உலக மூலநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 20 பேரில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மூலநோய் அல்லது பைல்ஸ் என்பது வலி மிகுந்த நோயாகும். இதனால் மலக்குடலில் கட்டிகள் அல்லது இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இந்த நோய் முக்கியமாக மலச்சிக்கலால் ஏற்படுகிறது. மூல நோய் உள்ள நோயாளிகளுக்கு மலம் கழிக்கும்போது கடுமையான வலி, எரிச்சல், இரத்தப்போக்கு மற்றும் குதப் பகுதியில் அரிப்பு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம்.
இந்நோய்க்கு மலச்சிக்கல் முதல் அறிகுறி. இது நார்ச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. பாஸ்ட் புட், வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், காரமான உணவுகள், ஆல்கஹால், பால் பொருட்கள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவை இந்த நோய் ஏற்படுவதற்கு மிகப்பெரிய காரணம். இவற்றை உட்கொள்வதால் பைல்ஸ் பிரச்னை அதிகரிக்கிறது.
இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை வழக்கமாக எடுத்துக் கொள்வது தீர்வைத் தரும். இவற்றை உட்கொள்வதால் பைல்ஸ் பிரச்னை குறைகிறது. நார்ச்சத்து இல்லாமல் நாம் உண்ணும் உணவு ஜீரணக் குழாயை கடப்பதற்கு 70 முதல் 80 மணி நேரமாகும். உணவு நம் குடலை கடந்து செல்லும் நேரத்தை குறைப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்னை தவிர்க்கப்படுகிறது. நாளொன்றுக்கு 40 கிராம் நார்ச்சத்து தேவை. நார்ச்சத்தில் செல்லுலோஸ், மினி செல்லுலோஸ், பெக்டின், ஸ்டார்ச், லிக்னின் போன்ற 9 வேதிப்பொருள்கள் உள்ளன. தினமும் 10 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்து உட்கொண்டு வந்தாலே சிரமமின்றி மூலம் வருவதை தவிர்க்கலாம். அதோடு, 20 நிமிடம் உடற்பயிற்சி, 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம்.
அதிக நார்ச்சத்தை நம் உடல் பெற எளிய வழிகள்: தினமும் கைப்பிடி அளவு ஏதேனும் ஒரு கொட்டை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை ஸ்நாக்ஸாக கூட எடுத்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக. பாசிப்பயறு மற்றும் பருப்பு. இது நாள்பட்ட மலச்சிக்கலை போக்கும்.
மூலநோய் உள்ளவர்கள் இரவு வேளைகளில் வெந்தயம் கொஞ்சமாக எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் வெந்தயத்திலிருக்கும் நார்ச்சத்து மலப்போக்கை இலகுப்படுத்திக் கொடுக்கும்.
பச்சை காய்கறிகளில் கலோரிகள் பெரிதாக இல்லை. மாறாக, நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. உதாரணமாக. புரோக்கோலி, காலிஃபிளவர், முள்ளங்கி, டர்னிப் மற்றும் முட்டைக்கோஸ் ஆகிய காய்கறிகளை கூறலாம். வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை மலச்சிக்கலை குறைக்கிறது. மூல நோயுள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர வேண்டும். இந்த வைத்தியம் நிச்சயம் பலன் கொடுக்கும். மேலும், சின்ன வெங்காயம் கலந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம்பழம், அவகோடா, பப்பாளி பழம், பேரிக்காய், மாதுளை, நட்சத்திர பழம் ஆகிய நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். நீராவியால் செய்யப்படும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில். இந்த உணவுகள் மலம் கெட்டியாவதை தடுகிறது.
பிரவுன் ரைஸ், கம்பு, ஓட்ஸ், பயறு போன்ற முழு தானியங்களை சாப்பாட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். இதிலிருக்கும் ஊட்டசத்துக்கள் மலச்சிக்கலை கணிசமாக குறைக்கிறது. காபி, டீ மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
நீங்கள் மூல நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது உங்கள் நோய் நாள்பட்டதாக இருந்தால், அதிலிருந்து விரைவாக விடுதலை பெற கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு சாப்பிட வேண்டும். சந்தையில் எளிதாக கிடைக்கும் இவற்றை வாரத்திற்கு மூன்று முறை சமைத்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலநோய்க்கு அருமருந்தாகும் மோர். அதைச் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு, உடலில் நீர்ச்சத்து குறைபாட்டையும் பூர்த்தி செய்கிறது. இது மலச்சிக்கல் மற்றும் மூலநோயில் இருந்து நிவாரணம் அளிக்கும்.