அல்சர் என்பது வயிறு, சிறுகுடல் அல்லது உணவுக் குழாயின் உள்பகுதியில் ஏற்படும் புண்கள் ஆகும். இப்புண்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், சில பழக்கவழக்கங்களால் அல்சர் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. இந்த பதிவில் வாயிலாக அல்சரை ஏற்படுத்தக்கூடிய அல்லது அதிகரிக்கக் கூடிய 5 பொதுவான பழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அதிகப்படியான மருந்துகளின் பயன்பாடு: ஸ்டெராய்டுகள் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பொதுவாக வலியைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் இந்த மருந்துகளை நீண்ட கால அடிப்படையில் எடுத்துக் கொள்ளும்போது புண்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே இத்தகைய மருந்துகளை நீண்ட காலத்திற்கு எடுக்க நேர்ந்தால், சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
புகைப்பழக்கம்: அதிகப்படியான புகையிலை பயன்பாடு பல்வேறு சுவாச மற்றும் இதய நோய்களுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல் புண்கள் உருவாகும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. புகைப் பிடித்தல் இரைப்பை அமிலத்தின் உற்பத்தியில் தலையிட்டு, வயிற்றின் பாதுகாப்பு அமைப்பை பாதிக்கிறது. மேலும் புகையிலை பயன்பாடு வயிற்று அமிலத்தின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் தசைகளை வழிவிலக்க செய்கிறது. இதனால் அமிலம் வயிற்றில் புண்களை ஏற்படுகிறது.
அதிகப்படியான மது அருந்துதல்: அதிகப்படியான மது அருந்துதல் வயிற்றின் உட்பகுதியை எரிச்சலடையச் செய்து வயிற்றில் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இதனால் குடல் தசைகள் சேதமடைய வாய்ப்புள்ளது. நீண்டகால ஆல்கஹால் நுகர்வு இரைப்பை அழற்சிக்கு வழி வகுத்து புண்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே மிதமான அளவிலேயே மது அருந்துவது நல்லது.
மோசமான உணவுப் பழக்கம்: அதிக காரமான உணவுகள், கேஃபின் மற்றும் கார்பனேட்டட் பானங்களை அதிகமாகப் பருகுவதால் அல்சர் பாதிப்புகள் ஏற்படலாம். உணவை தவிர்ப்பது அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றால் வயிற்று அமில உற்பத்தி அதிகரிக்க வழிவகுக்கும். எனவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரியான உணவைக் கடைப்பிடித்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பழக்கங்களை பராமரிப்பது அவசியம்.
நாள்பட்ட மன அழுத்தம்: மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றால் செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நாள்பட்ட மன அழுத்தம் வயிற்றில் அமிலத்தின் உற்பத்தியை அதிகரித்து வயிற்றுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிப்பதால், புண்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உடற்பயிற்சி தியானம் மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதால், மன அழுத்தத்தை நிர்வகித்து ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்கலாம்.