

நம்மில் பலரும் அவசரத் தேவைக்கு கடன் வாங்கியிருக்கிறோம். இது மிகச் சாதரணமானதுதான். வங்கிக் கடன்களின் விதிகள் தளர்வடைந்த பிறகு, கடன் வழங்கும் நடைமுறையும் எளிதாகிவிட்டது. இதனால் ஆண்டுதோறும் வங்கிக்கடன் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வங்கிக் கடன் மட்டுமல்ல கிரெடிட் கார்டு வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இன்றைய இளம் தலைமைறையினர், கிரெடிட் கார்டுகளை ஏடிஎம் கார்டு போல பயன்படுத்தி வருவதால் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்கின்றனர்.
தீபாவளி ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டைப் பயன் படுத்தியவர்கள் அதிகம் பேர். இவர்கள் கிரெடிட் கார்டு பில்லை உரிய நேரத்தில் கட்டி விடவேண்டும். இல்லையெனில் அதிகபட்ச வட்டியை செலுத்த நேரிடும். ஒருசிலர் குறைந்தபட்சத் தொகையை கட்டி விட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடுவர்.
ஆனால் குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்துவது நிரந்தரத் தீர்வு இல்லை. இது அப்போதைய அபராதத் தொகையில் இருந்து மட்டுமே நிவாரணம் அளிக்கும். ஆனால் நீண்ட கால அளவில் இதுவே உங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்துவிடும்.
குறைந்தபட்சத் தொகையை மட்டும் கட்டுவதால் ஏற்படும் 5 பாதிப்புகள்:
மிகக் கடுமையான வட்டி சுமை:
கிரெடிட் கார்டு பில் தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் 36% முதல் 45% வரை வசூலிக்கப்படும். சில நிதி நிறுவனங்களில் இதற்கும் மேல் இருக்கும். பில் தொகையில் குறைந்தபட்சத் தொகையை நீங்கள் கட்டிய பிறகு, மீதமிருக்கும் முழு அசல் தொகைக்கும் இந்த அதிகப்படியான வட்டிதான் கணக்கிடப்படும்.
வட்டி இல்லா சலுகைக் காலம்:
கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி சில பொருட்களை வாங்கும்போது, தள்ளபடியும், வட்டியில்லா சலுகை காலமும் கிடைக்கும். நீங்கள் முழு பில் தொகையையும் கட்டாமல், குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்தினால், சலுகை காலம் உடனடியாக ரத்தாகி விடும். இதற்குப் பின் கிரெடிட் கார்டின் ஒவ்வொரு புதிய பரிவர்த்தனைக்கும் முதல் நாளில் இருந்தே வட்டி கணக்கீடு செய்யப்படும்.
வட்டி மீது 18% ஜிஎஸ்டி:
உங்கள் நிலுவைத் தொகைக்கு கிரெடிட் கார்டு நிறுவனம் விதிக்கும் மொத்த வட்டித் தொகைக்கு, கூடுதலாக 18% ஜிஎஸ்டி (GST) வரியும் சேர்க்கப்படும். இதனால் உங்கள் மாதாந்திர பில் தொகை மேலும் உயர்ந்துவிடும்.
சிபில் ஸ்கோர் சரிய வாய்ப்பு:
பொதுவாக கடன் வாங்கிவிட்டு மாதத்தவணையை சரியாக திருப்பிச் செலுத்தவில்லை என்றாலே சிபில் ஸ்கோர் சரிந்து விடும். இதே நிலைமைதான் கிரெடிட் கார்டு பில்லுக்கும் பொருந்தும். கிரெடிட் கார்டு பில்லில் குறைந்தபட்சத் தொகையை மட்டும் தொடர்ந்து கட்டி வந்தால், சிபில் ஸ்கோர் குறைந்துவிடும். இதனால் நீங்கள் கடனை அடைக்க முடியாமல் நிதி நெருக்கடியில் சிரமப்படுவதாக வங்கி அமைப்புகள் கருதும். இதனால் வருங்காலத்தில் வங்கியில் கடன் பெறுவதே கடினமாகி விடும்.
பில் தொகை முடிய பல ஆண்டுகள் ஆகும்:
தீபாவளிக்கு நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.50,000 வரை ஷாப்பிங் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்தத் தொகையை திருப்பி செலுத்த முடிய்மல் மாதந்தோறும் குறைந்தபட்சத் தொகையை மட்டுமே கட்டினால், அந்த அசல் கடனை அடைக்க சுமார் 5 முதல் 8 ஆண்டுகள் வரை ஆகலாம். இறுதியில் ஷாப்பிங் செய்த தொகையை விட 2 முதல் 3 மடங்கு பெரிய தொகையை நீங்கள் வட்டியாகவே கட்டியிருப்பீர்கள்.
மாற்றுத் தீர்வுகள் என்ன?
* EMI-ஆக மாற்றுவது:
தீபாவளிக்கு ஷாப்பிங் செய்த பிறகு, முழுத் தொகையையும் கட்ட முடியாத பட்சத்தில் கிரெடிட் கார்டு செயலியிலேயே மாத EMI-ஆக மாற்றிக்கொள்ளலாம். இதன்மூலம் வட்டி குறைவதோடு, கடன் தொகையும் விரைவில் அடைந்துவிடும்.
* தனிநபர் கடன் அல்லது நகைக்கடன்:
கிரெடிட் கார்டு பில் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில், வங்கிக்கடன் வாங்குவது சிறந்தது. வங்கியில் தனிநபர் அல்லது நகைக் கடன் பெற்று, பில் தொகையை அடைக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.