

இன்றைய வாழ்க்கை முறையில் பல்வேறு வகையான கடன்களைப் பெற்று வாழ்க்கை நடத்துவது என்பது வழக்கமாகிவிட்டது. கடன் வாங்குவது தவறல்ல. கடன் என்பது சரியாகப் பயன்படுத்தினால் ஒரு நிதி கருவி, ஆனால் அதை திட்டமிடாமல் நிர்வகித்தால் அது ஒரு நிதிச் சுமையாகவே மாறிவிடும்.
நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு இரண்டு பிரபலமான உத்திகள் உள்ளன. கடன் பனிச்சரிவு (Avalanche) மற்றும் கடன் பனிப்பந்து (Snowball). பனிச்சரிவு முறையானது அதிக வட்டி விகிதங்களைக் கொண்ட கடன்களை முதலில் திருப்பிச் செலுத்துவதில் கவனம் செலுத்துவதாகும். இது காலப்போக்கில் வட்டியில் பணத்தை சேமிக்க உதவும். பனிப்பந்து முறையானது மிகச் சிறிய கடன்களை முதலில் குறிவைத்து, ஆரம்ப வெற்றிகள் மூலம் உத்வேகத்தையும் ஊக்கத்தையும் உருவாக்க உதவும்.
கடன் பனிப்பந்து முறை சிறந்ததா அல்லது கடன் பனிச்சரிவு முறை சிறந்ததா என்றால் அது நம் நிதிச் சூழ்நிலைகளையும், ஆளுமையையும் பொறுத்தது. பணத்தைச் சேமிப்பதை பொறுத்தவரை கடன் பனிச்சரிவு முறையே சிறந்தது.
ஏனெனில் அதிக வட்டி கொண்ட கடன்களை முதலில் குறிவைப்பதன் மூலம் வட்டிப் பணத்தை மிச்சப் படுத்துகிறது. இருப்பினும் ஒரு சிறிய கடனை விரைவாகச் செலுத்தி முடிப்பதைப் பார்ப்பது அதிக ஊக்கமளிப்பதாக இருப்பதால் சிலர் கடன் பனிப்பந்து முறையை சிறந்ததாகக் கருதுகின்றனர்.
ஸ்னோபால் முறை (Debt Snowball Method) என்பது பல கடன்களைக் கொண்டவர்கள் முதலில் மிகக்குறைந்த நிலுவைத் தொகை (Smallest Balance) உள்ள கடனை முழுமையாக, வேகமாக அடைத்துவிட்டு, அதன் மூலம் மிச்சமாகும் தொகையை அடுத்தடுத்த பெரிய கடன்களை வரிசைப்படி அடைக்கும் உத்தியாகும். மற்ற கடன்களுக்குக் குறைந்தபட்சத் தவணை மட்டும் கட்டிக்கொண்டே கூடுதல் பணத்தை சிறிய கடனில் செலுத்துவதன் மூலம் விரைவான வெற்றியையும் உற்சாகத்தையும் பெறலாம்.
கடனை பட்டியலிடுவது:
நம் அனைத்துக் கடன்களின் (கிரெடிட் கார்டு, தனிநபர் கடன், நகைக் கடன் போன்றவை) நிலுவைத் தொகை, வட்டி விகிதம், குறைந்தபட்ச மாதாந்திரத் தவணை ஆகியவற்றை சிறிய தொகையிலிருந்து பெரிய தொகை வரை வரிசைப்படுத்தவும். சிறிய கடனில் கூடுதல் பணத்தைச் செலுத்தி கடனை வேகமாக அடைக்கப் பார்க்கலாம்.
அதற்கு கையில் உள்ள கூடுதல் பணம், போனஸ் அல்லது செலவு குறைப்பு மூலம் சேமிக்கும் தொகையை செலவு செய்யாமல் மிகச் சிறிய கடனில் செலுத்தி அதை வேகமாக முடித்து விடுவது.
தொகையை அடுத்த கடனுக்கு மாற்றுவது:
முதல் கடன் முடிந்ததும் அதில் கட்டிக் கொண்டிருந்த மொத்தத் தொகையையும் (குறைந்தபட்சத் தவணை + கூடுதல் தொகை) அடுத்த சிறிய கடனில் சேர்த்துக் கட்டுவது பனிப்பந்து உருள உருளப் பெரிதாவதுபோல நம் அடைப்புத் தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்லும். ஒரு கடன் சீக்கிரமே முடிவதால் நமக்கு மன உறுதி அதிகரிக்கும். அதுவே தொடர்ந்து கடன்களை விரைவாக அடைக்கத் தூண்டுகோலாகவும் அமையும். இதே முறையைப் பின்பற்றி ஒவ்வொரு கடனாக முடித்து இறுதியில் மிகப் பெரிய கடனையும் முழுமையாக அடைத்து விடமுடியும்.
குறைந்தபட்சத் தொகையை செலுத்துவது:
பட்டியலில் உள்ள மற்ற எல்லாக் கடன்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கட்டவேண்டிய மாதாந்திரக் குறைந்தபட்சத் தவணையைத் (Minimum payment / EMI) தவறாமல் செலுத்தவேண்டும்.
நன்மைகளும் கவனிக்க வேண்டியவையும்:
இதனால் ஏற்படும் நன்மை என்று பார்த்தால் சிறிய கடன்கள் விரைவில் முடிவதால் மன உறுதியும் உற்சாகமும் கூடுவதுடன், நம்மால் விரைவில் எல்லாக் கடன்களையும் அடைத்து விட முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். அத்துடன் அதற்கான முயற்சியிலும் மும்முரமாக இறங்குவோம்.
வட்டி விகிதத்தைக் கணக்கில் கொள்ளாமல் தொகையின் அடிப்படையில் அடைப்பதால், அவலாஞ்ச் முறை (Avalanche Method-அதிக வட்டி கொண்ட கடனை முதலில் அடைப்பது) உடன் ஒப்பிடும்பொழுது மொத்த வட்டிச் செலவு சற்று அதிகமாக இருக்கலாம்.
பழைய கடன்களை அடைக்கும் காலத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதையோ, புதிய கடன்கள் வாங்குவதையோ முற்றிலும் தவிர்த்து செலவுகளைக் கட்டுப்படுத்துவது இந்த முறையில் மிகவும் முக்கியம்.
கூடுதல் பணம் செலுத்தும்போது, அதை அடுத்த மாதத் தவணையாகக் கருதாமல் அசல் தொகையில் (Principal Reduction) கழிக்குமாறு வங்கியிடம் முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும்.