

கடந்த நூற்றாண்டிலிருந்தே சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நம்பிக்கைக்குரிய முதன்மையான பாதுகாப்பு மற்றும் வருமான வழியாக விளங்குவது ‘நிலையான வைப்பு நிதி’ (Fixed Deposit — FD) ஆகும். சந்தை அபாயங்கள் ஏதுமின்றி, குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாதமான வட்டி வருமானம் தருவதால், இதனை மக்களின் மிக முக்கியமான ‘பாதுகாப்பான முதலீடு’ என்றே அழைக்கலாம்.
பொதுவாக, உழைத்துச் சேர்த்த சேமிப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைக்கும் குடும்பத் தலைவர்கள், ஓய்வூதியத் தொகை பெறும் முதியோர், நிலம் அல்லது சொத்து விற்பனையில் கிடைத்த தொகையைப் பத்திரப்படுத்த விரும்புவோர் எனப் பலரும் FD செய்கிறார்கள். பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை விட FD-யில் மூலதன இழப்பு ஆபத்து குறைவு; மேலும் DICGC காப்பீட்டின் கீழ் ஒரு வங்கிக்கு ஒரு சேமிப்பாளருக்கு ரூ.5 லட்சம் வரை பாதுகாப்பு உண்டு.
FD வைக்கும்போது கவனிக்க வேண்டியவை
· வட்டி விகித ஒப்பீடு: அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுத் தேர்வு செய்யவேண்டும்.
· நாமினி நியமனம்: FD தொடங்கும்போதே நாமினியைச் சேர்க்கவேண்டும்.
· TDS விழிப்புணர்வு மற்றும் Form 121: FD வட்டி ஒரு நிதியாண்டில் ₹50,000-ஐத் தாண்டினால் வங்கி 10% TDS பிடிக்கும்; 60 வயது முதிர்ந்தோருக்கு இந்த வரம்பு ₹1 லட்சம். PAN இல்லாத நிலையில் அல்லது PAN-Aadhaar இணைப்பு இல்லாத நிலையில் TDS 20% ஆக உயரும்.
உங்கள் மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய்க்கு வரி இல்லை என்றால், TDS பிடித்தத்தைத் தவிர்க்க வங்கியிடம் Form 121 சமர்ப்பிக்கலாம். (ஏப்ரல் 1, 2026 முதல், முன்பு இருந்த Form 15G மற்றும் Form 15H இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு Form 121 ஆக மாற்றப்பட்டுள்ளது). இதை நிதியாண்டின் தொடக்கத்திலோ அல்லது புதிய FD தொடங்கும்போதோ வங்கிக் கிளை அல்லது நெட் பேங்கிங் வழியாக சமர்ப்பிக்கலாம்.
FD வகைகள் மற்றும் அம்சங்கள்
· கால அளவு: பொதுவாக 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை FD செய்யலாம்.
· மூத்தோர் சலுகை: சாதாரணக் குடிமக்களுக்கு வழங்கப்படும் வட்டியைவிட, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்குப் பொதுவாக 0.50% முதல் 0.75% வரை கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது; இது வங்கிக்கு வங்கி மாறும்.
வட்டி பெறும் முறைகள்
· கூட்டு வட்டி முறை (Cumulative FD): அசலும் வட்டியும் சேர்ந்து, முதிர்வுக் காலத்தில் ஒரே தொகையாகக் கிடைக்கும். நீண்டகாலச் சேமிப்பிற்கு ஏற்றது.
· மாதாந்திர/காலாண்டு வட்டி முறை (Non-Cumulative FD): அசல் வங்கியிலேயே இருக்கும்; வட்டி மட்டும் மாதந்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு இது ஏற்றது.
முதிர்வு தேதியில் பணம் எடுக்காவிட்டால்?
FD முதிர்வடையும் தேதியில் பணத்தை எடுக்காவிட்டால், வங்கிகள் பொதுவாக இரு வழிகளில் இதை அணுகும்.
