தங்க விலை சரிவிற்கு இடையே 'ரெனியம்' கலப்பட பீதி: ஹால்மார்க் நகையை எப்படிச் சரிபார்ப்பது?

தங்கம் விலை குறையும் நேரத்தில் ரெனியம் கலப்படம் பற்றிய அதிர்ச்சித் தகவலும் வாடிக்கையாளர் எச்சரிக்கையும்.
தங்கம் கலப்படம் - Rhenium Adulteration
தங்கம் கலப்படம் - Rhenium Adulteration
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவு உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, இந்த ஆண்டின் தொடக்கத்திலும் அதே போல உச்சத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அதன் சிகரமாக ஜனவரி 29-ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹16,800; ஒரு சவரன் ₹1,34,400 என்ற அளவுக்கு உயர்ந்தது. அப்போது இந்த ஆண்டின் இறுதியில் ஒரு கிராம் ₹20,000-த்தை எட்டிவிடும் என்றே பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

ஆனால், அதன் பிறகு விலை சற்று இறங்கி ₹15,000, ₹14,000 எனச் சரிந்து, நீண்ட காலமாக ₹13,000 முதல் ₹14,000-க்கு இடைப்பட்ட நிலையிலேயே ஊசலாடிக்கொண்டிருந்தது. சமீப மாதங்களில் ₹13,000-க்குக் கீழே இறங்கத் தொடங்கிய தங்கம், வழக்கமான ஏற்ற இறக்கங்களுக்கு மாறாக, நவம்பர் 10 முதல் 21 வரை தொடர்ந்து 12 நாட்கள் சரிவைச் சந்தித்தது.

எதிர்பாராத இந்த அதிரடி விலைச் சரிவு, தங்க நுகர்வோரிடையே பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது. குறிப்பாக, அதீத விலையுயர்வால் தங்கம் வாங்கக் கடும் சிரமப்பட்ட கீழ் நடுத்தர வர்க்கத்தினரும், வாங்க இயலாமல் தவித்த ஏழைகளும் இப்போது சற்று நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார்கள்; மறுபுறம், தங்கத்தில் முதலீடு செய்யும் உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பணக்காரர் களுக்கும் இது லாபத்தை அறுவடை செய்யும் பொன்னான வாய்ப்பாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள்:
916 ஹால்மார்க்கிலும் ஏமாற்றமா? தங்கத்தில் மறைந்திருக்கும் புதிய கலப்படம்..!!
தங்கம் கலப்படம் - Rhenium Adulteration

அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் இது “செய்திக் கொண்டாட்டமாக” ஆகியுள்ளது. இதில் முக்கிய அங்கம் வகிக்கக்கூடிய யூடியூப் தளங்களில் பொருளாதார நிபுணர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், பங்குச்சந்தை ஆலோசகர்கள் என அனைவரும் உற்சாகத்தோடு பேட்டிகளை அள்ளி வீசுகிறார்கள். இப்போது தங்கம் வாங்கலாமா, விலை இன்னும் குறையுமா என்ற இரு கேள்விகளும், அதற்கான பதில்களும்தான் அதிக அளவில் காணப்படுகின்றன. ஒரு சவரன் ₹75,000 வரை இறங்கும் என்று சிலர் கணிப்பதும், ₹50,000 வரை குறையுமா என்ற ‘அதிக ஆசை’க் கேள்விக்குப் பதிலளிப்பதுமாக சமூக வலைதளங்களில் கோலாகலம் நிலவுகிறது.

இதற்கிடையே, பழங்கால ரசவாதக் கதைகளை நினைவூட்டும் வகையில், பாதரசத்தைத் தங்கமாக மாற்ற முடியுமா என்ற விவாதமும் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்கிறது. அறிவியல் எவ்வளவுதான் வளர்ந்தாலும் மூடநம்பிக்கைகள் இன்னும் தொடர்வது வேடிக்கைதான்!

ஆனால், இந்தக் கொண்டாட்டங்களுக்கும் வேடிக்கைகளுக்கும் நடுவே, கடந்த ஓரிரு நாட்களாக வெளியாகியுள்ள ஒரு புலனாய்வுச் செய்தி, நகை வாங்குபவர்கள் மற்றும் நகை வியாபாரிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் - தங்கத்தில் ‘ரெனியம்’ (Rhenium) என்ற (தங்கம் கலப்படம்) அரிய உலோகம் கலப்படம் செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல்!

ரெனியம் என்பது என்ன? எதற்காகப் பயன் படுத்தப்படுகிறது?

ரெனியம் (Rhenium) என்பது பூமியில் மிக அரிதாகக் கிடைக்கிற, அதிக அடர்த்தியும் (Density) எடையும் கொண்ட ஒரு கனரக உலோகம். பொதுவாக விண்வெளித் தொழில்நுட்பம், ராக்கெட் மற்றும் ஜெட் என்ஜின்களின் வெப்பம் தாங்கும் பாகங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு வினையூக்கிகள் (Catalysts) ஆகியவற்றைத் தயாரிக்கவே இந்த உலோகம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், இதன் அடர்த்தி (21.02 கிராம்/செ.மீ³) சுத்தமான தங்கத்தின் அடர்த்திக்கு (19.32 கிராம்/செ.மீ³) மிக நெருக்கமாக இருப்பதைப் பயன்படுத்தி, தங்கத்தின் எடையை செயற்கையாக அதிகரிக்கும் மோசடியில் சிலர் இறங்கியிருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தங்கம் கலப்படம் - Rhenium Adulteration
தங்கம் கலப்படம் - Rhenium Adulteration

ராஜஸ்தானில் நடந்த சோதனையும் அதிர்ச்சிப் புலனாய்வும்!

இந்த விவகாரம் எப்படி வெளி உலகிற்குத் தெரியவந்தது என்பது ஒரு த்ரில்லர் திரைப்படத்திற்கு இணையானது.

பிரபல இந்தி நாளிதழான ‘தைனிக் பாஸ்கர்’ (Dainik Bhaskar) புலனாய்வுக் குழுவினர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உள்ளூர் நகைத் தொழிலாளி ஒருவரின் உதவியோடு இந்த மோசடியை நேரடியாகப் பரிசோதித்து அம்பலப்படுத்தியுள்ளனர்.

சீனத் தொடர்பு: சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் முகவரைத் தொடர்பு கொண்ட புலனாய்வுக் குழுவினரிடம், தங்கத்தில் 25 சதவீதம் வரை இந்த ரெனியம் பவுடரைக் கலந்தாலும் சாதாரணப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்க முடியாது என்று அந்த முகவர் கூறியுள்ளார். இந்தியாவின் பல நகரங்களில் இதற்கான விநியோகஸ்தர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடந்த சோதனை: மும்பையில் உள்ள ஒரு முகவர் மூலம் ₹5,000 கொடுத்து 1 கிராம் ரெனியம் பவுடரை வரவழைத்த புலனாய்வுக் குழு, ஜோத்பூரில் 7.830 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கத்துடன் அந்த 1 கிராம் ரெனியம் பவுடரையும், 0.75 கிராம் செம்பையும் சேர்த்து 9.580 கிராம் எடையுள்ள பாரம்பரிய நகை ஒன்றை உருவாக்கியுள்ளது.

ஏமாந்த பரிசோதனை மையங்கள்: அந்த நகையை ஜோத்பூர் நியூ ரோடு பகுதியில் உள்ள நகைக்கடைகளின் XRF (X-Ray Fluorescence) பரிசோதனை இயந்திரங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் மையத்திலும் சோதித்தபோது, அதில் ரெனியம் கலந்திருப்பதை அந்த இயந்திரங்களால் கண்டறிய முடியவில்லை. மாறாக, அது 916 (22 கேரட்) சுத்தமான தங்கம் எனச் சான்றளிக்கப்பட்டு ஹால்மார்க் முத்திரையும் குத்தப்பட்டுள்ளது! உண்மையில் அதில் 20 கேரட் அளவுக்கு மட்டுமே தங்கம் இருந்தது.

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் வழியாக ‘கோல்டு பவுடர்’ என்ற பெயரில் இந்தப் பொடி இந்தியச் சந்தைக்குள் நுழைவதாகவும், இதன் பின்னணியில் சீனத் தயாரிப்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

சோதனைகளில் ஏன் சிக்கவில்லை?

