தினசரி பல வகையான காய்கறிகளை உள்ளடக்கிய சீரான உணவை உட்கொள்வது நமது ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கியமானது. இருப்பினும் இரவு நேரத்தில் நாம் எதை உட்கொள்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாகவே காய்கறிகள் சத்தானவை என்றாலும் இரவு நேரத்தில் சில காய்கறிகளை சாப்பிடுவது அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். இதனால் உங்களது தூக்கம் தடைபடலாம். இந்த பதிவில் எதுபோன்ற காய்கறிகளை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
பொதுவாகவே இரவு நேரங்களில் சிலுவைக் காய்கறிகள் என சொல்லப்படும் பிரக்கோலி, காலிபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அவற்றில் வைட்டமின்கள் நார்ச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிரம்பி இருந்தாலும், அவை வாயுத் தொல்லையை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இந்த காய்கறிகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால், இரவு நேரத்தில் சாப்பிடுவது உங்களுக்கு ஜீரணக் கோளாறை ஏற்படுத்தலாம்.
காரமான மிளகுத் தூள், மிளகாய் தூள் போன்றவை உணவுக்கு சுவையைக் கூட்டுகிறது என்றாலும், உறங்கும் நேரத்தில் அவற்றை உட்கொள்வதால் உங்களது தூக்கம் சீர்குலையும். காரமான உணவுகள் நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் அமில ரிப்ளக்ஸ்களைத் தூண்டலாம். எனவே இரவு நேரங்களில் அதிக காரம் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.
வெங்காயம் மற்றும் பூண்டு எல்லா உணவுகளிலும் பிரதானமாக சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சுவை நன்றாக இருந்தாலும் சில நபர்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிப்ளக்ஸ் போன்ற செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். இந்த காய்கறிகள் செரிமான அமைப்பை எரிச்சலூட்டி, இரைப்பைக் கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக இவற்றை நீங்கள் பச்சையாக உட்கொண்டால் இரவில் பல தொந்தரவுகளை சந்திக்க நேரிடலாம்.
என்னதான் தக்காளி ஒரு சத்தான காய்கறியாக இருந்தாலும் அது அதிக அமிலத்தன்மை கொண்டதாகும். குறிப்பாக இரவு நேரங்களில் தக்காளி அல்லது தக்காளி சார்ந்த சாஸ்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு அல்சர் பாதிப்பு இருந்தால் இரவு நேரங்களில் அதிக தக்காளி எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.
ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க நார்ச்சத்து அவசியம் என்றாலும் வெண்டைக்காய், கோல் போன்ற நார்ச்சத்து அதிகமிக்க காய்கறிகளை இரவு நேரத்தில் அளவாகவே உட்கொள்ளுங்கள். இவற்றை அதிகமாக உட்கொள்வது, வயிறு உப்புசம், வாயு மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
இனி இரவு நேரங்களில் மேலே குறிப்பிட்டுள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இவற்றைத் தவிர்த்து மற்ற உணவுகளை உங்கள் விருப்பம் போல சாப்பிடலாம்.