1. தானியங்கிப் புதுப்பித்தல் (Auto-Renewal):
FD தொடங்கும்போதே தானியங்கிப் புதுப்பித்தல் தேர்வு செய்திருந்தால், முதிர்வு நாளன்று வங்கி அதை அதே கால அளவுக்கு, அப்போதைய புதிய வட்டி விகிதத்தில் புதுப்பிக்கும். உதாரணமாக, 1 ஆண்டு FD முதிர்வடைந்து எடுக்கப்படாமல் இருந்தால், அது மீண்டும் 1 ஆண்டுக்குப் புதுப்பிக்கப்படும். புதிய வட்டி விகிதம் பழைய விகிதத்திலிருந்து குறையலாம் அல்லது உயரலாம்.
2. சேமிப்புக் கணக்கு வட்டி மட்டுமே:
தானியங்கிப் புதுப்பித்தல் தேர்வு செய்யாமல் இருந்து, முதிர்வுத் தேதியில் பணத்தை எடுக்காமல்விட்டால், முதிர்வுத் தேதிக்குப் பிறகான நாட்களுக்கு வங்கியின் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதமே - பொதுவாக சுமார் 2.5% முதல் 3% வரை - வழங்கப்படும். FD வட்டி சுமார் 6.5%–7% இருக்கும்போது, இது கணிசமான வட்டி இழப்பை ஏற்படுத்தும்.
முதிர்வுக்குப் பின் எடுக்கக் கெடு உண்டா?
FD முதிர்வடைந்த பிறகு பணத்தை எடுப்பதற்குக் கெடு அல்லது அபராதம் கிடையாது. பணம் வங்கியிலேயே பாதுகாப்பாக இருக்கும்.
ஆனால், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு எடுக்கப்படாமல் இருக்கும் தொகை ‘உரிமை கோரப்படாத வைப்புத் தொகை’ (Unclaimed Deposit) ஆகி, RBI-யின் DEAF (Depositor Education and Awareness Fund) நிதிக்கு மாற்றப்படும். பின்னர் உரிய ஆவணங்களுடன் வங்கியிடம் தொடர்பு கொண்டு தொகையை மீட்டுக்கொள்ளலாம்; ஆனால் அதற்குக் கூடுதல் நடைமுறைகள் தேவைப்படலாம்.
Auto-Renewal அமைப்பது எப்படி?
· FD தொடங்கும்போது: ‘Auto-Renew Principal & Interest’ அல்லது ‘Auto-Renew Principal Only’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யலாம்.
· மாற்றியமைக்கும் வசதி: முதிர்வுத் தேதிக்கு முன்பே - பல வங்கிகளில் முதிர்வு தேதிக்கு 1–2 நாட்கள் முன்பு வரை - நெட் பேங்கிங் அல்லது வங்கிக்கிளை வழியாக Auto-Renewal-ஐ இயக்கவோ நிறுத்தவோ முடியும். இது வங்கிக்கு வங்கி மாறலாம்.
எளிமையான நிதி மேலாண்மை
FD முதிர்வுத் தேதியை மாதாந்திர நாட்காட்டியில் குறித்து வைப்பது அவசியம். முதிர்வுத் தேதியில் பணம் தேவையில்லை என்றால், தானியங்கிப் புதுப்பித்தல் அமைப்பில் வைப்பது நல்லது. இல்லையெனில், முதிர்வு நாளன்றே தொகையைச் சேமிப்புக் கணக்கிற்கு மாற்றி, வட்டி இழப்பைத் தவிர்ப்பதே எளிமையான நிதி மேலாண்மையாகும்.
மேலும், FD என்பது பாதுகாப்பான முதலீடாக இருந்தாலும், அதில் மட்டுமே அனைத்துச் சேமிப்பையும் வைப்பது சரியான அணுகுமுறை அல்ல. பணவீக்கம், வரி மற்றும் நீண்டகாலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, FD-யுடன் பிற முதலீட்டு வழிகளையும் சமநிலைப்படுத்துவதே சிறந்தது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: