Money போனாலும் பரவாயில்லை, Relationship போகக்கூடாதா? இதோ 10 Golden Rules!

பாசத்திற்காகக் கடன் கொடுத்து உறவும் பணமும் போனதா? இதோ தெளிவான தீர்வு!
கடன் கொடுப்பது - personal finance tamil
கடன் கொடுப்பது - personal finance tamilImage credit: Gemini
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

நெருங்கிய நண்பர்களோ அல்லது உறவினர்களோ அவசரத் தேவைக்காகக் கடன் கேட்கும்போது பலருக்கும் பெரும் தர்மசங்கடம் ஏற்படுகிறது. கொடுக்கலாமா – வேண்டாமா என்கிற கேள்வியும், முடிவெடுக்க இயலாத தடுமாற்றமும், பலவிதக் கருத்துகளால் குழப்பங்களும் உண்டாகும்.

கொடுக்கலாமா – வேண்டாமா என்கிற கேள்வி எழக் காரணமே, கொடுத்தால் திரும்பக் கிடைக்குமா என்கிற சந்தேகம் ஏற்படுவதால்தான். அந்தச் சந்தேகம் எழாதாவர்கள் கொடுத்துவிட்டுத் திரும்பக் கிடைக்காமல் அவதிப்படுவதை நிறைய இடங்களில் பார்க்கவும், நமக்குத் தெரிந்த வட்டாரங்களிலேயே நிறையக் கேள்விப்படவும் முடியும். இந்த அனுபவம் நமக்கும் வந்துவிடக்கூடாது என்றுதான் பலரும் நண்பர்களோ உறவினர்களோ நெருக்கடிகளில் கடன் கேட்டாலும் கொடுக்காமல் தவிர்த்துவிடுகின்றனர்.

“நாம கடன் குடுக்குலீன்னா, கேட்டும் குடுக்குலயேங்கற ஒரு சங்கடம்தான் அவுங்களுக்கு இருக்கும். அது பரவால்ல. ஆனா, கடன் குடுத்துட்டு, அவுங்க திருப்பித் தரலேன்னாலோ, இழுத்தடிச்சாலோ நமக்குப் பணக் கஷ்டம் ஆயிடும். அவங்களுக்கு உதவப் போயி நாம கஷ்டப்பட வேண்டியிருக்கும். அது தேவையா?

“அது மட்டுமில்ல; வெளியாளுகளுக்குக் கடன் குடுத்துத் திரும்பி வர்லீன்னாலோ, இழுத்தடிச்சாலோ கறாரா, கடுமையாப்பேசி வாங்கலாம். நண்பர்கள், சொந்த பந்தங்களுக்குள்ள கடன் கொடுப்பது திரும்பி வர்லீன்னா அப்படிப் பேச முடியாது. அதையும் மீறி அப்படிப் பேசி அனேக நண்பர்களுக்குள்ள, சொந்தக்காரங்களுக்குள்ள உறவே முறிஞ்சிருக்குது. உதவிக்காகக் கடன் குடுத்துட்டு உறவைக் கெடுத்துக்கக் கூடாது!”

– இப்படிச் சிலர் மிகுந்த தெளிவோடு இருப்பார்கள்.

ஆனால், இது எல்லோராலும் முடியாது. அல்லது எல்லா நண்பர்கள், உறவினர்களிடமும் இப்படி நடந்துகொள்ள முடியாது. அது அந்தந்த உறவுகளின் முக்கியத்துவம், நெருக்கம், அவர்கள் நமக்குச் செய்துள்ள உதவிகள், நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய கடமை, அவரவர் மனநிலை, ஒவ்வொருவரும் உறவுகளை மதிக்கும் தன்மை, கடன் கேட்பவரின் நிதிநிலை, அவர் இப்போது கடன் கேட்பதற்கான சூழல் உள்ளிட்ட பலவற்றைப் பொறுத்தது.

எனவே, நண்பர்களோ உறவினர்களோ கடன் கேட்டால் இதையெல்லாம் ஆழ்ந்து சிந்தித்துவிட்டும், நமது தரப்பு குறித்துத் தெளிவான நிலைப்பாடு எடுத்துவிட்டும்தான் முடிவெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்க பிசினஸ் லாபம் அள்ளணுமா... இந்த 7 சாணக்கியத் தந்திரங்களை உடனே படிங்க!
கடன் கொடுப்பது - personal finance tamil

பழகிய பாசத்திற்காகவோ, அவர்களின் குடும்பக் கஷ்டத்தைப் பார்த்து இரக்கப்பட்டோ பணத்தைக் கொடுப்பது தவறல்ல. ஆனால், அதில் சில வரைமுறைகள் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். யோசனையின்றிப் பணத்தைக் கொடுத்துவிட்டு, கொடுத்த பணம் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி வராவிட்டால் சங்கடத்துக்கும் கஷ்டத்துக்கும் உள்ளாவது, உறவுகளுக்குள் மனஸ்தாபம், விரிசல் ஏற்படுவது ஆகியவை கூடாது.

நண்பர்கள், உறவினர்களுக்குக் கடன் கொடுத்துவிட்டு, பணம் உரியபடி திரும்ப வராததால் விளைந்த பற்பல ‘உறவுக்கேடு’களை எனது வாழ்வில் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். மனஸ்தாபங்கள், விரிசல், பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் எனப் பலவிதம்.

அதைவிட முக்கியமாக, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு அனுபவம். விடலைக்காலம் முதலான நீண்ட கால நெருங்கிய நண்பர்கள் இருவருக்குள் நடந்தது. கணிசமான சிறு தொகை கடன் கொடுத்துவிட்டு, திரும்பி வராததால் ஒருவன் கேட்ட ‘பச்சை’யான கேள்வி, அந்த நட்புக்கே அர்த்தமில்லாமல் போகச் செய்துவிட்டது.

நண்பர்கள், உறவினர்கள் கடன் கேட்டால் கொடுக்கலாமா – வேண்டாமா என்பதற்கு, அனைவருக்கும் பொதுவான பதிலைச் சொல்லிவிட முடியாது. முன்பே விவரித்தபடி அது இரு தரப்பு உறவு, சூழல், நிதிநிலை, கடன் கேட்பவரின் குணச்சித்திரம் உள்ளிட்ட பலவற்றையும் பொறுத்தது.

கொடுக்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டால் அது பற்றி இங்கே பேசுவதற்கு எதுவும் இல்லை. கொடுப்பதாக இருந்தால் பின்வரும் வழிமுறைகளைப் பத்து கட்டளைகளாகக் கடைபிடிப்பது நல்லது.

கடன் கொடுப்பது - personal finance tamil
கடன் கொடுப்பது - personal finance tamilImage credit: Gemini

1. முதலாவதாகச் செய்யவேண்டியது, தனிப்பட்ட முறையில் அவர் எவ்வளவு நல்லவராகவும், உங்களின் உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தாலும், பண விஷயம் என்பது வேறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். கடன் திருப்பிச் செலுத்துதலில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொண்டு, அதில் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே கடன் கொடுங்கள்.

2. அவர் எதற்காகக் கடன் கேட்கிறார், எப்போது திருப்பித் தருவார், எப்படித் திருப்பித்தருவார் என்பதைத் தீர விசாரித்துக்கொள்ளுங்கள்.

3. கடன் கேட்பவரின் நிதிநிலைமையை நன்கு அறிந்துகொள்வது அவசியம். அவர் உங்களின் நெருங்கிய நண்பர், தோழி, உறவினர் என்றாலும் அவரது மாத வருமானம், குடும்பச் செலவு, பிற செலவுகள், கொடுக்கல் வாங்கல், கடன் விபரங்கள் உள்ளிட்டவை முழுதாகத் தெரிந்திருக்காது.

அதை விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். அவர் உங்களிடம் கேட்கும் கடனை உரிய காலத்தில் திருப்பித் தர அவரால் இயலுமா என்பதை அறிந்துகொள்ள இது தேவை. அப்படி அவரால் திருப்பிச் செலுத்தமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டும் கொடுங்கள்.

4. உங்களால் தாங்கக் கூடிய அளவிலான தொகையை மட்டுமே கடனாகக் கொடுங்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தவணையாகவோ, முழுதாகவோ திரும்பி வராவிட்டாலும் உங்களுக்கு அதனால் பெரிய சிரமங்களோ, கஷ்டங்களோ நேராது என்கிற அளவுக்கு அது இருக்க வேண்டும்.

5. ‘ஃப்ரண்ட்ஷிப் வேறு; பிசினஸ் வேறு’ என்ற பிரபல மரபுத் தொடரைக் கடனிலும் கடைப்பிடியுங்கள். சென்ட்டிமென்ட்டுகள், உணர்ச்சிவயங்கள் ஆகியவற்றுக்கு ஆட்படாதீர்கள். நைச்சியமாகவும், சென்ட்டிமென்ட்டாகவும் பேசிக் கடன் வாங்க முற்படுகிறவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

6. இது மிக முக்கியமான புள்ளி. கடன் கேட்பவர்கள் நெருக்கடிகளில்தான் கேட்கிறார்கள். எனவே, குறித்த காலத்தில் திருப்பித் தருவேன் என அவர்கள் வாக்களிப்பதை முழுதாக நம்பாதீர்கள். அவர்கள் நேர்மையானவர்களாகவே இருந்தாலும், அவர்களின் நிதி நெருக்கடிச் சூழல் பிறகும் தொடர வாய்ப்புள்ளது. எனவே, குறித்த காலக்கெடுவில் பணம் வராமல் போகலாம். அதைப் புரிந்துகொண்டு, அதற்கும் தயாராக இருங்கள்.

இதையும் படியுங்கள்:
வங்கி செக்கில் இருக்கும் ரகசிய பாதுகாப்பு அம்சங்கள்: CTS-2010 செக் பேப்பர் மோசடியை தடுப்பது எப்படி?
கடன் கொடுப்பது - personal finance tamil

7. ‘உங்களிடம் பணம் இல்லை என்றால் வட்டிக்காவது வாங்கிக் கொடுங்கள்!’ என்று யாரேனும் கேட்டுக் கொண்டால் ஒருபோதும் அதைச் செய்யாதீர்கள். நீங்களே வட்டியும் அசலும் கட்ட நேர்ந்தாலும் நேரலாம். காரணம் மேற்கூறியதே.

8. கடன் கேட்பவரின் கஷ்டத்தைப் பார்த்து மனம் இரங்கி உதவ நினைத்தால், அவர்கள் கேட்கும் பெரிய தொகையைக் கொடுக்காமல், உங்களால் முடிந்த ஒரு சிறிய தொகையை மட்டும் கொடுங்கள். ‘என்னால் இவ்வளவுதான் உதவ முடியும், இதை நீங்கள் திருப்பித் தர வேண்டிய அவசியமில்லை’ என்றோ, ‘உங்களால் முடியும்போது கொடுங்கள்’ என்றோ சொல்லி, அதற்கான மனநிலையோடு அந்தச் சிறிய தொகையைக் கொடுத்துவிடுங்கள். இதனால் பணம் திரும்ப வராவிட்டாலும் உங்களுக்குப் பெரிய இழப்பு இராது; உறவும் சுமூகமாகத் தொடரும்; அவரின் கஷ்டச் சூழலில் உங்களால் முடிந்த உதவியைச் செய்த திருப்தியும் ஏற்படும்.

9. தவிர்க்க முடியாத நிலையில் பெரிய தொகையைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற சூழல் வந்தால், நட்பையும் உறவையும் தாண்டிச் சட்டப்பூர்வமாகச் செயல்படுவது இரு தரப்புக்குமே பாதுகாப்பானது. எவ்வளவு தொகை, எப்போது திருப்பித் தரப்படும் என்பதை முத்திரைத் தாளில் எழுத்துப்பூர்வமாக எழுதி இருவரும் கையொப்பமிட்டுக் கொள்ளுங்கள்.

இது எதிர்காலத்தில் தேவையற்ற மனஸ்தாபங்களும் சட்டச் சிக்கல்களும் வராமல் தடுக்கும். அது மட்டுமல்ல; கடன் வாங்கியவர் பிற்பாடு மரணிக்கிற சூழல் ஏற்பட்டால், அவரது குடும்பத்தாரிடம் வசூலிப்பதற்கு ஆதாரமாகவும் இருக்கும்.

10. உறவுகளைப் பேணுவது மிக முக்கியம். அதே அளவுக்கு நமது பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதும் மிக முக்கியம். இந்த இரண்டையும் ஆழ்ந்து புரிந்துகொண்டு, அந்த இரண்டுக்கும் பங்கம் வராமல் கடன் கொடுக்கவும், திருப்பி வாங்கவும் செய்யுங்கள்!

‘கடன் அன்பை முறிக்கும்’ என்ற மரபுத் தொடர், மூன்றே சொற்களில் மாபெரும் வாழ்வியல் நிதர்சனங்களைக் காட்டக்கூடியது. அந்த அனுபவம் உங்கள் வாழ்வில், எந்த உறவிலும் நேர்ந்துவிடாமல் கவனமாக இருங்கள்!

இதையும் படியுங்கள்:
தண்ணீரையும் பணத்தையும் தொடர்புப்படுத்திப் பேசுவது ஏன்?
கடன் கொடுப்பது - personal finance tamil