உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய சப்ளிமெண்ட்ஸ் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் அவசியம். இது பல நோய்கள் மற்றும் பிரச்னைகளில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. உடல் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு என்று நம்மில் பலர் உணவுடன் சில மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அது டாக்டர்கள் பரிந்துரைபடியோ அல்லது தாமாகவோ. வைட்டமின் மாத்திரைகளால் நன்மைகள் அதிகமாக இருந்தாலும் அதனால் பக்க விளைவுகள் பலவும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள். அதிகமாக சாப்பிட்டால் எவ்வளவு தீமைகள் என்பதை பற்றி இங்கிலாந்து உணவு ஆலோசனை கமிட்டி வெளியிட்ட பட்டியல் இது.
பார்வை கோளாறுகளை தவிர்க்க எடுத்துக்கொள்ளப்படும் வைட்டமின் ஏ ( பீட்டா கரோட்டின்). இதன் தினசரி தேவை 6 மைக்ரோ கிராம். தினசரி உடலில் 7000 மில்லி கிராமுக்கு மேல் சேர்ந்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். உடலில் சேரும் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ யினால் எலும்பு மெலிவு நோய் வரும் என்கிறார்கள் அமெரிக்க முடக்குவாத நோய் ஆய்வாளர்கள்.
வைட்டமின் ஏ: இதன் தினசரி தேவை 900 மைக்ரோ மில்லி கிராம். தினசரி அளவு 3000 மைக்ரோ மில்லி கிராமிற்கு மேல் போனால் ஈரல் பாதிப்பு, எலும்பு மற்றும் பார்வை பாதிப்பு வரும். கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ சிக்கல் ஏற்படும்.
கர்ப்பிணி பெண்களுக்கு போலிக் அமிலம் உடனே உணவின் மூலம் கிடைக்காது. அவர்களுக்கு போலிக் அமிலம் வைட்டமின் மாத்திரைகள் தேவைப்படும். வைட்டமின் பி (போலிக் அமிலம்) இதன் தினசரி தேவை 200 மைக்ரோ மில்லி கிராம். இதன் தினசரி தேவை 4000 மைக்ரோ மில்லி கிராமுக்கு மேல் சென்றால் நரம்பு மண்டல பாதிப்பை ஏற்படுத்தும்.
வைட்டமின் பி 6: இதன் தினசரி தேவை 0.9 முதல் 1.9 மி. கிராம். இதற்கு மேல் 14 மில்லி கிராம் எடுத்துக் கொள்ள நரம்பு பாதிப்பு, தசை பிடிப்பு ஏற்படும் என்கிறார்கள். எலும்பு பலம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் வைட்டமின் பி7 ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு 30 mcg. போதுமானது. புதிய செல்கள் உருவாக்கம், சில கொழுப்பு அமிலங்களை உடைக்க வழங்கப்படும் சப்ளிமென்ட் வைட்டமின் பி 12. இது அன்றைய தேவை 2.4 mcg மட்டுமே. அளவுக்கு அதிகமான பி12 வைட்டமின் மாத்திரைகள் சிறுநீரின் மூலம் வெளியேறும். எனினும் தலைச்சுற்றல் பிரச்னை ஏற்படலாம்.
வைட்டமின் சி: ஆன்டி ஆக்ஸிடென்ட் குறைவு, கொலின் உருவாக்க, செரடோனின் அதிகரிக்க வழங்கப்படும். இதன் தினசரி தேவை 75 முதல் 90 மில்லி கிராம். இதன் அளவு தினசரி 2000 மி. கிராமிற்கு மேலே போனால் வாயு தொந்தரவு, டயோரியா, வயிறு உப்புசம் ஏற்படும். வைட்டமின் சி மாத்திரைகளில் மற்ற மாத்திரைகளை விட பக்க விளைவுகள் குறைவு. எனினும் அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது.
வைட்டமின் ஈ: ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகரிக்க, செல்கள் வளர்ச்சிக்கு உதவும் இதன் தினசரி தேவை 7முதல் 15 மி. கிராம். இதன் அளவு 1000 மி. கிராமிற்கு மேலே போனால் தலைவலி, களைப்பு, இரட்டை பார்வை, தசை பலவீனம். செரிமானக் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். வைட்டமின் ஈ மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால் அது இரத்தம் உறைதல், இரத்தக்கசிவு பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
வைட்டமின் டி: பல உடல் நலக்குறைவு, எலும்பு பலமின்மைக்கு வழங்கப்படும் சப்ளிமென்ட் இது. இதன் தேவை ஆண்களுக்கு 15 mcg, பெண்களுக்கு 20 mcg. அதிகபட்ச அளவு 50 mcg. இது அதிகமாகும்போது உடலில் நச்சுத்தன்மை மற்றும் எடை இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
நமது உடலானது உண்ணும் உணவில் இருந்து தேவையான வைட்டமின்களை பிரித்து எடுத்துக் கொள்கிறது. எனவே, மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடக் கூடாது. இது கவலைக்குரிய விளைவுகளை உருவாக்கலாம். அதிகப்படியான அளவு எடுத்துக் கொள்பவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளதாக நாஸ்டர்டாம் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.