டையும் அளவாகப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT