

கடனில் மாட்டிக்கொண்டுவிட்டால், அதனை விட்டு வெளியேறுவதற்கு முக்கியமான சாதனம் நிதி திட்டமிடல். நிதி திட்டமிடலை ஆங்கிலத்தில் பட்ஜெட் என்றழைப் பார்கள். நிதி திட்டமிடலின் மூலமே நம்மால் கடனில் இருந்து வெளிவர முடியும்.
நிதி திட்டமிடல் நிதியின் மீதான நமது ஆளுமையை அதிகரிக்கிறது. கடனைச் சார்ந்த மனஉளைச்சலைக் குறைக்கிறது. நிதி திட்டமிடலில், நிதி எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்ற திட்டமிடல் நிகழ்கிறது. எவ்வாறு ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்வதற்கு வரைபடம் உதவுகிறதோ அவ்வாறே கடனுள்ள என்ற ஊரிலிருந்து கடனற்ற என்ற ஊருக்குப் பயணப்படுவதற்கு நிதிதிட்டமிடல் என்ற திட்டம் உதவுகிறது. நிதி திட்டமிடலில் ஒவ்வொரு ரூபாய்க்கும் வேலை கொடுக்கப்படுகிறது.
பல்வேறு நிதி திட்டமிடல் முறைகள் உள்ளன. காகித முறை நிதி திட்டமிடல், 50/30/20 நிதி திட்டமிடல், பூஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்ட நிதி திட்டமிடல், 60% நிதி திட்டமிடல் என பல்வேறு நிதி திட்டமிடல் முறைகள் உள்ளன. அவற்றில் கடன்களை அடைக்க மிகவும் சிறந்த முறையாக பூஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்ட நிதி திட்டமிடல்(Zero Based Budget) என்பதனை அமெரிக்காவின் பிரபல நிதி மேலாண்மை நிபுணரான டேவ் ராம்சே அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பூஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்ட நிதி திட்டமிடலை எவ்வாறு பயன்படுத்தி கடனை அடைக்கவேண்டும் ?
நிதி திட்டமிடலில் மூன்று விஷயங்கள் முக்கியம்.
நமது வருமானம் - இதனை எவ்வளவு அதிகரிக்க முடியுமோ அதிகரிக்க பார்க்க வேண்டும். உதாரணமாக, பகுதி நேரத்தில் வேறு ஒரு வேலைக்கு செல்வது, வீட்டில் மனைவியும் வேலைக்கு செல்வது, வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை விற்பது போன்றவை.
நமது செலவு - இதனை எவ்வளவு குறைக்க முடியுமோ குறைக்கப் பார்க்க வேண்டும். உதாரணமாக, வெளியே உணவருந்துவது, திரையரங்குகள் செல்வது, சஞ்சிகைககள் வாங்குவது போன்றவை.
நமது நிதிக்குறிக்கோள்கள் - இதனை எவ்வளவு சீக்கிரம் அடைய முடியுமோ அடையப் பார்க்க வேண்டும். உதாரணமாக, அவசர கால நிதி தயாரிப்பது, கடன்களை அடைப்பது, ஓய்வு காலத்திற்கான நிதி திரட்டுவது, குழந்தைகளின் மேல்படிப்பிற்கு நிதி திரட்டுவது போன்றவை.
கடனுள்ள என்ற ஊரிலிருந்து கிளம்பும் முன் செய்ய வேண்டியது;
அவசர கால நிதியை குறைந்தபட்சம் ரூபாய் 10000 தயார் செய்யும் வரை, கடன்களுக்கு மாத தவணை மட்டும் செலுத்தவேண்டும். கடன்களை அடைப்பதற்கு முன்பு, இது முக்கியமானது. ஏனென்றால், இதன் மூலம், நாம் மறுபடி அவசர தேவைகளுக்குக் கடன் வாங்குவதைத் தவிர்க்க உதவும். அமெரிக்காவின் பிரபல நிதி மேலாண்மை நிபுணர் டேவ் ராம்சே, கடன்களை அடைப்பதற்கு முன்பு, அடிப்படையான அவசர கால நிதியைத் தயார் செய்வதன் முக்கியத்துவத்தை தனது பணக்காரன் ஆவதற்கான குழந்தை நடைப் பயிற்சியில் (Baby Steps) இதனைக் குறிப்பிடுகிறார்.
கடனுள்ள என்ற ஊரிலிருந்து கடனற்ற என்ற ஊரை நோக்கிய பயணத்தில் பின்பற்ற வேண்டிய பூஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்ட நிதி திட்டமிடல்;
1. உங்களது எல்லா வரவுகளையும் பட்டியலிடுங்கள்.
2. உங்களது எல்லா செலவுகளையும் பட்டியலிடுங்கள். இவ்வாறு செலவுகளைக் குறித்த பட்டியல் இல்லையெனில், ஒரு மாதம் வரவு செலவு கணக்கு எழுதவேண்டும். அடுத்த மாதம், முதலாவது படியிலிருந்து துவங்கவேண்டும்.
3. செலவுகளை வகைப்படுத்த வேண்டும். பின்வரும் வகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உணவு, உடை, இருப்பிடம், வாகனங்கள், பொழுதுபோக்கு, பயன்பாடுகள், குடும்பம், மருத்துவம், கடன், பயணம், சுற்றுலா, காப்பீடு, சுய பராமரிப்பு, பரிசுகள், ஈகை
4. இப்போது, வரவு மற்றும் செலவுக்கான வித்தியாசத்தைப் பார்க்கவேண்டும்.
