பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு 1 முதல் 6 மாதங்களுக்கு இடையில் முடி உதிர்வது அதிகமாகும். அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பிரசவத்திற்குப் பின்பு தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள்: பொதுவாக, பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின்போது 50 மில்லி உதிரப்போக்கு இருக்கும். கருவுற்ற பின்பு 8, 9 மாதங்களுக்கு மாதவிலக்கு இருக்காது. ஆனால் பிரசவத்தின்போது நார்மல் டெலிவரி அல்லது சிசேரியன் இரண்டிலும் 500 மில்லியாவது இரத்தம் வெளியேறும்.
மேலும், ஒரு பெண் கர்ப்பமானது முதல் பிரசவத்தின்போது வரை நல்ல சத்தான சாப்பாடு, இரும்புச்சத்து மாத்திரைகள், ஃபோலிக் ஆசிட், கால்சியம் மாத்திரைகள் எடுத்து நல்ல ஆரோக்கியமாக இருப்பார். ஆரோக்கியமான கூந்தலுக்குத் தேவையான இரும்பு, துத்தநாகம், பயோட்டின் மற்றும் வைட்டமின்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை உட்கொள்வார். எனவே அப்போது முடி உதிர்வு கிட்டத்தட்ட இருக்காது என்றே சொல்லலாம். மேலும் கர்ப்ப காலத்தில், ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகமாக இருப்பதாலும் முடி உதிர்வு இருக்காது.
குழந்தை பிறப்பிற்குப் பின்பு குழந்தைக்குத் தரும் முக்கியத்துவம் தாய்க்கு சில இடங்களில் தரப்படுவதில்லை அல்லது அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். கருவுற்றிருந்தபோது சத்துள்ள உணவுகளை உண்டது போல அவர்கள் பிரசவத்திற்கு பின்பு தன்னை கவனித்துக் கொள்வதில்லை.
அதோடு தாய், குழந்தைக்கு தாய்ப்பால் தருவார். ஒவ்வொரு நாளும் குழந்தைக்கு தாய் தரும் இரத்த தானம்தான் தாய்ப்பால். அவர் இரவிலும் கண் விழித்துக் குழந்தையை பார்த்துக்கொள்ள நேரிடும். இந்த காரணங்களாலும் பிரசவத்தின்போது வெளியேறும் இரத்தத்தினாலும் அவர்களுக்கு முடி உதிர ஆரம்பிக்கிறது. அவரவர்களுடைய உடல் நிலை மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை பொறுத்து முடி உதிர்வு இருக்கும். சிலருக்கு குறைவாகவும், சிலருக்கு மிக அதிகமாகவும் முடி உதிரலாம்.
தீர்வுகள்:
சமச்சீரான உணவு: கருவுற்றிருந்தபோது விட தாய்ப்பால் தரும் காலகட்டத்தில்தான் ஒரு பெண் இன்னும் நன்றாக சத்தாக சாப்பிட வேண்டும். உணவில் முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். முடி முதன்மையாக கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. எனவே போதுமான புரதத்தை உட்கொள்வது அவசியம்.
இரும்புச்சத்து: மயிர்க்கால்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல இரும்புச்சத்து உதவுகிறது. சிலர் தவறாகப் புரிந்து கொண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இரத்தம் ஊறும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கிலோ கணக்கில் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் மட்டுமே உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். எக்கச்சக்கமான சர்க்கரை சத்து அதில் இருக்கிறது. எனவே பேரிச்சம்பழம் இரும்பு சத்துக்கான ஆதாரம் நிச்சயமாக இல்லை.
கசப்பான பொருட்களான முருங்கைக்கீரை சுண்டவத்தல் பாகற்காயிலும், கீரைகள், பீன்ஸ், ஈரல், ஒல்லியான இறைச்சிகள் மற்றும் பலப்படுத்தப்பட்ட தானியங்கள் போன்றவற்றில் இரும்புச்சத்து இருக்கிறது. இவற்றை தவறாமல் பாலூட்டும் பெண்கள் உண்டு வரவேண்டும்.
பயோட்டினும், கொழுப்பு அமிலங்களும்: முட்டை, கொட்டைகள், விதைகள் மற்றும் முழு தானியங்களில் காணப்படும் பயோட்டினும், ஒமேகா 3 சால்மன் போன்ற மீன்களில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் முடி வளர்ச்சிக்கு முக்கியமானவை.
மாத்திரைகள்: அத்துடன் மருத்துவரின் பரிந்துரையின்படி மல்டி வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
உண்ணக்கூடாதவை: பிரெட் போன்ற மைதா நிறைந்த பொருட்களை எடுத்துக் கொள்ளவே கூடாது. இது தலையில் பொடுகை சேர்க்கும். இது முடி உதிர்வை அதிகரிக்கும். பேக்கரி பொருட்களையும் விலக்க வேண்டும்.
ஆதரவான சூழ்நிலை: குழந்தையை வீட்டில் உள்ள மற்றவர்களும் கண் விழித்து பார்த்துக் கொண்டு, தாயை நன்றாக உறங்க அனுமதிக்க வேண்டும். சத்தான உணவுடன் ஆதரவான சூழ்நிலை, நல்ல உறக்கம் போன்றவை பெண்களுக்கு முடி உதிர்வைக் கண்டிப்பாக குறைக்கும்.