

ஓய்வு என்பது பொதுவாக 65 வயதில் மெடிகேர் சலுகைகளுக்குத் தகுதி பெறுவதற்கு முன்பே ஓய்வு பெறுவதாக வரையறுக்கப்படுகிறது. முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பும் பலருடைய இலக்கு தங்களின் 50கள், 40களில் அல்லது அதற்கும் முன்பாகவே ஓய்வு பெறுவதே ஆகும்.
இதற்கு ஆரம்பகால ஓய்வூதியம் (Early retirement) பெற முறையான நிதி திட்டமிடலும், தீவிரமான சேமிப்பும், சரியான முதலீட்டு உத்திகளும் தேவை. 40 அல்லது 50 வயதிற்குள் வேலையில் இருந்து ஓய்வு பெற விரும்பினால் கீழே உள்ள வழிகளைப் பின்பற்றி நம் இலக்கை அடையலாம்.
ஓய்வூதிய நிதியை கணக்கிடுவது (Financial Independence, Retire Early - FIRE Number):
ஓய்வு பெற்ற பிறகு வேலை செய்யாமல் வாழ எவ்வளவு பணம் தேவை என்பதை முதலில் கணக்கிட வேண்டும். இதற்கு 25x விதி (25x Rule) பயன்படுத்தப்படுகிறது. நம் தற்போதைய ஒரு வருடச் செலவை விட 25 மடங்கு அதிகத் தொகையை நாம் சேமிக்க வேண்டும். உதாரணத்திற்கு நம் தற்போதைய ஆண்டுச் செலவு ₹10 லட்சம் என்றால், நாம் ஓய்வு பெற குறைந்தபட்சம் ₹2.5 கோடி (₹10 லட்சம் x 25) கார்பஸ் நிதியாகச் சேர்க்கவேண்டும்.
சேமிப்பு விகிதத்தை அதிகரிப்பது (Maximize Savings):
சாதாரண ஓய்வூதியத்திற்கு 15% சேமிப்பு போதுமானது. ஆனால் முன்கூட்டியே ஓய்வு பெற நம் மாத வருமானத்தில் 50% முதல் 70% வரை சேமிக்க வேண்டும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை குறைத்து, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதும், வருமானம் அதிகரிக்கும்போது நம் முதலீட்டு தொகையையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வது போன்றவை பயனளிக்கும்.
கூட்டு வட்டியின் சக்தியைப் பயன்படுத்துவது (Smart Investments):
பணத்தை வெறும் வங்கிக் கணக்கில் வைக்காமல், பணவீக்கத்தை விட அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
பங்குச்சந்தை & மியூச்சுவல் ஃபண்டுகள்:
நீண்ட கால வளர்ச்சிக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் இன்டெக்ஸ் ஃபண்டுகளில் (Index Funds) முதலீடு செய்வது அவசியம்.
பாதுகாப்பான முதலீடுகள்:
நம் போர்ட்ஃபோலியோவை சமநிலைப்படுத்த PPF, தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் EPF போன்ற அரசு திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
செயலற்ற வருமானத்தை உருவாக்குவது (Passive Income):
நாம் வேலை செய்யாவிட்டாலும் நமக்குத் தொடர்ந்து பணம் வரும் வழிகளை உருவாக்க வேண்டியது முக்கியம். வாடகை வருமானம் தரும் சொத்துகளில் (ரியல் எஸ்டேட்) முதலீடு செய்வது, தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது அவசியம்.
காப்பீடுகள் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது:
எதிர்கால விலைவாசி உயர்வை கணக்கில் கொள்ளவேண்டும். ஓய்வூதியக் காலத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகள் நம் சேமிப்பைக் கரைத்து விடக்கூடாது. எனவே போதுமான தொகையிலான மருத்துவக் காப்பீடு (Health Insurance) மற்றும் ஆயுள் காப்பீடு (Life Insurance) கட்டாயம் எடுத்திருக்க வேண்டும்.
முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
இலக்குகளை வரையறுத்து, ஓய்வூதிய வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கி, தற்போதைய நிதி நிலையை மதிப்பீடு செய்வதன் மூலம் முன்கூட்டிய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கலாம்.
முன்கூட்டியே ஓய்வு பெறுவது எப்படி என்று எண்ணத் தொடங்குவதற்கு முன்பு ஓய்வு காலத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் நம் பட்ஜெட்டை தீர்மானிக்கும். உலகைச் சுற்றிவர பயணம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும்.
ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு எண்ணம் இருந்தாலோ அல்லது தன்னார்வப் பணி செய்வதற்கு விருப்பம் உள்ளதா போன்றவற்றை தெரிந்து கொண்டால்தான் நம்மால் பட்ஜெட்டை தீர்மானிக்க முடியும்.
முன்கூட்டியே ஓய்வு பெறுவதை சாத்தியமாக்குவதற்கு வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். முதலில் கடனிலிருந்து விடுபடுவதும், சீரான முதலீட்டைத் தொடருவதும் அவசியம். இல்லையெனில் கடன் நம் மாத வருமானத்தை விழுங்கி, ஓய்வூதிய சேமிப்பையும் வேகமாக கரைத்துவிடும்.
வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் நம் பட்ஜெட் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். செலவுகளை சமாளிப்பதற்கு ஒரு இடைக்கால கணக்கையோ அல்லது பணம் செலுத்தி வாங்கிய சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்தையோ பயன்படுத்த வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: