உலகில் இப்போது ஆரோக்கியமற்ற உணவுகளால் உடல் பருமன் பலருக்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றால் கூட உடல் பருமனை குறைக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு நீர் நடை மிகுந்த பலனைக் கொடுக்கும். உடல் பருமனை குறைக்கும் நீர் நடை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
உடல் எடையை விரைவாகக் குறைப்பதற்கு வாட்டர் வாக்கிங் ஒரு சுலபமான வழியாகும். தண்ணீரில் நடக்கும்போது முழு உடலும் ஒன்றாக வேலை செய்வதால் பலன் நிச்சயம் உண்டு. ஆனால், தண்ணீரில் நடப்பதற்கு நிறைய முயற்சி தேவை. நீர் நடை பயிற்சி மேற்கொள்வதால் மன ஆரோக்கியம் மட்டுமன்றி, மனச்சோர்வு, பதற்றம் ஆகியவையும் குறைவதாக பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
நீர் நடையை சரியாகச் செய்யாவிட்டால் கடுமையான சோர்வு ஏற்படக்கூடும் என்பதால் சில விஷயங்களை கவனமாக செய்ய வேண்டும். முதலில் தண்ணீரில் நடக்கும்போது விறுவிறுப்பாக நடக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் நடக்க முயற்சி செய்யும் தண்ணீரின் அளவு இடுப்பு வரை அல்லது மார்பு வரை கூட இருந்தாலும் விறுவிறுப்பைக் கைவிடக் கூடாது.
நீர் நடைப்பயிற்சி செய்ய கடற்கரையையோ அல்லது நீச்சல் குளத்தையோ தேர்ந்தெடுத்து குறைந்தது ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் கண்டிப்பாக நீர் நடைப்பயிற்சி செய்ய, விரைவில் உடல் பருமன் குறைவது கண்கூடு.
நீர் நடைப்பயிற்சியின் ஆரோக்கிய நன்மைகள்:
எடை இழப்பு: காற்றை விட நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் வாட்டர் வாக் செய்யும்போது கலோரி அதிகமாக செலவாகி எடை குறைகிறது. தரையில் நடப்பதை விட, தண்ணீரில் நடப்பதால் ஒரு மணி நேரத்திற்கு 460 கலோரிகள் எரிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆதலால் எடை இழப்பிற்கு வாட்டர் வாக் மிகச் சிறந்த தீர்வாக இருக்கிறது.
இதய ஆரோக்கியம் மேம்பாடு: தண்ணீரில் நடப்பதால் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் இல்லாமல் இதயத்துடிப்பு அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்த அழுத்தத்தை குறைக்க உதவி இதய ஆரோக்கியத்தை நன்றாக வைத்து இருக்கிறது. சிறிதளவு நீரில் நடந்து செல்வதை விட, இடுப்பு வரை உள்ள தண்ணீரில் நடப்பதால் முழு உடலும் ஒரு அடி எடுத்து வைக்கப் போராடுவதால் முழு உடலும் ஆரோக்கியம் பெறுகிறது.
இத்தனை சிறந்த உடற்பயிற்சியான நீர் நடையை அனைவரும் முயற்சி செய்து பழகி உடல் ஆரோக்கியம் பெறுவோம்.