நமது வாழ்வில் எது முக்கியமோ இல்லையோ, உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமாகும். ஏனெனில் சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும். என்னதான் பல ஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு, ஓடி ஓடி பணம் சேர்த்தாலும், உடல்நிலை சரியில்லை என்றால் அத்தனையும் வீண்தான். எனவே பணமும் முக்கியம், அதைவிட நமது உடல் நலம் மிக மிக முக்கியம்.
இன்றைய நவீன உலகில் நமது ஆரோக்கியத்திற்கு பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு. மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலோர் உடற்பருமன் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். அதிகரிக்கும் எடையைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள் எடுத்தாலும், ஒன்றும் சரிப்பட்டு வருவதில்லை. ஆனால் சில எளிய இயற்கை வழிகளை பயன்படுத்தியே உடல் எடையைக் குறைக்க முடியும். குறிப்பாக கற்றாழையைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கலாம்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு கற்றாழை உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி கற்றாழை சருமம் மற்றும் கூந்தலுக்கும் நன்மை அளிப்பதால், இதை இயற்கையின் அருமருந்து என்றுதான் சொல்ல வேண்டும். நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபராக இருந்தால், கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதற்கு உடற்பருமனை எதிர்த்துப் போராடும் குணம் உள்ளது.
இவை உடலில் சேர்ந்துள்ள தேவையில்லாத கொழுப்புக்களை எரித்து தொப்பையை விரைவாகக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் கற்றாழையில் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளும் இருப்பதால், கற்றாழை ஜூஸ் குடிப்பதால் உடலில் மோசமான நச்சுக்கள் வெளியேறி உடல்எடை விரைவாகக் குறையும்.
கற்றாழை சாற்றுடன் நெல்லிக்காய் சாறும் சேர்த்து குடித்து வந்தால், உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து கொழுப்பு வேகமாகக் கரையும். எனவே தினசரி இரண்டு ஸ்பூன் கற்றாழை சாற்றில் இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் சாறு கலந்து குடித்து வாருங்கள்.
அதேபோல கற்றாழை சாற்றுடன் சியா விதைகளை சேர்த்து குடித்து வந்தாலும் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இதன் மூலமாக உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து உடற்பெருமனைக் குறைக்கும். சியா விதை பசியையும் கட்டுப்படுத்தும் என்பதால், அதிகமாக உணவு உட்கொள்வது தடுக்கப்படுகிறது.
கற்றாழை ஜூஸுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தாலும் உடலுக்குத் தேவையான விட்டமின் சி கிடைத்து, நச்சுக்களை நீக்கும். இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் கற்றாழை சாற்றையும், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடித்து வந்தால், சில நாட்களிலேயே உடல் எடை குறைவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
இப்படி கற்றாழை ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை நீங்கள் பின்பற்றுவதற்கு முன்பாக, தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. மக்களுக்கு தகவலைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் தகுந்த மருத்துவரை ஆலோசித்து முடிவெடுங்கள்.