எந்த கீரைக்கும் இல்லாத ஒரு சிறந்த குணம் வெந்தயக் கீரைக்கு மாத்திரம் உண்டு. அது என்னவெனில், இது விளையும் நிலத்தில் உள்ள நைட்ரஜன் சத்தை இது பாதுகாக்கிறது. மேலும், வேறு ஒரு சிறந்த ரசாயன பொருளாக நைட்ரஜனை மாற்றி மற்ற செடிகளுக்கும் வழங்குகிறது. ஆகவேதான் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக இதனை வளர்த்தால் பழ மரங்கள் மிகச் செழிப்பாக வளருகின்றன. இவை தரும் பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சிறுநீரகக் கோளாறுகளுக்கு மற்ற கீரைகளை விட வெந்தயக்கீரை பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. இந்தக் கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்தும், சப்பாத்திகளில் சேர்த்து மேத்தி பரோட்டாவாக செய்து சாப்பிட்டும் பலனடையலாம்.
நீரிழிவைக் கட்டுப்படுத்துவதிலும் இந்தக் கீரைக்கு பெரும் பங்கு உண்டு. வடமாநிலத்தவர்கள் இந்தக் கீரையை விளைவிப்பதில் முன்னிலையில் இருக்கிறார்கள்.
வெந்தயச் செடியின் இலைகளை மாத்திரமே உண்ண வேண்டும். தண்டும், காயும் உணவாப்க பயன்படாது. இதில் வைட்டமின் ஏ சத்து மிகவும் அதிகமாகவும், வைட்டமின் சி சத்து அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளன.
இந்தக் கீரையை வேக வைத்து தேன் விட்டு கடைந்து உண்டால் மலச்சிக்கல் தீரும். குடல் புண்கள் குணமாகும். வயிற்று எரிச்சல் தீரும். இக்கீரையை பொடியாக அரிந்து, நெய்யில் வதக்கி, அதனுடன் கோழி முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு கலந்து சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிச் சாப்பிட இடுப்பு வலி குறையும்.
இக்கீரையை வேக வைத்து வெண்ணெயில் வதக்கி உண்டால் பித்தத்தால் உண்டாகும் கிறுகிறுப்பு, தலைச்சுற்றால், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். வறட்டு இருமலையும் இது குணமாக்கும். இக்கீரையுடன் அத்திப்பழம், திராட்சை, குடம்புளி ஆகியவற்றை சேர்த்து கசாயம் செய்த, தேன் கலந்து உண்டால் மூச்சடைப்பு, மூல நோய், குடல் புண் ஆகியவை நீங்கும்.
இக்கீரையை வதக்கி வாதுமைப் பருப்பு, கசகசா, கோதுமை போன்றவற்றை சேர்த்து பால் விட்டு அரைத்து, நெய் விட்டு கிளறி உண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் உண்டாகும். இக்கீரையை அரைத்து, நெய் சேர்த்து கிளறி முதல் கைப்பிடி உணவாக உண்டால் வாய்ப்புண்கள் ஆறிப்போகும்.
இந்தக் கீரையுடன் அவரைக்காயையும் பொடியாக அரிந்து நெய்விட்டு வதக்கி உண்டால் கசப்பு தெரியாது. சாப்பிட ருசியாக இருக்கும். மேலும், இக்கீரையுடன் சீமை அத்திப்பழத்தை சேர்த்து அரைத்து கட்டிகளின் மேல் பத்து போட, அவை பழுத்து உடையும். இவை மட்டுமின்றி, இது நல்ல மாட்டுத் தீவனமாகவும் பயன்படுகிறது.
டெல்லியில் இதை கடுகு கீரையுடன் சேர்த்து கடைந்து உன்பார்கள். இக்கீரை சிறந்த மலமிளக்கி. ஜீரண சக்தியை பலப்படுத்துவதற்கு மருந்தைப் போல் செயல்படும். கண் பார்வையை சரிப்படுத்தும், சொறி, சிரங்கு குணமாகும்.
இதன் கசப்புத்தன்மைக்காகவே நம் தமிழகத்தில் இதை அதிகம் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் நீரிழிவுக்காரர்கள் மற்றும் சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் இதை அதிகம் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.
இப்படி வெந்தயக் கீரை அதனோடு சேருகிற ஒவ்வொரு பொருளைப் பொருத்தும் வெவ்வேறு பலனைத் தருவதால் வட மாநிலத்தவர்கள் இதை மிகவும் விரும்பி உண்பர். நாமும் அதன் அருமையை உணர்ந்து செயல்படுத்தி பயன் பெறுவோம்!