

உலக அளவில் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளதோ, அதே அளவிற்கு மோசடிகளும் முன்னேறி உள்ளன. ஒரு காலத்தில் திருட்டு என்பது வீடு புகுந்து கொள்ளையடிப்பது , சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்வது போன்றவை மட்டுமே இருந்தது. தொழில்நுட்பம் அதிவேகமாக முன்னேறியதில் இருந்து ஒருவரை நேரில் பார்க்காமல் அவரிடம் கொள்ளையடிக்க முடியும் என்பதுதான், தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக இருக்கிறது.
இதனால் ஒர்க் ப்ரம் ஹோம் மூலமாகவே திருடர்களும் தங்கள் தொழிலை செய்து வருகின்றனர். அரசாங்கம் அதற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இணையதள மோசடிகள் இன்று வரை குறைவதே இல்லை.நாளுக்கு நாள் அதிகரிக்கும் இணையதளம் மோசடிகளால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ₹52,000 கோடிக்கும் மேற்பட்ட பணத்தினை இந்திய குடிமக்கள் இழந்துள்ளனர்.
இந்த மோசடிகளுக்கு எதிராக தொலைத்தொடர்புத்துறை மிகப் பெரிய நடவடிக்கை ஒன்றை தொடங்கியுள்ளது. அரசாங்கத்தின் உதவியுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மோசடி செய்யும் மொபைல் எண்களை கண்டறிந்து தொலைத்தொடர்புத்துறை முடக்கியுள்ளது.
மேலும் இந்த மோசடிகளுடன் தொடர்பு உள்ள லட்சக்கணக்கான வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியுள்ளது. மோசடி செய்பவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனைகளையும் இருட்டடிப்பு செய்துள்ளது. ஏராளமான வாட்சப் கணக்குகளும் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய LSA-வின் துணை தலைமை இயக்குநர் (நிர்வாகம்) அஜய் கமல், 2023-ஆம் ஆண்டின் தொலைத் தொடர்பு விதிகளும், 2024-ஆம் ஆண்டில் உருவாகிய தொலைத் தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகளும், இந்தியாவின் டிஜிட்டல் ஆளுமை மற்றும் சட்ட விதிகளை கடுமையாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மோசடிகளை கண்டறிதல், அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவற்றை செயல்படுத்திக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். சுமார் 60 லட்சம் இணைய மோசடி புகார்கள் இந்த காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அதே நேரம் 3,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் மட்டுமே சரியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன
6 பெரிய இணைய மோசடி அமைப்புகள் கண்டறியப்பட்டு, அவர்களை தடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாள மோசடி செய்து ஆள்மாற்றம் செய்வதை தடுப்பதற்காக, தொலைதொடர்பு பயனர்களுக்கு பயோமெட்ரிக் முறை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ,₹50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட உள்ளது.
தொலைதொடர்பு துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட 'சஞ்சார் சாத்தி' மொபைல் செயலி, தொலைந்து போன அல்லது திருடு போன கைபேசிகளை முடக்கவும், அது சம்பந்தமான மோசடிகளை புகார் அளிக்கவும் , கண்காணிக்கவும் ஆதரவளிக்கிறது. இந்த செயலி 1.7 கோடிக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் திருடு போன அல்லது காணாமல் போன 10 லட்சம் கைபேசிகள் முடக்கப்பட்டுள்ளன அல்லது கண்காணிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ₹1250 கோடிக்கும் மேலானது. இந்த கைபேசி எண் அனைத்தும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.
தொலைத் தொடர்பு துறையின் தொடர்ச்சியான நடவடிக்கையினால் சந்தேகத்திற்கு இடமான 3.4 கோடி மொபைல் எண்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் போலி IMEI எண்களைக்கொண்ட 2.27 லட்சம் மொபைல் போன்களும் முடக்கப்பட்டுள்ளன. இது தவிர இணைய மோசடியில் ஈடுபட்ட16.97 லட்சத்திற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இது போன்ற மோசடி சம்பவங்கள் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள், 1930 என்ற தேசிய இணையவழிக் குற்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும்.