உயர் ரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) என்பது பலருக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது இதய நோய் பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதை நிர்வகிக்க மருந்துகளுடன் உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கட்டாயம் செய்ய வேண்டும். எனவே இப்பதிவில் ரத்த அழுத்தத்தை இயற்கையாகவே குறைக்க உதவும் சில எளிய வழிகளைப் பார்ப்போம்.
உடல் எடையைக் குறைத்தல்: உங்களது உடல் எடை அதிகமாக இருந்தால் அதைக் குறைப்பது மூலமாக உங்களது ரத்த அழுத்ததையும் குறைக்கலாம். குறிப்பாக உங்களது BMI 25க்கு மேல் இருந்தால், ஒரு நல்ல மருத்துவரை அணுகி, உடல் எடையைக் குறைப்பதற்கான இலக்கைப் பற்றி ஆலோசிக்கவும். உங்களது உடல் எடையை பராமரித்தாலே, அதிக ரத்த அழுத்த பிரச்சனை இன்றி இருக்கலாம்.
உடற்பயிற்சி: வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 நிமிடங்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்யுங்கள். நீங்கள் ஜிம்முக்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடியே சில உடற்பயிற்சிகளை செய்ய முடியும். அல்லது வெளியே சென்று நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் செய்யலாம். இது உங்களது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்: DASH (Dietary Approaches to Stop Hypertension) உணவுமுறை போன்ற ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் பல ஆரோக்கியமான உணவு முறை பழக்கங்கள் உள்ளன. இந்த உணவு முறைகள் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் நிறைந்தவை. மேலும், இதில் கொழுப்பு, சோடியம் மற்றும் சர்க்கரை குறைவாக இருப்பதால், இயற்கையாகவே ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
உப்பைக் குறைத்தல்: அதிக உப்பு உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்திற்கு ஒரு முக்கிய காரணியாகும். பெரும்பாலான ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 2300 மில்லி கிராம் சோடியத்திற்கும் குறைவாகவே உட்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் உணவில் உள்ள உப்பின் அளவைக் குறைக்க உலர் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். குறிப்பாக நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள லேபிலை படித்துப் அதன் சோடியம் அளவை தெரிந்த பின்னர் அதை உட்கொள்ளவும். மேலும் வீட்டில் சமைக்கும் உணவுகளிலும் உப்பை குறைத்தே பயன்படுத்துங்கள்.
புகை மற்றும் மதுவை நிறுத்துங்கள்: புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் உங்கள் ரத்த அழுத்தத்தை உயர்த்தி இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கும். எனவே, இதுபோன்ற போதை பழக்கங்களை உடனடியாக கைவிடுங்கள்.
மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்: மன அழுத்தத்திற்கும் ரத்த அழுத்தத்திற்கும் தீவிர தொடர்பு உள்ளது. எனவே உங்களை மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். முறையான, தூக்கம் உடற்பயிற்சி, உணவுகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும் மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவற்றின் மூலமாக ரத்த அழுத்தத்தை எளிதாக குறைத்து விடலாம்.
இவற்றைப் பின்பற்றி உங்களது ரத்த அழுத்தத்தைக் குறைத்து என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.