பங்குகள் திடீரென வேகமாக ஏறுகிறதா? அவசரப்பட்டு வாங்காதீர்கள்... ஆபரேட்டர்களின் ‘புல் ட்ராப்’ சதி!

10% - 15% லாப ஆசையில் விழுந்து மூலதனத்தை இழப்பதைத் தவிர்க்கும் முக்கியமான விழிப்புணர்வு.
புல் ட்ராப் - Bull Trap Strategy
புல் ட்ராப் - Bull Trap Strategy
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on: 

பங்குச் சந்தை வர்த்தகத்தில் அனுபவம் வாய்ந்த ட்ரேடர்களே அஞ்சுகிற ஒரு சொல்லாடல் - ‘புல் ட்ராப்’ (Bull Trap). இது தொடக்க நிலை வர்த்தகர்கள், பகுதி நேர வர்த்தகர்களான முதலீட்டாளர்கள் ஆகியோர் அதிகவனமாக இருக்கவேண்டிய பங்குச் சந்தை அபாயங்களில் ஒன்று.

பொதுவாகப் பங்குச்சந்தை முதலீடுகளே நஷ்ட அபாயங்களுக்கு உட்பட்டவைதான். அதன் வர்த்தகங்கள் இன்னும் கூடுதலான நஷ்ட அபாயங்களுக்கு உட்பட்டவை. இவை சந்தையின் இயல்பில் நிகழ்பவை. இந்த அபாயங்கள் ஒருபுறம் இருக்க, முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களைப் பலவிதமான ‘பொறிகள்’ வைத்து சதியால் ஏமாற்றி லாபம் பார்க்கிற மோசடி வேலைகளும் நடக்கின்றன. அதில் ஒன்றுதான் இதுவும்.

ஒரு பங்கின் விலை மளமளவென உயரத் தொடங்கும் போது, "இனி இந்தப் பங்கு புதிய உச்சங்களைத் தொடும்" என்ற நம்பிக்கையில் உள்ளே நுழையும் முதலீட்டாளர்களைக் கண்ணி வைத்துக் கவர்ந்திழுத்து நஷ்டத்தில் தள்ளும் ஒரு மாயவலையே இந்தக் ‘காளைப் பொறி’.

புல் ட்ராப் என்றால் என்ன? யாரால், ஏன் ஏற்படுத்தப் படுகிறது?

பங்குச் சந்தையில் ‘காளை’ என்பது பங்கு விலை உயர்வையும், ‘கரடி’ என்பது பங்கு விலை வீழ்ச்சியையும் குறிக்கிற பிரபலக் குறியீடுகள். அவ்வகையில் ‘காளைப் பொறி’ (Bull Trap) என்பது, ஒரு பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டிருப்பது போன்ற போலித் தோற்றத்தை உருவாக்கி, சில்லறை முதலீட்டாளர்களை வாங்கத் தூண்டி, பின்னர் திடீரென விலையைக் கீழே இறக்கி அவர்களை நஷ்டத்தில் சிக்க வைப்பதே ஆகும்.

இத்தகைய சூழல்கள் பொதுவாகச் சந்தையில் அதிக மூலதனம் கொண்ட 'ஆபரேட்டர்கள்' (Operators) அல்லது பெரிய முதலீட்டு அமைப்புகளால் உருவாக்கப் படுகின்றன.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை வீழ்ச்சியா? பயப்படாமல் கோடிகளில் லாபம் பார்க்க இதோ எளிய உத்திகள்!
புல் ட்ராப் - Bull Trap Strategy

ஒரு பங்கில் தாங்கள் ஏற்கனவே குறைந்த விலைக்கு வாங்கி வைத்திருக்கும் பெருமளவிலான பங்குகளை அதிக விலையில் விற்று லாபம் பார்க்க (Profit Booking) இவர்களுக்கு வாங்குபவர்கள் (Buyers) தேவைப் படுகிறார்கள். அதற்கு சில்லறை முதலீட்டாளர்களை வசீகரிக்கும் விதமாகச் செயற்கையான விலை ஏற்றத்தை இவர்கள் உருவாக்குகிறார்கள்.

முதலீட்டாளர்கள் இதில் எப்படிச் சிக்குகிறார்கள்?

புல் ட்ராப் நடக்கும்போது முதலீட்டாளர்களிடம் கிரியா ஊக்கியாகச் செயல்படுவது FOMO (Fear Of Missing Out) எனப்படும் "வாய்ப்பை நழுவ விட்டுவிடுவோமோ" என்ற பயமும் பேராசையும்தான்.

1. போலி பிரேக்அவுட் (Fake Breakout): ஒரு பங்கின் விலை நீண்ட நாட்களாக ‘தடுப்பு எல்லை’க்குள் (Resistance Level) நகர்ந்துகொண்டிருக்கும். திடீரென அந்த எல்லையைத் தாண்டி விலை மேலேறும்போது, அது 'பிரேக்அவுட்' ஆகிவிட்டது என முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.

2. செயற்கை ஏற்றம்: தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களில் பங்கு 10% முதல் 15% வரை வேகமான ஏற்றத்தைக் காட்டும்.

புல் ட்ராப் - Bull Trap Strategy
புல் ட்ராப் - Bull Trap Strategy

3. வலையில் வீழ்வது: நாளிதழ்கள், சமூக வலைதளங்கள் அல்லது சார்ட்டுகளில் இந்த ஏற்றத்தைப் பார்க்கும் சில்லறை முதலீட்டாளர்கள், "அடடா, பங்கு கையை விட்டுப்போகிறது" என்று அவசரப்பட்டு உச்ச விலையில் வாங்குகிறார்கள்.

4. திடீர் சரிவு: சில்லறை முதலீட்டாளர்கள் பெருமளவில் பணத்தை முதலீடு செய்தவுடன், ஆப்பரேட்டர்கள் தங்களது பங்குகளை விற்றுவிட்டு வெளியேறி விடுவார்கள். வாங்குவதற்கு ஆள் இல்லாமல் பங்கின் விலை மளமளவெனச் சரிந்து, முதலீட்டாளர்கள் பெரு நஷ்டத்தில் சிக்குகிறார்கள்.

இந்தப் பொறியில் சிக்குகிறவர்கள்

பெரும்பாலும் ஸ்விங் ட்ரேடர்கள் (Swing Traders) மற்றும் மொமெண்டம் ட்ரேடர்கள்தான் (Momentum Traders) பிரேக்அவுட் ஆகி ஏறும் பங்குகளைத் தீவிரமாகக் கண்காணித்து வாங்குவார்கள். அதனால் அவர்களே காளைப் பொறியில் அதிகம் சிக்குவார்கள்.

எனினும், சாதாரண சில்லறை முதலீட்டாளர்களும் இதில் சிக்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.

• செய்தி சார்ந்த ஏமாற்றங்கள் (News-based Traps): ஒரு நிறுவனத்தைப் பற்றிச் சந்தையில் ஏதேனும் நல்ல செய்தி வரும்போது, சாதாரண முதலீட்டாளர்கள் அப்-டிரெண்ட் (Up-trend) தொடங்கிவிட்டது என நினைத்து வாங்குவார்கள். ஆனால் அது ஆபரேட்டர்களால் பரப்பப்பட்ட செய்தியாகவோ அல்லது ஏற்கனவே விலையில் பிரதிபலித்த செய்தியாகவோ (Discounted News) இருக்கலாம்.

• சந்தையின் பொதுவான ஏற்றம்: ஒட்டுமொத்தமாக ஏறும் போது, அடிப்படை பலமில்லாத (Fundamentally weak) மோசமான பங்குகளும்கூட சேர்ந்து ஏறும். இது ஆபரேட்டர்களால் திட்டமிட்டு நடத்தப்படாத 'இயற்கையான புல் ட்ராப்.' இதை நம்பி வாங்கும் முதலீட்டாளர்கள், சந்தை சற்று சரியும்போது விற்க முடியாமல் சிக்கிக்கொள்வார்கள்.

வால்யூம் (Volume) என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?

புல்ட்ராப்பில் இருந்து தப்பிப்பதற்கான மிக முக்கியமான ஒரே கேடயம் - 'வால்யூம்' (Volume) தான்.

ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது நேரத்தில் ஒரு பங்கில் கைமாறிய மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையே 'வால்யூம்' ஆகும்.

ஒரு காரை வேகப்படுத்த எப்படி ‘எரிபொருள்’ (Fuel) முக்கியமோ, அதுபோல ஒரு பங்கின் விலை ஏற்றத்திற்குப் பின்னால் 'வால்யூம்' இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தொடர்ந்து 8 வாரங்களாகச் சாய்ந்த பங்குச்சந்தை; பயப்படாமல் லாபம் பார்ப்பது எப்படி?
புல் ட்ராப் - Bull Trap Strategy

• உண்மையான ஏற்றம் (Genuine Breakout): பங்கின் விலை 5% முதல் 10% ஏறும்போது, அதன் வர்த்தகத்தின் அளவு (Volume) வழக்கமான நாட்களைவிட 2 முதல் 3 மடங்கு அதிகமாக (2x - 3x) இருக்க வேண்டும். இதன் பொருள், பெரிய நிதியமைப்புகளும் நிறுவன முதலீட்டாளர்களும் நிஜமான பணத்தை உள்ளே கொண்டு வருகிறார்கள் என்பதாகும்.

• போலி ஏற்றம் (Bull Trap): பங்கு விலை 10% ஏறுகிறது, ஆனால் வால்யூம் வழக்கமான நாட்களைவிட மிகக் குறைவாகவே இருக்கிறது என்றால், அது ஆபத்தான ஏமாற்று ஏற்றம்! சந்தையில் விற்க ஆள் இல்லாததால் அல்லது குறைந்த பங்குகளை ஆப்பரேட்டர்கள் தங்களுக்குள் மாற்றி வர்த்தகம் செய்ததால் மட்டுமே அந்த விலை உயர்ந்துள்ளது. இதில் உண்மையான பணப்புழக்கம் இருக்காது.

புல்ட்ராப்பில் இருந்து தப்பிக்க 3 தங்க விதிகள்:

1. வால்யூம் உறுதிப்படுத்தல் (Volume Confirmation): ஒரு பங்கு பிரேக்அவுட் ஆகி ஏறும் போது, அதன் 20 நாள் சராசரி வால்யூமை (20-day Moving Average Volume) விட அன்றைய வால்யூம் 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கிறதா என்று பங்கு வர்த்தகத் தளங்களின் சார்ட்டில் பார்த்து உறுதி செய்த பிறகே வாங்க வேண்டும்.

2. கண்டிப்பான நஷ்டத் தடை (Strict Stop-Loss): மொமெண்டம் அல்லது ஸ்விங் வர்த்தகத்தில் நுழையும் போதே, 5% அல்லது 8% நஷ்டம் வந்தால் விற்றுவிட்டு வெளியேற 'Stop-loss' விதியை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். 15% - 20% வரை நஷ்டம் போகும் வரை காத்திருப்பது மூலதனத்தைக் கரைத்துவிடும்.

3. உச்சத்தில் வாங்காதீர்கள் (Avoid Overextended Stocks): ஒரு பங்கு எவ்வித ஓய்வுமின்றி (Pullback/Consolidation) ஏற்கனவே 15% முதல் 20% வரை ஏறிவிட்டால், அதில் நுழையக்கூடாது. அது மீண்டும் சற்று சரிந்து ஆதரவு விலையை (Support Level) தொடும் வரை பொறுமை காப்பதே நல்லது.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை வீழ்ச்சியா? பயப்படாமல் கோடிகளில் லாபம் பார்க்க இதோ எளிய உத்திகள்!
புல் ட்ராப் - Bull Trap Strategy

ஓடும் வாகனத்தில் தாவி ஏறுதல்:

ப்ரேக் அவுட் ட்ரேடிங், மொமென்ட்டம் ட்ரேடிங் ஆகியவை விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தில் தாவி ஏறுகிற சாகசம் போன்றவை. அதில் லாபம், நஷ்டம் இரண்டுமே அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, கூடுதல் கவனமும், பகுப்பாய்வும் அவசியம்.

வால்யூம் இல்லாத விலை ஏற்றம் என்பது வெறும் போலி பிம்பமே. வால்யூம் மற்றும் ஸ்டாப்-லாஸ் ஆகிய இரண்டையும் சரியாகப் பயன்படுத்தினால், புல் ட்ராப் எனும் ஏமாற்று வலையில் சிக்காமல் தப்பிக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com