பணத்துக்கு வேலை கொடுங்க! - அப்படீன்னா என்னங்க ?

savings strategy
savings strategy
Published on

எந்த ஒரு பணத்திற்கும் ஒரு வேலை கொடுக்க வேண்டும். பணத்தைச் சும்மா வைத்திருக்கக் கூடாது. அதனை முதலீடு செய்ய (savings strategy) வேண்டும்.

எந்த ஒரு முதலீட்டிற்கும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்.‌ குறிக்கோளினை அடைவதற்கான காலம் வரும் பொழுது முதலீட்டினை நாம் பணமாக மாற்றி குறிக்கோளினை அடையப் பயன்படுத்த வேண்டும்.

எந்த ஒரு குறிக்கோளுக்கும் பயன்படுத்தப்படாத பணம் இருந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அந்தப் பணம் வீணாகவும் வாய்ப்பு உண்டு. பண வீக்கத்தினால் அந்தப் பணத்தின் மதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு.

குறிக்கோளினை அடைவதற்கு பணத்தை சரியாக பயன்படுத்துவதைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்.

ஒரு வீட்டில் ஒரு கருமி வசித்து வந்தான். அவனிடம் நிறைய தங்க காசுகள் இருந்தன. அதை அவன் ஒரு பெரிய ஜாடியில் போட்டு தனது தோட்டத்தில் புதைத்து வைத்திருந்தான்.

இதையும் படியுங்கள்:
உங்கள் பணம் இருமடங்காக வேண்டுமா? இந்திய அரசின் டாப் 9 முதலீட்டுத் திட்டங்கள்!
savings strategy

தினந்தோறும் இரவு தனது தோட்டத்திற்குச் சென்று தான் தோன்டிய குழியை மீண்டும் தோண்டி ஜாடியை எடுத்து தங்க காசுகளைப் பார்ப்பான். இது அவனது தினசரி அலுவலாக இருந்தது.

கருமியின் இந்த தினசரி செயல்பாட்டை ஒரு திருடன் கவனித்து விட்டான். ஒரு நாள் நள்ளிரவில் அந்தக் குழியைத் தோண்டி ஜாடியை அப்புறப்படுத்தி விட்டான். அந்தக் குழியில் ஜாடிக்குப் பதிலாக கற்களை நிரப்பி அந்த குழியைத் திருடன் மூடினான்.

அடுத்த நாள் இரவு கருமி அந்த குழியைத் தோண்டிய போது அங்கு ஜாடி இல்லை. வெறும் கற்கள் மட்டுமே இருந்தன. தனது தங்க காசுகளை இழந்த அந்த கருமி ஓவென்று சத்தம் போட்டு அழத் தொடங்கினான்.

கருமியின் அழுகைச் சத்தம் கேட்டு அவனது அண்டை வீட்டுக்காரன் என்னவென்று விசாரித்தான். கருமி தனது தங்கக் காசுகள் திருட்டுப் போனதைக் கூறி மீண்டும் அழுதான்.

'அந்தத் தங்கக் காசுகளை எதற்காக செலவு செய்ய சேமித்து வைத்தாய்?' என்றான் அண்டை வீட்டுக்காரன்.

'எந்த செலவா ? அந்தத் தங்கக்காசுகளை எனக்கு செலவழிக்கும் எண்ணமே கிடையாது. வெறுமனே சேமித்து வைத்தேன். அவ்வளவுதான்' என்றான் கருமி.

இதையும் படியுங்கள்:
தங்கத்தின் விலை ஏற்றம்: நமக்கேற்றவாறு எப்படி மாற்றிக்கொள்ளலாம்?
savings strategy

'உனக்கு அந்தத் தங்கக்காசுகளைச் செலவழிக்கும் எண்ணமே இல்லை என்றால், உனக்கு முன்னால் இருக்கும் அந்தக் கற்களுக்கும் திருடுப் போன தங்கக் காசுகளுக்கும் வித்தியாசமே இல்லை. எனவே வருத்தம் அடையாதே' என்றான் அண்டை வீட்டுக்காரன்.

எனவே, எந்த குறிக்கோளுக்கும் பயன்படுத்தாத முதலீடானது, அந்தக் கருமியின் தங்கக் காசுகளைப் போல் பயன் இல்லாமல் இருக்கிறது. அது கற்களைப் போலத்தான்.

எந்த ஒரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு:

1. வளரும் விகிதம் (Rate of return)

2. நீர்ப்புத்தன்மை (Liquidity)

3. பணத்தை இழக்கும் அபாயம் (Risk)

எந்த ஒரு முதலீட்டாலும் இந்த மூன்று கூறுகளையும் வழங்க இயலாது.

உதாரணமாக, பங்குச்சந்தை முதலீட்டில் வளரும் விகிதம் அதிகம். நீர்ப்புத்தன்மை அதிகம். ஆனால், பணத்தை இழக்கும் அபாயம் அதிகம். எனவே, பங்குச்சந்தை முதலீடுகள் நீண்ட காலக் குறிக்கோள்களுக்கு மட்டும் சிறப்பானவை. குறுகிய கால மற்றும் நடுத்தர கால குறிக்கோள்களுக்கு பங்குச்சந்தை முதலீடுகள் ஆபத்தானவை.

குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு வைப்பு நிதிகள் சிறப்பானவை. நடுத்தர காலக் குறிக்கோள்களுக்கு கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகள் சிறப்பானவை.

இதையும் படியுங்கள்:
பணத்தைப் பெருக்க உதவும் எஸ்ஐபி (SIP - Systematic investment plan) - என்றால் என்ன?
savings strategy

எனவே, குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினைத் தேர்ந்தெடுத்து, அதில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். குறிக்கோளினை அடையும் காலத்தில் அந்த முதலீட்டினைப் பணமாக மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.‌ எந்த ஒரு பணத்தையும் சும்மா வைத்திருக்கக் கூடாது. அதற்கு ஒரு வேலை கொடுத்து ஒரு குறிக்கோளுக்கு என்று முதலீடு செய்ய வேண்டும்.

பணத்திற்கு வேலை கொடுப்போம். முதலீடு செய்வோம். குறிக்கோள்களை அடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com