ரஷ்யாவின் சாமாகண்ட் என்ற இடத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆல்பக்கோடா பழம் கருமை நிறத்தில் அதிக புளிப்பு சுவை கொண்டது. இதில் அதிகளவில் வைட்டமின் ஏ, பி1, பி2, சி போன்றவையும், இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தையும் கொண்டுள்ளது. காய்ச்சலினால் வாய் கசப்பு, குமட்டல் ஏற்படும்போது ஒரு ஆல்பக்கோடா பழத்தை வாயில் போட்டு சப்பினால் எல்லாம் மறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
நாக்கு ருசியிழந்தவர்கள், உடல் எரிச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல், சிரங்கு, உடல் சூடு உள்ளவர்கள் ஆல்பக்கோடா பழத்தை தண்ணீரில் ஊறவைத்து ஜூஸ் பிழிந்து அதனுடன் பன்னீர், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி பருக வேண்டும். இதையே உடல் எரிச்சல், கண் எரிச்சல், வாய்ப்புண், மலச்சிக்கல் ஏற்படும்போதும் பருகி குணம் அடையலாம்.
ஆப்பிள் பழம் ஒன்றை தோலுடன் தின்பவருக்கு கலோரி 63 ஆற்றல், புரோட்டீன் 0.1 கிராம், கொழுப்பு 0.8 கிராம், மாவுச்சத்து 12.8 கிராம், கால்சியம் 10 மி. கிராம், பாஸ்பரஸ் 10 மி. கிராம், இரும்பு சத்து 1 மி.கிராம், வைட்டமின் ஏ 130 மி.கிராம், வைட்டமின் சி 1 மி.கிராம். என்ற அளவில் கிடைக்கும். காலையில் ஆப்பிள் சாப்பிட வயிறு சுத்தமாகி வயிற்றில் வலி இருந்தால் சரியாகும். இரத்த விருத்தியாகும், பல் நோய்கள் குணமாகும். நரம்பு நோய்கள் குணமாகும், மூளையின் ஆற்றலை அதிகரிக்கவும் உதவும். தூக்கம் வராமல் அவதிப்படுகிறவர்கள் பசும் பாலுடன் ஆப்பிள் ஜூஸ் கலந்து இரவில் சாப்பிட்டு விட்டு படுத்தால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள். தினமும் மாம்பழச்சாறு பருகி வந்தால் சுகமான தூக்கம் வரும். மாம்பழச்சாற்றில் சுக்கை தட்டிப் போட்டுச் சாப்பிட்டு வந்தால் களைப்பு ஏற்படாது. களைப்பில் வரும் மயக்கமும் வராது. வெயில் காலத்தில் மாம்பழச்சாற்றை துணியில் வடகம் போல வார்த்து காயவைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வடகம் நா வறட்சி, குமட்டல், பித்தநீர் ஊறல், வாத முடக்கம் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
உடலில் சூடு ஏறும்போது சிலருக்கு வயிற்றுவலி வந்து விடும். அதை தவிர்க்க வெறும் வயிற்றில் சாத்துக்குடி சாற்றை குடிக்க சரியாகும். சாத்துக்குடி சாற்றை தேனுடன் பருகி வந்தால் புகைப்பிடிப்பதால் வரும் இருமல் குணமாகும்.
பொதுவாக, திராட்சை சாறு நன்கு உமிழ்நீரை சுரக்க உதவுகிறது. இதனால் செரிமானம் சரியாகும். திராட்சை பழச்சாறு இரத்த சுத்தமாகவும், ஹார்மோன் சுரப்பு சரியாகவும் உதவும். இதன் பழச்சாற்றில் ரோஜா இதழ்களை ஊறப்போட்டு வெயிலில் வைத்து பிறகு பருகினால் இதயம் வலுவடைவதுடன் இதய சம்பந்தமான நோய்களும் நீங்கும். திராட்சை சாறுடன், திராட்சை இலை சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு வரும் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் பழங்களில் அன்னாசி பழத்திற்கு சிறப்பான இடம் உண்டு. சிறுநீரகக் கற்களை கரைக்கவும், வயிற்றில் வளரும் பூச்சிகளை அழிக்கவும் அன்னாசி பழச்சாறு சிறந்த மருந்து.
ஒரு கிளாஸ் இளஞ்சூடான வெந்நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், வாய் நாற்றம் போன்றவை சரியாகும். எலுமிச்சை பழச்சாற்றை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் கருத்த தேகம் நாளாக நாளாக நிறம் மாறும், எலுமிச்சை பழச்சாறு காலரா நோயை தடுக்கும் மருந்தாக செயல்படுகிறது.
எலுமிச்சை பழச்சாறில் நல்லெண்ணெய் சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு நீங்கிவிடும். சிறுநீர் கழித்தலில் சிரமம் இருக்காது. அடிபட்டோ, இரத்த காயம் ஏற்பட்டோ இரத்தம் கொட்டினால் உடனே எலுமிச்சை பழத்தை அறுத்து அதன் சாற்றை காயத்தில் போட்டால் இரத்த பெருக்கு உடனே நின்று விடும். எலுமிச்சைச் சாறும், ஆலிவ் எண்ணெய்யும் சம அளவு கலந்து குடித்தால் மீன் எண்ணெயில் கிடைக்கும் சக்தி கிடைக்கும்.
எலுமிச்சை சாறு, இஞ்சி, சிறிதளவு உப்பு கலந்து சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால் உணவின் சுவை அதிகரிக்கும். எலுமிச்சை பழச்சாறில் ஒரு முட்டையை உடைக்காமல் 24 மணி நேரம் அப்படியே போட்டு வையுங்கள். மறுநாள் அந்த முட்டையை எடுத்து அடித்து கலக்கி பருகுங்கள். இது சில வகை ஆஸ்துமா நோய்களை குணப்படுத்தும்.
அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட சப்போட்டா மரத்தின் பிஞ்சு, காய், பழம் அழகிய மூன்றும் மருந்தாக பயன்படுகிறது. தினமும் காலை, மாலை நேரத்தில் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் பசும் பால் சாப்பிட்டு வர காச நோயின் தீவிரம் குறையும். சோர்வாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், முதியோர், நீண்ட கால நோயாளிகளுக்கு நல்ல ஊட்டம் தரும் பழம் சப்போட்டா. புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது.