

1930 களின் உலகப் பொருளாதார பெருமந்தத்திற்கு (Great Depression) பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நீர்க்குமிழியாக (Economic Bubble) 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தம் (Recession) கருதப்படுகிறது. அது சப்-ப்ரைம் கிரைசிஸ் (Subprime crisis) அல்லது தகுதியற்ற நபர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கல் சிக்கல் என்று அழைக்கப்படுகிறது. அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
சப்-ப்ரைம் கிரைசிஸ் எவ்வாறு உருவானது?
2000 களின் தொடக்கத்தில் ஏற்கனவே இருந்த பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களுக்கு மாற்றாக பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி முதலீட்டாளர்கள் செல்ல தொடங்கினர். வீட்டுக் கடன்கள் நல்லதொரு முதலீட்டு முகாந்திரமாக தோன்றின. ஏனென்றால், அவற்றில் கடன் பத்திரங்களைப்போல் வட்டி கிடைத்தது. மேலும், வீடு அடமானமாகவும் இருந்தது. ஒருவேளை வீட்டுக்கடனை அடைக்காவிட்டால் வீட்டை விற்று கடன் கொடுத்தப் பணத்தை அடைந்துவிடலாம்.
முதலீட்டாளர்களின் கவனமானது வீட்டுக் கடன்களை நோக்கி திரும்பியது. இரட்டைக் கோபுரத் தாக்குதல் மற்றும் டாட் காம் பொருளாதார நீர்க்குமிழி (Dotcom bubble) காரணமாக, அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமாக இருந்தது.
அதனை ஊக்குவிக்க 2000 ஆம் ஆண்டு 6.5% இருந்த அரசாங்கத்தின் மத்திய வங்கி வட்டிவிகிதம், 2003 ஆம் ஆண்டு 1.0% ஆக குறைக்கப்பட்டது. அரசாங்கம் மக்களை வாடகைக்கு குடியிருப்பதற்கு மாற்றாக, வீடு வாங்க ஊக்கப்படுத்தியது. அரசாங்கத்தின் நிதி உதவி பெறும் வீட்டுக்கடன்களை வழங்கும் நிறுவனங்களான ஃப்ரெட்டி மேக் (Freddie Mac) மற்றும் ஃபேனி மே (Fannie Mae) நிறுவனங்களும் பெருமளவில் கடன் வழங்கின.
இந்தக் கடன்கள் தொகுக்கப்பட்டு பங்குகளாக பங்குச் சந்தையில் வங்கிகளால் விற்கப்பட்டன. இவை மார்ட்கேஜ் பேக்டு செக்யூரிட்டி (Mortgage Backed Security) அதாவது வீட்டினை அடமானமாக கொண்ட பங்குகள் என்றழைக்கப்பட்டன. இவற்றிற்கு பங்குச்சந்தையில் பெரும் மவுசு இருந்தது. முதலீட்டாளர்கள் பெருமளவில் வாங்கி குவித்தனர். இத்தகைய வேண்டல்கள் (Demand) காரணமாக, வங்கிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்ள, அதிக அளவில் வீட்டுக்கடன்களை வழங்க தொடங்கின. தகுதியற்ற நபர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கப்பட்டது.
இவை நின்ஜா கடன்கள் (NINJA loan - No Income No Job and Asset Loans) என்றழைக்கப்பட்டன. அதாவது வருமானமில்லை வேலையில்லை, சொத்து இல்லை போன்ற நபர்களுக்கு வழங்கப்படும் கடன்கள். மற்றொரு வகையில் இவை சப்-ப்ரைம் கடன்கள் (Subprime loan) என்றழைக்கப்பட்டன. அதாவது, தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்படும் கடன்கள்.
ஆரம்பத்தில் குறைவான வட்டி விகிதமும், ஓராண்டுக்குப் பிறகு அதிக வட்டி விகிதமும் கொண்ட வேட்டையாடும் கடன்களும் (Predatory Loan) வழங்கப்பட்டன. இந்தக் கடன்கள் ஆரம்பத்தில் தவணை செலுத்த எளிதாக இருந்த போதிலும், ஒரு வருடம் கழித்து அதிக வட்டி விகிதம் காரணமாக தவணை செலுத்துவது கடினம். தாராள மாகவும், குறைந்த வட்டியிலும் அதிக வீட்டுக் கடன்கள் வழங்கப்பட, வீடுகளின் விலை சந்தையில் அதிகரிக்கத் தொடங்கின. இங்குதான் பொருளாதார நீர்க்குமிழி தொடங்கியது.
இத்தகைய வீட்டினை அடமானமாக கொண்ட பங்குகளுக்கு கடன் தரமதிப்பீட்டு நிறுவனங்கள் (Credit Rating Agencies) அதிக பாதுகாப்பு ஏஏஏ(AAA) சான்றிதழ்களை அளித்தன. ஏனென்றால், கடந்த காலங்களில் இத்தகைய வீட்டுக் கடன்கள் தகுதியான நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த காரணத்தினால், இவை பாதுகாப்பானவை என்று கருதப்பட்டன.
இதே வீட்டுக் கடனை அடமானமாக கொண்ட பங்குகள் மற்றொரு விதத்தில் அடமானக் கடன்கள் உரிமை- சிடிஓ (Collateralized Debt Obligation- CDO) என பங்குச்சந்தையில் விற்கப்பட்டன. இவற்றில் வருடாந்திரம் குறிப்பிட்ட வட்டிப் பணம் வருமானமாக வழங்கப்படும்.
இந்த சிடிஓ மூலம் வட்டி வழங்கப்படாவிட்டால், இழப்பிலிருந்து பாதுகாக்க கடன் தீர்க்காமை மாற்றம் (Credit Default Swap-CDS) என்ற திட்டங்களும் காப்பீடு நிறுவனங்களால் வழங்கப்பட்டன.
இத்தகைய காப்பீடு தொகை 900 பில்லியன் டாலர்களில் இருந்து 62 டிரில்லியன் டாலர்கள் என ஆனது. இத்தகைய காப்பீடுகள் மில்லியன் கணக்கில் கொடுக்கப்பட்டன. வீட்டுச் சந்தை தொடர்ந்து மேல் நோக்கி செல்லும் என நம்பி, காப்பீடு கோரலை பூர்த்தி செய்ய போதுமான நிதி இல்லாத போதும், காப்பீடுகள் வழங்கப்பட்டன.
தகுதியற்ற கடன்களின் காரணமாக, 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 3% வீட்டுக் கடன்கள் ஜப்தி செய்யப்பட்டன. மேலும் 7% வீட்டுக் கடன்கள் ஒரு மாதம் தவணை பாக்கியில் இருந்தன. சந்தையில் வீடுகள் ஜப்தி செய்யப்பட்ட காரணத்தால், அதிக வீடுகள் சந்தைக்கு வந்தன. வீடுகளின் வழங்கல்கள்(Supply) அதிகரித்தது.
அதனால் வீடுகளின் வேண்டல்கள்(Demand) குறைந்தன. வீடுகளின் வேண்டல்கள் குறைந்த காரணத்தால் வீடுகளின் சந்தை மதிப்பு குறைய தொடங்கியது. வீட்டின் மதிப்பை விட பல மடங்கு அதிகமாக கடன் வாங்கியவர்கள் கடன் தவணை செலுத்துவதை நிறுத்திவிட்டனர்.
அந்த வீடுகளும் வீட்டுச் சந்தையில் வரத் தொடங்கின. 2008 ஆம் ஆண்டு வீட்டு சந்தை விலைகள் பட பட வென கீழே விழத் தொடங்கின. முதலீட்டு நிறுவனங்கள் வங்கிகளின் இத்தகைய வீட்டுக்கடன் சார்ந்த பங்குகளை வாங்குவதை நிறுத்தின. பல்வேறு வீட்டுக் கடன்கள் தீர்க்காமையில் சிக்கிக் கொண்ட காரணத்தால், வங்கிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.
வங்கிகளின் வீட்டுக் கடன்கள் பல தீர்க்காமையில் சிக்கிக் கொண்டன. வங்கிகள் தங்களுக்குள் கடன் கொடுத்துக் கொள்வதை நிறுத்தின. பல நிறுவனங்களுக்கு தொழிலை நடத்துவதற்கு கடன் கிடைப்பது கடினமானது. வங்கிகளின் வீட்டுக் கடனை அடிப்படையாக கொண்டிருந்த முதலீடுகளின் விலை வீழ்ச்சி ஏற்பட்டது.
வீட்டுக்கடன் அடமான பங்குகள் முதலீடுகளில் ஈடுபட்டிருந்த பெரிய முதலீட்டு நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்தன. அதிக பாதுகாப்பு என்று மதிப்பிடப்பட்ட 75% சிடிஓ க்களில் 70% கடன் தீர்க்காமையில் சிக்கிக்கொண்டன. சிடிஓ வட்டி தராத காரணத்தால், அவற்றைச் சார்ந்த கடன் தீர்க்காமை மாற்றம் காப்பீடுகளில், காப்பீடு நிறுவனங்களிடன் கோரல்கள் அதிகரித்தன. காப்பீடு நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகின. வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் என மூன்றும் இவற்றால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டன.
பல நிறுவனங்கள் திவால் ஆகி மூடப்பட்டன. சில நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து கொண்டன. செப்டம்பர் 15 , 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான 600 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்ட லீமன் பிரதர்ஸ் (Lehman Brothers) நிறுவனம் திவால் ஆன போது, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறி அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்தனர். பங்குச் சந்தை தனது மொத்த மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது.
அமெரிக்காவின் இந்தப் பொருளாதார மந்தம் மற்ற உலக நாடுகளையும் பாதித்தது. 2008 ஆம் ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில் மட்டும் 2 மில்லியன் அமெரிக்கர்கள் வேலை இழந்தனர். நிறுவனங்களுக்கு அரசாங்கம் அவசர கடன் வழங்கியது.
நிறுவனங்களைக் காக்க அரசாங்கம் 700 பில்லியன் டாலர்களை ஒதுக்கி டார்ப் திட்டம் (TARP - Troubled Assets Relief Program) உருவாக்கியது. நிறுவனங்கள் நிதி நிலைமை குறித்து அரசாங்கத்தின் மத்திய வங்கி விசாரணை நடத்தியது.
நல்லதொரு கட்டமைப்பைக் கொண்டிருந்த வங்கிகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பின் அரசாங்கம் உதவியது. பொருளாதாரத்தை ஊக்குவிக்க 2009 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் பெரிய ஊக்கத் திட்டத்தை (Stimulus Package) வழங்கியது. 800 பில்லியன் டாலர்கள் பொருளாதாரத்தில் கொண்டு வரப்பட்டது. 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டாட்-ஃப்ராங்க் சட்டம் (Dodd Frank Act) வெளிப்படைதன்மையை அதிகரிக்கவும் மற்றும் வங்கிகள் அதிகமாக அபாயகரமான முதலீடுகளில் இறங்குவதையும் தடுத்தது.
மேலும், வேட்டையாடும் கடன்களைக் குறைக்க நுகர்வோர் பாதுகாப்பு மையத்தை (Consumer Protection Bureau) உருவாக்கியது. பெரிய வங்கிகளின் தோல்விகள் படிப்படியாக கணிக்கும் படியாக நிகழ வழிமுறைகள் உருவாக்கியது. இந்தப் பொருளாதார மந்தத்திற்கு காரணமான நிதி நிறுவனங்களுக்கு அரசாங்கம் பொது மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மீட்டெடுத்தது மக்களால் விமர்சிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொருளாதார மந்தம் முடிவுக்கு வந்த போதும், பங்குச்சந்தை தனது பழைய நிலையை அடைய 2014 ஆம் ஆண்டு ஆனது.
சப்-ப்ரைம் கிரைசிஸ் மூலம் நாம் கற்றுக் கொள்வது என்ன ?
கடன் வாங்கி நம்மால் வாங்க இயலாத வீட்டை வாங்க கூடாது. அதன் மூலம் நாம் பெரிய வீட்டுக் கடனில் மாட்டி கொள்வதைத் தவிர்த்துக் கொள்கிறோம். எந்த ஒரு முதலீட்டையும் புரிந்து கொண்டு இறங்க வேண்டும். முதலீடுகளைப் பரவலாக வைத்திருக்க வேண்டும். அவசரக்கால நிதியை வைத்திருக்க வேண்டும். அதன் மூலம், திடீர் வேலை இழப்பு போன்ற சந்தர்ப்பங்களில் வாழ்க்கையை நடத்த முடியும். அரசாங்கம் நாட்டின் நிதி சம்பந்தமான மேற்பார்வைகளைச் சரிவர செய்யவேண்டும். இல்லை என்றால் இத்தகைய பெரும் நிதி நெருக்கடி ஏற்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: