Ginger Tea https://www.youtube.com
ஆரோக்கியம்

இஞ்சி டீ யாருக்கெல்லாம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

ஞ்சி டீ எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் ஒரு பானம். இதில் உள்ள ஜிஞ்சரால் எனும் உயிர் இயக்க சேர்மம் உடலுக்கு நன்மை பயக்கிறது. செரிமான ஆரோக்கியம், கீல்வாதம் மற்றும் பிற அலர்ஜி கோளாறுகளை குறைத்தல், குமட்டல், வாந்தியைக் குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை தருதல், தலைவலி, தசைவலி உட்பட்ட பல்வேறு வகையான வலிகளை குறைத்தல், கொழுப்பின் அளவைக் குறைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், எடை மேலாண்மை, இரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு, சுவாச ஆரோக்கியம் என பலவிதமான நன்மைகள் இஞ்சி டீயில் உள்ளன.

இத்தனை நன்மைகளை அள்ளித்தரும் இஞ்சி டீ, சிலருக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். யாருக்கெல்லாம் இஞ்சி டீ பக்க விளைவுகளை ஏற்படுத்தும்?

1. இரைப்பை குடல் பிரச்னைகள்: இஞ்சி டீயை அதிகமாக உட்கொள்வது நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று அசௌகரியம் போன்ற இரைப்பை குடல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஏனென்றால், இஞ்சி ஒரு வலுவான மசாலா. இது செரிமான அமைப்பை அதிக அளவில் எரிச்சலடையச் செய்யும்.

2. இரத்தம் மெலிதல்: இஞ்சியில் இயற்கையாகவே இரத்தத்தை மெலிதாக்கும் தன்மை உள்ளது. இது இரத்தம் உறைதலில் பிரச்னையை உண்டாக்கும். இரத்தக் கசிவு ஆபத்தை அதிகரிக்கலாம் என்பதால், இரத்த உறைவு எதிர்ப்பு அல்லது பிளேட்லெட் எதிர்ப்பு மருந்துகளை (எடுத்துக்காட்டு: வார்ஃபரின், ஆஸ்பிரின்) உட்கொள்ளும் நபர்களுக்கு இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

3. குறைந்த இரத்த சர்க்கரை அளவுகள்: இஞ்சி இரத்த சர்க்கரையை சீராக்க உதவும். அதேவேளையில், அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைவதற்கு வழிவகுக்கும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரையை குறைக்க மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இது சிக்கலை உண்டாக்கும்.

4. இரத்த அழுத்தம்: இஞ்சி இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இது சிலருக்கு நன்மை பயக்கும். ஆனால், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அல்லது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு இது சிக்கல்களை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம் குறையும்போது தலைச்சுற்றல் அல்லது மயக்கத்திற்கு வழிவகுக்கும்.

5. ஒவ்வாமை எதிர்வினைகள்: சில நபர்களுக்கு இஞ்சி ஒவ்வாமை இருக்கலாம். அவர்கள் இஞ்சி டீ குடிக்கும்போது ஒவ்வாமை எதிர்வினையின் அறிகுறிகள் வரலாம். உடலில் சொறி, சுவாசிப்பதில் சிரமம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகியவை ஏற்படலாம்.

6. வாய் எரிச்சல்: இஞ்சி மிகவும் சக்தி வாய்ந்தது. சிலருக்கு இஞ்சி டீ குடிப்பதால் வாய் அல்லது தொண்டையில் எரிச்சல் ஏற்படலாம். இது எரியும் உணர்வைத் தந்து வாய்ப்புண் ஏற்படலாம்.

7. பித்தப்பைக் கற்கள்: பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், இஞ்சி பித்தத்தின் உற்பத்தியைத் தூண்டும். இது பித்தப்பை அறிகுறிகளை அதிகப்படுத்தலாம்.

8. கர்ப்ப கால சிக்கல்கள்: கர்ப்ப காலத்தில் காலை நேர சுகவீனத்தைத் தணிக்க இஞ்சி பரிந்துரைக்கப்படுகிறது. வாந்தி வராமல் தடுக்கும். இது ஹார்மோன் அளவை பாதிக்கும் மற்றும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

9. இதயக் கோளாறுகள்: இஞ்சி கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. ஆனால், இதயக் கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்பே இஞ்சி டீ குடிக்கலாம். ஏனெனில், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் பாதிப்பு நேரலாம்.

இந்த அபாயங்களைக் குறைக்க, பொதுவாக இஞ்சி டீயை மிதமாக உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஏதேனும் அடிப்படை உடல்நலக் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் மருந்துகளை எடுத்துக் கொண்டாலோ, தினசரி வழக்கத்தில் இஞ்சி டீயைச் சேர்ப்பதற்கு முன் ஒரு சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT