நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் கொழுப்புகள் நம் உடலுக்கு மிகவும் அவசியம். ஆனால், எல்லா வகையான கொழுப்புகளும் நமக்கு நன்மை அளிப்பதில்லை. அதில் LDL கொழுப்பு மிகவும் மோசமானது. இது பொதுவாக “கெட்ட கொழுப்பு” என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது ரத்த நாளங்களில் குவிந்து பல்வேறு இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இந்தப் பதிவில் LDL கொழுப்பு பற்றிய முழு விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.
LDL என்பது Low Density Lipoprotein என்பதன் சுருக்கமாகும். இது ரத்தத்தில் கொழுப்பைக் கொண்டு செல்லும் ஒருவகை புரதம். இந்த கொழுப்பு, கல்லீரலில் உற்பத்தி செய்யப்பட்டு உடலில் மற்ற பகுதிகளுக்கு கொழுப்பை எடுத்துச் செல்கிறது. ஆனால், அதிக அளவு LDL கொழுப்பு ரத்த நாளங்களின் சுவர்களில் படிந்து பிளேக் எனப்படும் ஒரு படிமத்தை உருவாக்கும். இந்த பிளேக் ரத்த ஓட்டத்தை தடை செய்து இதய நோய், பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும்.
LDL கொழுப்பின் விளைவுகள்:
அதிக அளவு LDL கொழுப்பு இதயத்திற்கு ரத்தம் செல்லும் தமனிகளை அடைத்து இதய நோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
மூளையில் ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் பக்கவாதத்திற்கும் LDL கொழுப்பு முக்கிய காரணமாகும்.
இது பெருந்தமனிகளின் சுவர்களில் தங்கி அவற்றின் நெகழ்ச்சித்தன்மையைக் குறைக்கும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
கால்கள் மற்றும் கைகளுக்கு ரத்தம் செல்லும் தமனிகளில் பிளேக் உருவாகி, புறத்தமனி நோய் ஏற்படலாம்.
LDL கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள்:
சில குடும்பத்தில் LDL கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு மரபணு வாயிலாக வர வாய்ப்புள்ளது. அதிக கொழுப்பு குறிப்பாக நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ்பேட் உள்ள உணவுகளை அதிகமாக உண்பது LDL கொழுப்பை அதிகரிக்கும். புகைப்பிடித்தல், அதிகமாக உட்கார்ந்து இருக்கும் வாழ்க்கைமுறை, மது அருந்துதல் போன்றவை இந்த கொழுப்பின் அளவை அதிகரிக்கும். மேலும், சில வகை மருந்துகள் LDL கொழுப்பை அதிகரிக்கலாம்.
LDL கொழுப்பை குறைப்பதற்கான வழிகள்:
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ணுங்கள். கெட்ட கொழுப்புள்ள உணவுகளை குறைத்து நல்ல கொழுப்புள்ள உணவுகளை அதிகமாக உண்பது நல்லது. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள். அதிக உடல் எடை இருந்தால் எடையை குறைக்க முயற்சி செய்யவும். புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற பழக்கத்தை உடனடியாக கைவிடவும். அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி LDL கொழுப்பை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் உடலில் உள்ள LDL கொழுப்பின் அளவைக் குறைக்க முடியும். இதுகுறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.