கத்தரிக்காய், இந்திய உணவுகளில் பலவகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான காய்கறி. இருப்பினும், சிலருக்கு கத்திரிக்காய் சாப்பிட்டவுடன் அலர்ஜி பிரச்சனை ஏற்படலாம். இது எதனால் ஏற்படுகிறது என எப்போதாவது யோசித்ததுண்டா?. இந்தப் பதிவில் கத்திரிக்காய் அலர்ஜியின் பின்னால் உள்ள அறிவியலைத் தெரிந்து கொள்வோம்.
ஒரு உணவை சாப்பிடுவதால் ஏற்படும் அலர்ஜி என்பது, நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் உணவில் உள்ள ஒரு குறிப்பிட்ட புரதத்தை அச்சுறுத்தலாகக் கருதி, அதை எதிர்த்து போராடும் ஒரு நிலை. இந்தப் போராட்டத்தின்போது நமது உடலில் பல்வேறு அறிகுறிகள் தோன்றும். இது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம்.
கத்திரிக்காயில் என்ன இருக்கிறது?
கத்திரிக்காய் பல வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த காய்கறி. ஆனா,ல் அதில் சில குறிப்பிட்ட புரதங்கள், ரசாயனங்கள் உள்ளன. அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ‘சோலனைன்’ எனப்படும் ரசாயனம் கத்திரிக்காயில் அதிக அளவில் இருக்கும்போது, நச்சுத்தன்மை உடையதாக இருக்கும். அதே போல ‘ஹிஸ்டமைன்’ என்ற ரசாயனம் அலர்ஜிக் எதிர்வினைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘புரோலெட்டின்ஸ்’ எனப்படும் கத்திரிக்காயில் காணப்படும் புரோட்டீன்கள் சிலருக்கு தீவிரமான அலர்ஜியை ஏற்படுத்தும்.
கத்தரிக்காய் அலர்ஜியின் அறிகுறிகள்:
சருமத்தில் வெடிப்பு மற்றும் அரிப்பு
வீக்கம்
சளி
மூச்சு விடுவதில் சிரமம்
வயிற்றுப்போக்கு
வாந்தி
தலைவலி
காய்ச்சல்
கத்தரிக்காய் அலர்ஜி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உணவு அலர்ஜி இருந்தால், உங்களுக்கும் அது வர வாய்ப்புள்ளது. உங்களது நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக இல்லை என்றால், கத்திரிக்காய் புரதங்கள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். மேலும், கத்திரிக்காயை எப்படி சமைக்கிறோம் என்பதைப் பொருத்தும் அலர்ஜியின் தீவிரம் மாறுபடும். உங்களுக்கு கத்திரிக்காய் அலர்ஜி இருப்பதாக நினைத்தால், ஒரு நல்ல அலர்ஜி நிபுணனை அணுகி ஆலோசிப்பது நல்லது. அவர் உங்களுக்குத் தேவையான பரிசோதனைகளை செய்து உங்களுக்கு என்ன வகையான அலர்ஜி இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவார்.
கத்தரிக்காய் அலர்ஜி பாதிப்பை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால், சில நடவடிக்கைகள் மூலம் அதை நிர்வகிக்க முடியும். முடிந்தவரை கத்திரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே சிறந்த வழி. நீங்கள் சாப்பிடும் எல்லா உணவுகளின் பட்டியலையும் முறையாகப் பராமரித்து, எது உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் உணவு என்பதைக் கண்டறிவது நல்லது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான அலர்ஜி எதிர்வினை ஏற்பட்டால், உடனடியாக பயன்படுத்தக்கூடிய அவசரகால மருந்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருங்கள். பின்னர், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது அவசியம்.