நாளொன்றுக்கு ₹100 சேமிப்பு: RD, SIP, PPF - உங்களுக்கான சிறந்த முதலீடு எது?

தினசரி சிறு சேமிப்பு மூலம் 10 ஆண்டுகளில் ₹7 லட்சம் வரை பெருக்கும் எளிய முதலீட்டு வழிகள்.
சேமிப்பு திட்டம் - daily savings plan Tami
சேமிப்பு திட்டம் - daily savings plan Tami
Updated on

தினமும் ₹100 சேமித்தால் மாதத்தில் ₹3,000 ஆகும். வருடத்துக்கு சேமிக்கும் அசல் தொகை மட்டும் ₹36,000. இதற்கு வட்டி மற்றும் கூட்டு வட்டியும் சேர்ந்தால், வருடக் கணக்கில் ஆகும்போது கணிசமான தொகையாக ஆகும். பத்து ஆண்டுகளில் அது குறிப்பிடத்தக்க கனமான தொகையாக வளர்ந்திருக்கும்.

பொதுவாக மாத சம்பளக்காரர்கள், வார சம்பளக்காரர்கள் போன்றவர்களுக்கு தினசரி சேமிப்பு பொருந்தாது. தினசரி வருமானம் ஈட்டும் சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ/டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு சேமிப்பு திட்டம் கச்சிதமாகப் பொருந்தும்.

இது தவிர புகை, மது போன்ற தீய பழக்கங்கள் கொண்டவர்கள் அவற்றைக் குறைத்தோ, தவிர்த்தோ இத்தகைய சேமிப்பைச் செய்தால், அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், நல்வாழ்வுக்குமான கூடுதல் பயனும் சேரும்.

தினமும் ₹100 சேமிப்பதற்கான 3 சிறந்த வழிகள்

1. தொடர் வைப்புநிதி (RD - Recurring Deposit): தினசரி வருமானம் ஈட்டுகிற சிறு வியாபாரிகளும் கூலித் தொழிலாளர்களும் தினந்தோறும் ₹100 தொகையை அருகில் உள்ள வங்கி அல்லது அஞ்சலகத்தில் நேரடியாகச் செலுத்தலாம்.

அல்லது வாரம் ஒருமுறை ₹700 எனச் சேர்த்து வைத்தும் செலுத்த முடியும். அபாயங்கள் எதுவுமின்றி, நிலையான வட்டி (பொதுவாக 6%–7% வரம்பில், வங்கியைப் பொறுத்து மாறுபடும்) மற்றும் அசல் தொகைக்கு முழு உத்தரவாதம் விரும்புபவர்களுக்கு இது மிக ஏற்றது.

2. தினசரி பரஸ்பர நிதி (Mutual Fund) முதலீடு: பரஸ்பர நிதி நிறுவனங்களில் "Daily SIP" என்ற தினசரி Systematic Investment Plan சிறப்பு வசதி உள்ளது. இதற்காக நீங்கள் தினமும் வங்கிக்குச் செல்லவேண்டியதில்லை. உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தினமும் ₹100 தானாகவே கழிந்து முதலீட்டுக்குச் செல்லுமாறு தானியங்கி முறையில் Auto-debit ஆவதற்கு ஒருமுறை பதிவு செய்துவிட்டால் போதுமானது.

சேமிப்பு திட்டம் - daily savings plan Tami
சேமிப்பு திட்டம் - daily savings plan Tami

தொழில்நுட்ப அறிவுள்ள தினசரி வருமானக்காரர்கள் பங்குச்சந்தையின் நீண்டகால சராசரி வளர்ச்சியால் (பொதுவாக 10 வருடங்களுக்கு மேல் 11%–14% வரம்பில் இருந்திருக்கிறது) அதிக லாபம் பெற இந்த முறை பயன்படுகிறது. இது சந்தை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது; வருமானம் உத்தரவாதம் இல்லை, இழப்பும் ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
பிள்ளைகளின் உயர்கல்விக்கு கடன் வாங்க தேவையில்லை! இன்றே செய்ய வேண்டிய 5 முதலீடுகள்!
சேமிப்பு திட்டம் - daily savings plan Tami

3. பொது வருங்கால வைப்புநிதி (PPF - Public Provident Fund): பிபிஎஃப் கணக்கில் தினமும் பணத்தைச் செலுத்த முடியாது என்பதால், தினமும் ₹100 வீதம் உண்டியலிலோ அல்லது வங்கிக் கணக்கிலோ சேர்த்து வைத்து,

ஒவ்வொரு மாதமும் ₹3,000-ஆக டெபாசிட் செய்யலாம். மாதத்தின் 5-ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்தால்தான் அந்த மாதத்திற்கான வட்டி முழுமையாகக் கிடைக்கும்; தாமதமானால் அந்த மாத வட்டி இழக்க நேரிடும். மத்திய அரசின் நேரடிப் பாதுகாப்பில் இயங்கும் இதில் கிடைக்கிற வட்டிக்கு (தற்போது 7.1%, 2020 முதல் மாறாமல் உள்ளது) முழு வரிவிலக்கு உண்டு. 10 ஆண்டுகள் கழித்து பாதுகாப்பான ஒரு பெரிய தொகையை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு இது ஒரு பாதுகாப்பு அரண்.

முக்கிய வித்தியாசங்கள் & அவசர கால நெகிழ்வுத்தன்மை

RD திட்டம் எளிமையானது. SIP பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்டது என்பதால் லாபம் நிலையானதல்ல; ஆனால் நீண்டகாலத்தில் பணவீக்கத்தைவிட அதிக வளர்ச்சி தரும் வாய்ப்பு உண்டு. PPF என்பது முழு வரிவிலக்கு மற்றும் அரசின் பாதுகாப்பு கொண்டது.

நிதி நெருக்கடி காலங்களில் RD மற்றும் SIP கணக்குகளை இடைநிறுத்தவோ பணத்தை எடுக்கவோ முடியும். ஆனால் PPF நீண்ட கால முதலீடு என்பதால் பணத்தை எடுப்பதில் கட்டுப்பாடுகள் உண்டு (15 வருட lock-in, 7-ஆம் வருடத்திலிருந்து பகுதி எடுப்புக்கு அனுமதி).

10 ஆண்டுகளில் நீங்கள் சேமிக்கும் மொத்த அசல் தொகை: ₹3,60,000.

* RD (6.5% வட்டி வைத்து கணக்கிட்டால்): 10 ஆண்டுகளில் கிடைக்கும் தொகை சுமார் ₹5,07,000.

இதையும் படியுங்கள்:
இளம் வயதில் செய்யும் சரியான முதலீடு உங்கள் எதிர்காலத்தை வளமாக்கும் எளிய வழிகள்!
சேமிப்பு திட்டம் - daily savings plan Tami

* SIP (12% நீண்டகால சராசரி வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால்): 10 ஆண்டுகளில் கிடைக்கும் தொகை சுமார் ₹6,97,000. (இது ஒரு எடுத்துக்காட்டுக் கணக்கு மட்டுமே; உண்மையான வருமானம் சந்தையைப் பொறுத்து இதைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.)

* PPF (7.1% வட்டி வைத்து கணக்கிட்டால்): 10 ஆண்டுகளில் வளரும் தொகை சுமார் ₹5,00,000–₹5,35,000 (டெபாசிட் செய்யும் தேதியைப் பொறுத்து மாறுபடும்).

உங்கள் வருமானத்தின் தன்மை மற்றும் அபாயத்தைத் தாங்கும் திறனுக்கு ஏற்ப சரியான திட்டத்தைத் தேர்வு செய்து, நாளைய நிதி சுதந்திரத்திற்கு இன்றே தினமும் ₹100 சேமிக்கத் தொடங்குங்கள்!

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com