வரவு அதிகமாக இருந்தால், அதனைக் கடன்களை அடைக்க திருப்ப வேண்டும். வரவு மற்றும் செலவுக்கான வித்தியாசம் பூஜ்ஜியமாக இருக்கவேண்டும்.
செலவு அதிகமாக இருந்தால், செலவினைக் குறைக்க வேண்டும். வரவினை அதிகரிக்க முயலவேண்டும். வரவு மற்றும் செலவுக்கான வித்தியாசம் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். வரவு மற்றும் செலவு சமமாக இருந்தால், வரவு மற்றும் செலவுக்கான வித்தியாசம் பூஜ்ஜியமாக இருக்கும்.
உதாரணமாக, ஒருவரது வருமானம் 40,000 ரூபாய் என இருந்தால்,
மளிகை - ரூ. 4000
பால் - ரூ. 2000
வீட்டுக் கடன் - ரூ. 10000
தனிநபர் கடன் - ரூ. 5000
கடன் அட்டைக் கடன் - ரூ. 5000
நண்பரின் கைமாற்றுக் கடன் - ரூ. 2000
வாகனக் கடன் - ரூ. 3000
வெளியே சென்று சாப்பிட - ரூ. 1000
சஞ்சிகைகள் சந்தா - ரூ. 500
இணையத் தொடர்பு - ரூ. 1000
மின்சாரக் கட்டணம் - ரூ. 2000
கைப்பேசி கட்டணம் - ரூ. 500
நன்கொடை - ரூ. 1000
வருட இறுதிச் சுற்றுலா - ரூ. 2000
காப்பீட்டுத் தவணை - ரூ. 1000
மொத்த வரவு - ரூ. 40000
மொத்த செலவு - ரூ. 40000
வித்தியாசம் - ரூ. 0 (பூஜ்ஜியம்)
வரவினை அதிகரிக்க முயலவேண்டும். செலவினைக் குறைக்க முயலவேண்டும். இவற்றின் மூலம், அதிக பணம் மீதமாகும். இவ்வாறு மீதமாகும் பணத்தைக் கடனை அடைக்க திருப்ப வேண்டும். மேற்கண்ட நிதி திட்டமிடலில், வெளியே சென்று சாப்பிடுவது, சஞ்சிகைகள் வாங்குவது, வருட இறுதி சுற்றுலா போன்றவற்றிற்கு ஒதுக்கிய பணத்தை, கடனை அடைக்கப் பயன்படுத்தி, கடனை சீக்கிரம் அடைக்கப் பார்க்கவேண்டும். வீட்டுக் கடனையும் சீக்கிரமாக அடைக்க முயலவேண்டும்.
கடன்களை பனிப்பந்து முறையில், சிறிய பாக்கி கடன் முதல் பெரிய பாக்கி கடன் வரை, வரிசைப்படுத்தி, சிறிய பாக்கி கடனைத் தவிர மற்றக் கடன்களுக்கு மாதாந்திர தவணைத் தொகை மட்டும் செலுத்த வேண்டும். மீதமுள்ள பணத்தை, சிறிய பாக்கி கடனை அடைக்கத் திருப்ப வேண்டும். சிறிய பாக்கி கடனை அடைத்த பிறகு, இவ்வாறு வரிசையிலுள்ள மற்ற சிறிய பாக்கி கடன்களை அடைத்து முடிக்க வேண்டும். இவ்வாறு வீட்டுக் கடனைத் தவிர மற்ற எல்லா கடன்களையும் அடைத்து விட வேண்டும். வீட்டுக் கடன் மட்டும் விதிவிலக்கு. ஏனென்றால், அதற்கு அரசாங்கத்தின் வரி விலக்கு உண்டு. மேலும், அது ஒரு அத்தியாவசியமான தேவை. அதனைக் கட்டி முடிப்பதற்கு காலமாகும். எனவே மற்ற கடன்களைக் கட்டி முடித்த பிறகு நிதிக் குறிக்கோள்களுக்கு பணத்தை ஒதுக்க வேண்டும். நிதிக்குறிக்கோள்களுக்கு மாதா மாதம் ஒதுக்கியது போக, மீதமுள்ள பணத்தை வீட்டு கடனை அடைப்பதற்கு திருப்ப வேண்டும். வீட்டு கடனைக் கூட எவ்வளவு சீக்கிரம் அடைக்க முடியுமோ அடைத்து விடவேண்டும்.
5. மாதக்கடைசியில், நிதி திட்டமிடலை மறுபடி சரிபார்த்து, நிதி திட்டமிடலை மீறி செலவு செய்தாலோ, அல்லது ஒரு வகைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கியிருந்தாலோ, அடுத்த மாத நிதி திட்டமிடலில் மாற்றங்களைச் செய்யவேண்டும். வரவு மற்றும் செலவிற்கான வித்தியாசம் பூஜ்ஜியமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி திட்டமிடலைப் பயன்படுத்துவதன் மூலம் நம்மால் கடனைச் சீக்கிரமாக அடைத்துவிட முடியும்.
நிதி திட்டமிடலைப் பயன்படுத்தி கடனை விட்டு வெளியேறுவோம். கடனில்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.