

இந்த எழுத்து, ‘காப்பி கேட்’ முதலீட்டை முழுமையாக மறுப்பதில்லை; ஆனால், அதை ஆய்வு கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. உச்ச முதலீட்டாளர்களின் பங்குத் தேர்வுகளை ‘திசைகாட்டி’யாகக் கொண்டு, நிறுவனத்தின் வணிக மாதிரி, விற்பனை, லாபம், கடன் நிலை, அவர்களின் பங்கு சதவீதம், தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்களா போன்ற அம்சங்களை ஆராய்ந்து, காரணம் புரிந்த பின் மட்டுமே முதலீடு செய்யவேண்டும் என அறிவுறுத்துகிறது.
பங்குச் சந்தையில் புதிதாக நுழைபவர்கள் பலருக்கும் ஒரு குறுக்கு வழி யோசனை தோன்றுவது உண்டு: "நாமாக உட்கார்ந்து நிறுவனங்களை ஆராய்ந்து நேரத்தை வீணாக்குவானேன்? சந்தையின் பெருந்தலைகளான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, விஜய் கேடியா, ஆஷிஷ் கச்சோலியா போன்ற உச்ச முதலீட்டாளர்கள் (Super Investors) வாங்கும் பங்குகளை அப்படியே நாமும் வாங்கிவிட்டால் எளிதாக லாபம் பார்த்துவிடலாமே!"
இந்தியப் பங்குச்சந்தை முதலீடு பிரசித்தி பெற்ற இந்த நட்சத்திர முதலீட்டாளர்கள் பற்றி சிறுகுறிப்பு:
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (Rakesh Jhunjhunwala) 'இந்தியாவின் வாரன் பஃபெட்' மற்றும் 'பெரிய காளை' (Big Bull) என்று சிறப்பிக்கப்படுகிறவர்.
விஜய் கேடியா (Vijay Kedia) சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகளில் (Mid-cap & Small-cap) வெற்றிகரமாக முதலீடு செய்வதற்குப் பெயர் பெற்றவர்.
இந்தியப் பங்குச் சந்தைகளில் ‘பெரிய திமிங்கிலம்’ (Big Whale) எனப் பரவலாக அறியப்படுகிற ஆஷிஷ் கச்சோலியாவும் (Ashish Kacholia) அதிவேக வளர்ச்சி கொண்ட ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளில் கவனம் செலுத்துபவர்.
இவர்களைப் போன்றவர்களின் தேர்வை அப்படியே நகல் எடுக்கும் முறைக்கு நிதி உலகில் 'க்ளோனிங்' (Cloning) அல்லது 'நகலெடுப்புப் பூனை முதலீடு’ (Copycat Investing) என்று பெயர்.
வல்லுநர்களின் அடியொற்றி நடப்பதில் தவறில்லைதான். ஆனால், சந்தையில் குருட்டுத்தனமாக மற்றவர்களை நகல் எடுப்பது, கண்மூடித்தனமாகக் கிணற்றில் குதிப்பதற்குச் சமம்.
அப்படியென்றால், உச்ச முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவைப் பின்பற்றவே கூடாதா? அவ்வாறு செய்தால் நமக்கும் அந்த லாபம் கிடைக்கும் அல்லவா? அதில் என்ன தவறு?
இந்தக் கேள்விகள் எழுவது இயல்பு.
ஆபத்து நிறைந்த 'அப்பட்டமான நகல்'
உச்ச முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவைப் பின்பற்றக் கூடாது என்று சட்டமோ, ஒழுக்க விழுமியங்கள் போன்ற தடைகளோ கிடையாது.
அதை அப்படியே காப்பியடிப்பது அல்லது நகலெடுப்பது கூடாது என்றுதான் நிபுணர்களால் பரிந்துரைக்கப் படுகிறது. காரணம், அதில் சில நடைமுறைச் சிக்கல்களும் ஆபத்துகளும் உள்ளன என்பதுதான்.
1. தாமதமான தகவல் (Time Lag): ஒரு உச்ச முதலீட்டாளர் ஏப்ரல் மாதத்தில் ஒரு பங்கினை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் எவ்வளவு பங்குகளை வாங்கினார் என்ற தகவல் பங்குச் சந்தை விதிகளின்படி (Bulk/Block Deals அல்லது காலாண்டு அறிக்கை) ஜூலை மாதத்தில்தான் பொதுமக்களுக்குத் தெரியவரும். அதாவது, அவர் வாங்கி 3 மாதங்கள் கழித்தே உங்களுக்குச் செய்தி தெரியவரும். அதற்குள் அந்தப் பங்கின் விலை கணிசமாக உயர்ந்திருக்கக்கூடும்.
2. வாங்கிய விலை மாறுபடும்: அவர் ₹100-க்கு வாங்கிய பங்கை, நீங்கள் செய்தி கேள்விப்பட்டு ₹160-க்கு வாங்கினால், அவருக்குக் கிடைக்கும் லாபமும் பாதுகாப்பு விளிம்பும் (Margin of Safety) உங்களுக்குக் கிடைக்காது.
3. வெளியேறும் வழி தெரியாது: ஒரு பங்கை வாங்குவதைவிட, அதை எப்போது விற்கிறோம் என்பதே முக்கியம். அந்த உச்ச முதலீட்டாளர் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்தப் பங்கை விற்றுவிட்டு வெளியேறினால், அந்தத் தகவல் உங்களுக்கு மீண்டும் சில மாதங்கள் கழித்தே தெரியும். அதற்குள் உங்கள் முதலீடு கனத்த நஷ்டத்தைச் சந்திக்கக்கூடும்.
4. மூலதனத்தின் அளவு (Risk Capacity): பல நூறு, ஆயிரம் கோடிகளை வைத்திருக்கும் ஒரு முதலீட்டாளருக்கு, ஒரு பங்கி்ல் ஒரு கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் அது அவருக்குப் பொருட்டல்ல. ஆனால், சில ஆயிரம் ரூபாய் இழப்பே உங்களுக்குக் கணிசமான இழப்பாகவும், பாதிக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.
ஸ்மார்ட் காப்பி கேட்
கலை, இலக்கியம், நிகழ்த்துகலைகள் போன்றவற்றில் ‘காப்பி கேட்’ என்பது இழிவான சொல். தனித்துவம் அடிப்படை அலகாகவும், பெருமைக்குரியதாகவும் உள்ள சூழல் அது. ஆனால், முதலீடு போன்ற பொதுச் செயல்பாடுகளில் தனித்துவம் போன்ற அலகுகளோ, அழகியல் இலக்கணங்களோ கிடையாது; தேவையும் இல்லை. ஆனால், ‘ஈயடிச்சான் காப்பி’யாகக் காப்பியடித்து நஷ்டத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது.
உச்ச முதலீட்டாளர்களுடையதை மட்டுமல்ல; வேறு எந்த முதலீட்டாளர்களுடைய சிறந்த போர்ட்ஃபோலியோவை வேண்டுமாயினும் காப்பியடிக்கலாம்; ஆனால், ஸ்மார்ட்டாக!
உங்களைக் கவரக்கூடிய போர்ட்ஃபோலியோக்களை 'முதலீட்டு மாடலாக'ப் பார்க்காமல், ஆய்வு மாதிரியாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே 'ஸ்மார்ட் காப்பி கேட்' அணுகுமுறை!
• சுய ஆராய்ச்சி: அவர் வாங்கிவிட்டார் என்பதற்காகவே உடனடியாக வாங்கக் கூடாது. "அவர் ஏன் இந்தப் பங்கை வாங்கியிருப்பார்? இந்த நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபம் எப்படி இருக்கிறது? கடன் அளவு என்ன?" என உங்களது சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.
• காரணம் புரிந்தால் மட்டுமே முதலீடு: அந்த நிறுவனத்தின் வணிக மாதிரி (Business Model) உங்களுக்குத் தெளிவாகப் புரிந்து, அதன் எதிர்கால வளர்ச்சி மீது உங்களுக்கும் நம்பிக்கை பிறந்தால் மட்டுமே உங்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.
போர்ட்ஃபோலியோவை ஆராயும் உத்திகள்
‘காப்பி பங்கை’ வாங்கும்போது, அதன் பின்னணியில் உள்ள சில முக்கிய அம்சங்களைக் கவனிக்க வேண்டும்:
• அவர் எத்தனை சதவீதம் வாங்கியிருக்கிறார்? தனது மொத்த போர்ட்ஃபோலியோவில் 0.5% அல்லது 1% மட்டுமே வாங்கியிருந்தால், அதை அவர் சோதனை முயற்சியாகக் கருதுகிறார் என்று அர்த்தம். ஆனால், தன் பணத்தில் 10% வரை ஒரே பங்கில் போட்டிருக்கிறார் என்றால், அவருக்கு அந்த நிறுவனத்தின் மீது பலமான நம்பிக்கை இருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.
• தொடர்ந்து கூட்டுகிறாரா? அடுத்தடுத்த காலாண்டு களிலும் அவர் அந்தப் பங்கின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்துகிறாரா (Accumulation) என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
சாணக்கியத்தனம்
மற்றவர்களின் சிந்தனையைத் திருடுவது தவறாக இருக்கலாம்; ஆனால், சந்தையில் சிறந்த முதலீட்டாளர் களின் செயல்பாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு நம் முதலீட்டைச் செம்மைப்படுத்திக்கொள்வது சாணக்கியத்தனம்.
உச்ச முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோக்கள் உங்களுக்கு வழிகாட்டும் 'திசைகாட்டிகள்' மட்டுமே; அவை 'இலக்குகள்' அல்ல.
அவர்களின் பட்டியலிலிருந்து தொடக்கப் புள்ளியை எடுத்துக்கொண்டு, உங்கள் சொந்த அறிவாலும் ஆராய்ச்சியாலும் இறுதி முடிவை எடுப்பதே ஸ்மார்ட் முதலீட்டாளருக்கு அழகு!
பெரிய முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவை குருட்டுத்தனமாக நகலெடுக்காமல், அவர்களின் தேர்வை ஒரு ஆராய்ச்சி மாதிரியாகப் பயன்படுத்தி நஷ்டத்தைத் தவிர்க்கும் 'ஸ்மார்ட் காப்பி கேட்' உத்தியைக் கற்றுக்கொள்வீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: