உடலில் உள்ள தேவையில்லாத ரோமங்களை நீக்கி அழகான சருமத்தைப் பெற யாருக்குத்தான் பிடிக்காது? அதற்கு வேக்ஸிங் அல்லது ஹேர் ரிமூவல் க்ரீம் இதில் எந்த முறையைப் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ரோமத்தை நீக்கக்கூடிய க்ரீமை பயன்படுத்தி உடலில் உள்ள ரோமத்தை நீக்கும்பொழுது வலி இல்லாமல் சுலபமாக நீக்கிவிடலாம். இதுவே வேக்ஸிங் செய்யும்போது சற்று சிரமம் ஏற்படும். எனினும், க்ரீமை ஒப்பிடுகையில் வேக்ஸிங் அதிக பலனைத் தரும்.
வேக்ஸிங் செய்யும்பொழுது ரோமத்தை வேரிலிருந்து நீக்கும். அதனால் முடி வளர அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும். இதுவே க்ரீம் ரோமத்தை வேரிலிருந்து நீக்குவதில்லை. எனவே, சில நாட்களிலேயே முடி வளரத் தொடங்கிவிடும்.
ஹேர் ரிமூவல் க்ரீமை பயன்படுத்தும்போது ரோமத்தின் நீளம் முக்கியமில்லை. ரோமம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை நீக்க முடியும். எனினும், இதிலிருந்து வரும் வாசனை விரும்பத்தகாததாக இருக்கும். இந்த க்ரீமை உருவாக்க பயன்படுத்தப்படும் அதிகப்படியான ரசாயனத்தால், இத்தகைய வாசனை வருகிறது. ரோமத்தை நீக்கியதும் தண்ணீரை வைத்து அந்த பாகத்தை சுத்தம் செய்வதன் மூலம் அதிகப்படியான வாசனையும் நீங்கிவிடும்.
க்ரீமில் அதிகமாக ரசாயனம் இருப்பதால் சருமப் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இதுவே வேக்ஸிங்கின் மூலம் இயற்கையாக ரோமங்களை நீக்க முடிவதால் மிருதுவான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.
க்ரீமை பயன்படுத்துவதாலும் பளபளப்பான சருமத்தைப் பெற முடியும். எனினும், அதன் பலன் சிறிது காலமே நீட்டிக்கும் என்பதால் அடிக்கடி க்ரீமை பயன்படுத்த வேண்டிவரும். க்ரீமை பயன்படுத்துவதால் ஒரு வாரம் வரை பலன் கிடைக்கும். இதுவே வேக்ஸிங் என்றால் ஆறு வாரம் வரை தாக்குப்பிடிக்கும். அது ரோமம் வளரும் வேகத்தைப் பொறுத்தது.
வேக்ஸிங் பயன்படுத்தும்பொழுது வெறும் ரோமத்தை மட்டும் நீக்காமல் சருமத்தில் உள்ள Dead skin ஐயும் சேர்த்து நீக்குவதால் சருமம் பளபளப்பாக இருக்கும். எனவே, வேக்ஸிங் மற்றும் க்ரீமை பயன்படுத்துவது அவரவர் விருப்பத்திற்கு ஏற்றதாகும். அதிக காலம் பலனை எதிர்பார்ப்பவர்கள் வேக்ஸிங்கை தேர்வு செய்வது சிறந்தது. நேரம் குறைவாக இருக்கிறது, உடனே பலன் வேண்டும் என்று எண்ணுபவர்கள் க்ரீமை பயன்படுத்துவது நல்லதாகும்.