கிரெடிட் கார்ட் பில்: ஒரு நாள் தாமதமானாலும் ₹2500 நஷ்டமா? அதிர்ச்சித் தகவல்கள்!

ஒரே ஒரு நாள் தாமதம் உங்கள் பாக்கெட்டை எவ்வாறு காலி செய்கிறது என்பதை விளக்கும் உண்மை பதிவு.
கிரெடிட் கார்ட் - Credit Card Late Payment
கிரெடிட் கார்ட் - Credit Card Late Payment
வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

Venkataraman Ramasubramanian (வெங்கடராமன் ராமசுப்ரமணியன்) பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மூத்த தொழில்நுட்ப கட்டமைப்பாளராகப் பணிபுரிகிறார். தமிழில் இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ்க் கோராவில் சான்றமை எழுத்தாளர் விருது பெற்றவர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம், யோகாவில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார். வேதாத்திரி மகரிஷி மனவளக்கலையில் துணைப் பேராசிரியராக சேவை செய்து வருகிறார். எழுத்துக்கலை, தனிமனித நிதி, தமிழ் ஆர்வலர்.

Updated on: 

கடன் அட்டைக் கடன்(Credit card loan) வாங்கும்போது, கடன் தவணை நாள்(Due Date) தாண்டி ஒரிரு நாள் தாமதமாக செலுத்தினால் பிரச்னை வராது என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், கடன் பாக்கி செலுத்தும் போது, ஒரு நாள் தாண்டி செலுத்தினால் கூட, ஏற்படும் பாதிப்புகள் அதிகம். கடன் அட்டைக் கடன் என்பது இருமுனை கத்தி போல என உணர்ந்துகொள்ள வேண்டும்.

கடன் அட்டைக் கடன் ஒரு நாள் தாமதமாக செலுத்தினால் என்ன பண இழப்பு நேரும்?

அட்டைக் கடனை ஒரு நாள் தாமதமாக செலுத்தினால், பின்வரும் விதங்களில் பணத்தை இழக்க நேரிடும்.

1) தாமதமாக கடன் பாக்கி செலுத்துவதன் காரணமாக அபராதம் (Late payment penalty)

2) கடந்த மாத பாக்கி கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி (Accrued Interest)

3) இந்த மாதம் கடன் அட்டை பரிவர்த்தனைகளுக்கு பரிவர்த்தனை தேதி முதலே கணக்கிடப்படும் வட்டி(Accrued Interest)

4) அபராதம், வட்டி போன்றவற்றிற்கு செலுத்த வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (Good and Services Tax- GST)

இதையும் படியுங்கள்:
சொந்த வீடு கனவு நனவாக வேண்டுமா? கடன் வாங்குவது எப்படி லாபம்!
கிரெடிட் கார்ட் - Credit Card Late Payment

உதாரணமாக, ஜனவரி மாதத்திற்கான 1 இலட்சம் ரூபாய் கடன் பாக்கி செலுத்த வேண்டிய தவணை நாள் பிப்ரவரி 20 எனக் கொள்வோம். பிப்ரவரி 21 ஆம் தேதி, அதாவது ஒரு நாள் தாமதமாக நீங்கள் செலுத்துவதாக கணக்கில் கொள்வோம். அதன் காரணமாக, கணக்கிடப்படும் தொகைகளைப் பார்ப்போம்.

1) ஜனவரி மாதக் கடன் பாக்கித் தொகையைத் தாமதமாக செலுத்துவதன் காரணமாக அபராதம் - இது கடன் பாக்கி தொகைக்கு ஏற்ப மாறுபடும்.

ரூபாய். 50 ஆயிரத்திற்கு மேலேயுள்ள தொகைக்கு, அபராதம் ரூபாய். 1000 என்று கொள்வோம்.

2) ஜனவரி மாத கடன் பாக்கித் தொகைக்கு செலுத்த வேண்டிய வட்டி - வட்டி விகிதம் ஒரு வருடத்திற்கு 24%(Annual Percentage Rate - APR) என்று கொள்வோம். எனவே, ஒரு நாளுக்கான வட்டி விகிதம் 24/365 = 0.0658%

ஒரு நாளுக்கான வட்டி = 1 இலட்சம் x 0.0658% = 65.8 ரூபாய்.

சிறிய தொகையாகத் தோன்றலாம். ஆனால், ஒரு நாளைக்கே இவ்வளவு வட்டி என்றால், நாட்கள் கூடக் கூட, வட்டி அதிகமாகும்.

3) பிப்ரவரி மாதம் கடன் அட்டை பரிவர்த்தனைகளுக்கு பரிவர்த்தனை தேதி(Transaction Date) முதலே கணக்கிடப்படும் வட்டி - கடன் அட்டைக் கடன் தவணை நாளில் செலுத்தவில்லையெனில், கடனுக்கான சலுகைக் காலம் (Grace Period) முடிவடைந்துவிடும். அதாவது, இந்த மாதத்திற்கான கடன் அட்டை செலவுகளுக்கு, பரிவர்த்தனை நாள் முதலே வட்டி கணக்கிடப்படும்.

நீங்கள் பின்வரும் செலவுகளைப் பிப்ரவரி மாதத்தில் செய்வதாக கொள்வோம்.

பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி - 50000 ரூபாய்

பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி - 50000 ரூபாய்

நீங்கள் இரண்டு பரிவர்த்தனைகள் செய்திருந்தால், பரிவர்த்தனை நாள் முதலே வட்டி கணக்கிடப்படும். பிப்ரவரி 21 ஆம் தேதி, பின்வரும் தொகை, உங்களது கடன் பாக்கியுடன் சேர்க்கப்படும். ஒரு நாளுக்கான வட்டி விகிதம் 24/365 = 0.0658%

கிரெடிட் கார்ட் - Credit Card Late Payment
கிரெடிட் கார்ட் - Credit Card Late Payment

பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி - 50000 ரூபாய் = 21 நாட்களுக்கான வட்டி = 50000 x 21 x 0.0658% = 690.9 ரூபாய்

பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி - 50000 ரூபாய் = 11 நாட்களுக்கான வட்டி = 50000 x 11 x 0.0658% = 361.9 ரூபாய்.

4) அபராதம், வட்டி போன்றவற்றிற்கு செலுத்த வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி - இங்கு அபராதம் மற்றும் கணக்கிடப்படும் வட்டிக்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தவேண்டும்.

இங்கு,

கடன் தாமதமாக செலுத்தியதால் அபராதத் தொகை = ரூபாய். 1000

ஜனவரி மாதக் கடன் பாக்கிக்கு ஒரு நாள் வட்டி = 65.8 ரூபாய்

பிப்ரவரி மாதத்திற்கு கடன் பாக்கிக்கு வட்டிகள் = 690.9 + 361.9 ரூபாய் = 1052.8 ரூபாய்

கடன் தொகைக்கு மேலான மொத்த அபராதத் தொகை = 1000 + 65.8 + 1052.8 = 2118.6 ரூபாய்

இந்த மொத்த அபராதத் தொகைக்கு = 18% சரக்கு மற்றும் சேவை வரி

2118.6 ரூபாய் x 18% = 381.35 ரூபாய்

எனவே, நீங்கள் கட்டும் மொத்த அபராதத் தொகை = 2118.6 + 381.35 = 2499.95 = தோராயமாக 2500 ரூபாய்.

இதையும் படியுங்கள்:
பான் கார்டு 10 இலக்க எண்ணில் இருக்கும் ரகசியம்: 4வது எழுத்து என்ன சொல்கிறது?
கிரெடிட் கார்ட் - Credit Card Late Payment

எனவே, நீங்கள் ஜனவரி மாதத்திற்கான ஒரு இலட்ச ரூபாய் கடனை ஒரு நாள் தாமதமாக செலுத்தியதன் காரணமாக, நீங்கள் இழக்கும் தொகை = 2500 ரூபாய்.

கடனட்டைக் கடன் ஒரு நாள் தாமதமாக செலுத்தினால் மற்ற என்ன பாதிப்புகள் நேரும் ?

இவ்வாறு ஒரு நாள் தாமதமாக கடன் பாக்கி செலுத்துவதை வங்கிகள் கடன் தகவல் நிலையங் களுக்குத் (Credit Information Bureau) தெரிவிப்பதில்லை. எனவே, சிபில் மதிப்பெண்(CIBIL Score) அடி வாங்காது. ஆனால், இவ்வாறு அடிக்கடி நடந்தால், வங்கியின் உள் தணிக்கையில்(Internal Audit), உங்களது கடன் அபாயகரமான கடன் என்று வங்கி கருதி, எதிர்காலத்தில் உங்களுக்கு கடன் கொடுப்பதில் பிரச்னை வரலாம்.

எனவே, நாம் அறிந்து கொள்வது, கடன் அட்டைக் கடன் வாங்கினால், தவணைத் தேதிக்கு முன்பு சரியாக செலுத்தி விடவேண்டும். இல்லையென்றால், ஒரு நாள் தாமதமானால் கூட, அதிக பணத்தை இழக்க நேரிடும். நாட்கள் கூடக் கூட, இழக்கும் தொகை அதிகமாகும்.

கடன் அட்டையைக் கையாள்வதில் உங்களுக்கு சிக்கல் எனில் பற்று அட்டையை (Debit Card) மட்டும் பயன்படுத்துங்கள். அங்கு பணமில்லையென்றால், உங்களால் செலவு செய்ய முடியாது. கடனிலோ, அபராதத் தொகையிலோ, வட்டியிலோ மாட்டிக்கொள்ள வாய்ப்பு கிடையாது.

இந்தத் தகவலை முழுமையாகக் கற்பதன் மூலம், கிரெடிட் கார்ட் நிறுவனங்களின் மறைமுகக் கட்டணங்கள் மற்றும் வட்டி கணக்கீடுகளைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு, தேவையற்ற பண இழப்புகளைத் தவிர்த்து உங்களின் மாதாந்திரச் சேமிப்பை உயர்த்த முடியும்.

இதையும் படியுங்கள்:
UPI புதிய கட்டணம்: உங்க அக்கவுண்டில் இருந்து பணம் பிடிப்பார்களா? NPCI அளித்த நிம்மதி விளக்கம்!
கிரெடிட் கார்ட் - Credit Card Late Payment
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com