நமது உடல் உறுப்புகளில் கண்கள் மிகவும் சிக்கலான மற்றும் உணர்திறன் வாய்ந்த உறுப்பு என்பதால் அவற்றைப் பாதுகாப்பதில் அதிக கவனம் காட்டுவது அவசியம். அனைத்துத் துறைகளிலும் தற்போது கணினியின் பயன்பாடு அத்தியாவசியமாகி விட்டது. கணினியின் ஒளித்திரையை அதிக நேரம் பார்க்கும் நமது கண்களை வைட்டமின் உணவுகள் எப்படிப் பாதுகாக்கின்றன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
வைட்டமின் ஏ: கண்களை ஈரப்பதமாக வைத்திருப்பதிலும் விழித்திரை சிதைவைத் தடுப்பதிலும் முக்கியப் பங்காற்றும் வைட்டமின் ஏ சத்து கேரட், புரோக்கோலி, கீரை, இலை காய்கறிகள், மஞ்சள் காய்கறிகள், மிளகுத்தூள், பூசணி மற்றும் முட்டை ஆகியவற்றில் அதிகம் உள்ளது.
வைட்டமின் பி: வைட்டமின் பி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றது. கார்னியா, கிளெகோமா பாதிப்பைத் தடுக்கவும் உதவும் வைட்டமின் பி இலை காய்கறிகள், பருப்பு வகைகள், பால், தயிர் மற்றும் அசைவத்தில் கோழி, வான்கோழி, சால்மன், கல்லீரல் மற்றும் பன்றி இறைச்சியில் அதிகம் உள்ளது.
வைட்டமின் சி: வைட்டமின் சி கண்புரை மற்றும் வயது தொடர்பான விழித்திரை சிதைவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. வைட்டமின் சி பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, கிவி, மாம்பழம், அன்னாசி, பப்பாளி, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றிலும் காய்கறிகளில் புரோக்கோலி, காலிஃபிளவர், கீரை, உருளைக்கிழங்கு, டர்னிப், முட்டைக்கோஸ், கீரைகள் மற்றும் தக்காளி ஆகியவற்றில் அதிகம் உள்ளது.
வைட்டமின் டி: வைட்டமின் டி அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் வறட்சி, கண்புரை உருவாக்கம் மற்றும் விழித்திரை சிதைவு ஆகியவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. இது முட்டையின் மஞ்சள் கரு, பசும் பால், சோயா பால், மீன் எண்ணெய் ஆகியவற்றில் அதிகம் உள்ளது.
வைட்டமின் ஈ: வைட்டமின் ஈ கண்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாத்து ஆரம்ப கால கண்புரை உருவாக்கம் மற்றும் விழித்திரை சிதைவை பாதுகாக்கிறது. வைட்டமின் ஈ வெண்ணெய், காய்கறிகள், கொட்டைகள், சூரியகாந்தி மற்றும் சோயா பீன் எண்ணெய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. மேலும், ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு அமிலம் உலர் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக கண்ணீரை உருவாக்க உதவுவதால் ஒமேகா 3 நிறைந்த மீன், ஆளி விதை, சியா விதைகள், சோயா, கொட்டைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை நம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.