
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு கடனை வழங்குகின்றன. பொருளாதார வளர்ச்சி உயர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் கடன் வழங்குதல் மிகவும் எளிதாகி விட்டது. ஆனால், வட்டி விகிதம் மட்டும் குறையவில்லை. எப்படி குறையும், இதில் தானே பல நிறுவனங்கள் வருமானத்தை ஈட்டுகின்றன. வங்கியில் கடன் வாங்கிய பலரும் மாதத்தவணையை கட்ட பெரிதும் சிரமப்படுகின்றனர். இவர்கள் ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ முறையைத் தேர்ந்தெடுப்பது சாதகமா அல்லது பாதகமா என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
கல்விக் கடன், தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன் போன்ற பல கடன்கள் வங்கிகளில் வழங்கப்படுகின்றன. பொதுவாக இவ்வகை கடன்களுக்கு எவ்வித பிணையமும் இல்லாததால் தான் வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆனால் நகைக் கடனில் பிணையமாக தங்க நகைகளைக் கொடுப்பதால் வட்டி குறைவாக இருக்கும். இன்று மாதச் சம்பளம் வாங்கும் பலரும் கடனில் தத்தளிக்கிறார்கள் என்பது சொல்லப்படாத உண்மை. மாதச் சம்பளத்தில் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு, மாதத் தவணையையும் செலுத்த வேண்டி இருப்பதால் இவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
மாதத் தவணையைக் கட்ட முடியாமல் போகும் சமயத்தில் வட்டித் தொகை அதிகமாகி விடும். இந்தச் சூழல் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு மேலும் சிரமத்தை உண்டாக்கி விடும். இதுமாதிரியான நேரத்தில் எப்படியாவது ஒன் டைம் செட்டில்மென்ட்டை செலுத்தி கடன் தொல்லையில் இருந்து விடுபட நினைக்கலாம். இருப்பினும் இது பாதுகாப்பானதா என்பதைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு நீங்கள் நேரடியாக வங்கியை அணுகி, இனி மாதந்தோறும் தவணையை செலுத்த முடியாது. ஆகையால் ஒன் டைம் செட்டில்மென்ட் செய்து விடுகிறேன் என சொன்னால், வங்கிகள் அதனை ஏற்றுக் கொள்ளும். சிலசமயம் வங்கிகளே இதனைப் பரிந்துரைக்கவும் செய்கின்றன. இதில் வங்கிகள் நிர்ணயிக்கும் ஒரு குறிப்பிட்டத் தொகையை மொத்தமாக செலுத்த வேண்டும்.
ஒன் டைம் செட்டில்மென்ட் என்பது தற்காலிகத் தீர்வு மட்டுமே. பொருளாதார உலகில் இதனுடைய பாதிப்புகள் நம்மைப் பின்தொடரும். இதனால் முதலில் பாதிக்கப்படுவது நம்முடைய சிபில் ஸ்கோர் தான். கடன் வாங்கிய பிறகு மாதத் தவணையை சரியாக செலுத்தி வந்தால், சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்கும். தவணையை கட்ட முடியாத சூழலில் சிபில் ஸ்கோர் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். ஒன் டைம் செட்டில்மென்ட் செய்யும் போது, சிபில் ஸ்கோரில் இதற்கான விவரங்கள் பதிந்து விடும். இதன் காரணமாக அடுத்த முறை மீண்டும் கடன் வாங்குவதில் சிக்கல் ஏற்படும்.
நீங்கள் நம்பிக்கையான கடனாளி இல்லை என்பதையும், கடனை முறையாக திருப்பிச் செலுத்தாதவர் என்பதையும் உங்கள் சிபில் ஸ்கோர் பிரதிபலித்து விடும். இதனைக் காணும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், உங்களால் நிதி நிர்வாகத்தை சரியாக மேற்கொள்ள முடியாது என்பதை தெரிந்து கொள்ளும். இதனால் அடுத்தடுத்த கடன்களை வழங்குவதில் வங்கிகள் தயக்கம் காட்டுவதோடு, மறுக்கவும் செய்யலாம்.
அப்படியே ஒருவேளை கடனைக் கொடுத்தாலும், மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு அதிக வட்டியை விதிப்பார்கள். இருப்பினும் மாதத் தவணையைக் கட்டுவதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதைத் தடுக்க ஒன் டைம் செட்டில்மென்ட் உதவலாம்.