
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (Post Office Savings Account - SB):
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு என்பது இந்திய அரசின் சிறு சேமிப்புத் திட்டமாகும். இது 4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீட்டில் கணக்கை திறக்கலாம், மற்றும் யூ.10,000 வரை வட்டிக்கு வரி விலக்கு உண்டு. கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு மாற்றிக் கொள்ள முடியும். மேலும் மைனர் பெயரிலும் கணக்கு தொடங்கலாம். கிராமப்புறங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், தேவைப்படும் பொழுது எளிதாக எடுக்கவும் இந்த திட்டம் உதவுகிறது.
தொடர் வைப்புத் திட்டம் (Recurring Deposit - RD):
தொடர் வைப்புத் திட்டம் என்பது வழக்கமான வருமானம் உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் டெபாசிட் செய்து,
நிலையான வைப்புகளுக்கு கிடைக்கும் அதே வட்டி விகிதத்தில் வட்டி ஈட்ட உதவும் ஒரு சேமிப்பு முறையாகும். இந்த முறையில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பதன் மூலம் ஒழுக்கமான சேமிப்பை வளர்க்கலாம். தற்போது 6.7% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. 5 வருட காலக்கெடு கொண்டது. முதலீடு செய்த 12 மாதங்களுக்குப் பிறகு வைப்புத் தொகையில் 50% வரை கடன் பெறலாம்.
மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme - MIS):
மாதாந்திர வருமான திட்டம் என்பது முதலீடு செய்வதன் மூலம் நிலையான மாதாந்திர வருமானத்தை பெறும் ஒரு முதலீட்டு திட்டமாகும். இந்தத் திட்டம் ஓய்வு பெற்றவர்களுக்கும், நிதி ஸ்திரத்தன்மையை தேடும் ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது. முதலீட்டு தொகைக்கு ஏற்றவாறு வட்டி மாதந்தோறும் வழங்கப்படும். தற்போது 7.4% ஆண்டு வட்டி வழங்குகிறது. ஒரு கணக்கிற்கு 9 லட்சம் ரூபாய் வரையிலும், கூட்டுக் கணக்குகளுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate - NSC):
தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது இந்திய அரசு வழங்கும் ஒரு பாதுகாப்பான சேமிப்பு திட்டமாகும். இது சிறிய மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு சேமிப்பை ஊக்குவிப்பதோடு, வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது.
இந்த சான்றிதழ்களை இந்தியாவில் உள்ள எந்த ஒரு தபால் நிலையத்திலோ அல்லது சில வங்கிகளிலோ பெற முடியும். தற்போது 7.7% ஆண்டு வட்டி வழங்குகிறது. வயது வந்தவர்கள், மைனர்கள்(பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம்), மற்றும் கூட்டாக முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு ஏற்றது. ஐந்து வருட கால வைப்புத் திட்டமாகும். 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரிச் சலுகை உண்டு.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(Senior Citizen Savings Scheme. - SCSS):
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மூலம் தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இது 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சிறந்த பாதுகாப்பான திட்டமாகும். இந்தத் திட்டத்தில் கவர்ச்சிகரமான வட்டி விகிதம், வரிச் சலுகைகள் மற்றும் வழக்கமான வருமானம் போன்ற நன்மைகள் உள்ளன. இத்திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் தங்களின் ஓய்வுக்கால வாழ்க்கைக்கு நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். குறைந்தபட்சமாக 1000 ரூபாய் மற்றும் அதிகபட்சமாக 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். காலாண்டு அடிப்படையில் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகளாகும். மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund - PPF):
இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். தற்போது 7.1% வட்டி வழங்கப்படுகிறது. 15 வருட லாக்-இன் காலம் கொண்டது. வரிச் சலுகைகளுடன் கவர்ச்சிகரமான வட்டி வருவாயை வழங்குகிறது.
ஒரு நிதியாண்டில் ரூ.500 முதல் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும் இது EEE வகை முதலீடாக இருப்பதால், முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை என மூன்று நிலைகளிலும் வரி விலக்கு உண்டு.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY):
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த சிறுசேமிப்பு திட்டத்திற்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் மற்றும் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். பெண் குழந்தைகளுக்கு 10 வயதுக்குள் அவர்களது பெயரில் கணக்கு தொடங்கலாம். வருமானவரிச் சலுகை மற்றும் வரியில்லாத முதிர்வும் இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களாகும். பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50% வரை பணம் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.
இந்தத் திட்டங்களின் நன்மைகள்:
அனைத்து தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களும் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் மிகவும் பாதுகாப்பானவை.
கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் நம் முதலீட்டை வளர்க்க உதவும் வகையில் வழங்குகின்றன.
PPF மற்றும் NSC போன்ற சில திட்டங்கள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80Cன் கீழ் வரிவிலக்கை வழங்குகின்றன.
MIS மற்றும் SCSS போன்ற திட்டங்கள் வழக்கமான வருமானத்தை ஈட்ட விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.