அமெரிக்கர்கள் எப்படி தினசரி காபி குடிப்பார்களோ, அதேபோல இந்தியர்களும் தினசரி டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இந்தியாவில் காலை எழுந்ததுமே தினசரி சூடாக டீ அல்லது காபி குடிப்பது பெரும்பாலானவர்களின் பழக்கமாக உள்ளது. பொதுவாகவே டீ குடிப்பது ஒருவரை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைச் செய்யும் தேநீர் வகைகள் உள்ளன. இதில் குறிப்பாக, 'டார்க் டீ' என்னும் தேநீர் வகை நம் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. டார்க் டீ என்பது நொதிக்க வைக்கப்பட்ட ஒரு வகை தேநீராகும். இதில் போடப்படும் டீ இலைகள் ஆக்ஸிஜனேற்றத்தால் கருமை நிறத்துக்கு மாறுவதால் 'டார்க் டீ' என அழைக்கப்படுகிறது.
டார்க் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
தினசரி டார்க் டீ குடிப்பவர்களுக்கு ஃப்ரீ டயாபட்டீஸ் வருவதற்கான ஆபத்து 50 சதவீதம் வரை குறைவாக இருப்பதாகவும், இரண்டாம் நிலை நீரிழிவு வரும் ஆபத்தை 47 சதவீதம் வரை குறைப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வகை தேநீர் குடிக்கும்போது அதில் சர்க்கரை சேர்க்காமல் இருப்பது முக்கியமாகும். அப்போதுதான் அதன் பலன்களை ஒருவர் முழுமையாகப் பெற முடியும்.
டார்க் டீ இரண்டு வழியாக நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. முதலில் இது நம் உடலின் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துவதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். இரண்டாவது சிறுநீர் வழியாக குளுக்கோஸ் வெளியேற்றத்தை இது அதிகரிக்கிறது. இதனால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு வெகுவாகக் குறைகிறது.
வெறும் ப்ளாக் டீ குடிப்பதனால் மட்டுமே நமது உடல் ஆரோக்கியம் முழுமை பெறாது. இத்துடன் நாம் தினசரி உட்கொள்ளும் மற்ற உணவுகளையும் கண்காணிக்க வேண்டும். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினசரி காய்கறிகள், பழங்கள், தேவையான கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்றவற்றை நாம் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வீட்டில் சமைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் எடையை சீராக வைத்திருக்கலாம். எனவே, தினசரி டார்க் டீ குடியுங்கள். அத்துடன் மற்ற உணவுகளையும் சரியாக உட்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.