இந்தச் செய்தி வெளியானதும், இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் (IBJA) மற்றும் ரத்தினம்-ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (GJEPC) ஆகியவை உடனடியாக இந்தியத் தர நிர்ணய அமைப்பிற்கு (BIS) கடிதம் எழுதி, ஹால்மார்க் மையங்களில் திடீர் சோதனை நடத்தவும், பரிசோதனை முறைகளைக் கடுமையாக்கவும் வலியுறுத்தியுள்ளன.

இதையும் படியுங்கள்:
தங்கம் விலை வீழ்ச்சி: நகைக் கடன் வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் சட்ட, நிதி சிக்கல்கள் என்ன?
தங்கம் கலப்படம் - Rhenium Adulteration

அதேநேரம், சென்னை வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தினர் இது குறித்து விளக்கமளித்துள்ளனர். தங்கத்தின் உருகுநிலை 1,064 டிகிரி செல்சியஸ் மட்டுமே; ஆனால் ரெனியத்தின் உருகுநிலை 3,186 டிகிரி செல்சியஸ் ஆகும். எனவே சாதாரண நகைப் பட்டறைகளில் தங்கத்தோடு ரெனியத்தை உருக்கி ஒன்றாகக் கலப்பது சாத்தியமற்றது என்றும், அப்படியே உள்ளே பொதிந்து வைத்தாலும் நகை எளிதில் உடையும் தன்மை கொண்டதாக மாறிவிடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பழைய உரைகல் சோதனை மற்றும் சாதாரண XRF இயந்திரங்களில் இது தப்பினாலும், நவீன உயர்-திறன் XRF இயந்திரங்கள் மற்றும் ஃபயர் அஸ்ஸே எனப்படுகிற, ‘உருக்கிப் பார்க்கும் சோதனை’யில் இந்தக் கலப்படம் பெரும்பாலும் கண்டறியப்படும்.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

தங்கம் விலை குறைந்திருக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக பீதியடையாமல் விழிப்புணர்வோடு செயல்படுவதே புத்திசாலித்தனம். தங்கத்தில் ரெனியம் கலப்படம் குறித்து இன்னும் முழுமையான ஆய்வுகள் நடைபெறவோ, துறைசார் நம்பகத் தரப்புகளிலிருந்து இறுதியான அறிக்கைகள் வெளியாகவோ இல்லை. உறுதிப் படுத்தலுக்கு அதுவரை பொறுத்திருப்பது அவசியம்.

இப்போதும் இனிமேலும் தங்க நகைகள் அல்லது கெட்டித் தங்கம் வாங்கும்போது பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முக்கியமாக மேற்கொள்வது நல்லது.

அடையாளம் தெரியாத இடங்களிலோ, அதிகத் தள்ளுபடி தருவதாகக் கூறும் சிறிய கடைகளிலோ வாங்குவதைத் தவிர்த்து, பல ஆண்டுகளாக நற்பெயர் பெற்ற பாரம்பரிய நகைக்கடைகளில் மட்டுமே வாங்குங்கள்.

ஒவ்வொரு நகையிலும் 6 இலக்க ஆல்பா-நியூமரிக் BIS HUID எண் பொறிக்கப்பட்டிருக்கிறதா என்பதை ‘BIS Care’ செயலி மூலம் சரிபார்த்து, முறையான GST பில்லுடன் வாங்குங்கள். பழைய நகைகளை மாற்றும்போது நவீன XRF இயந்திரம் மூலம் பரிசோதித்து உறுதி செய்துகொள்ளுங்கள்.

முதலீட்டு நோக்கத்திற்காகத் தங்கம் வாங்கும்போது, நகைகளுக்குப் பதிலாகத் தொடர் எண்ணும் தூய்மைச் சான்றிதழும் கொண்ட 24 கேரட் தங்கக் கட்டிகளையோ நாணயங்களையோ வாங்குவது நல்லது. அவற்றின் தொடர் எண், எடை, தூய்மை ஆகியவை பில்லில் பதிவாகியிருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

நகை வாங்கும்போது பணமாகக் கொடுப்பதைத் தவிர்த்து, வங்கி மாற்றம் அல்லது கார்டு மூலமே பணம் செலுத்துவது நல்லது. பில், ரசீது, நகையின் ஒளிப்படம் மற்றும் HUID எண் ஆகியவற்றைப் பாதுகாத்து வையுங்கள்; எதிர்காலத்தில் நகையை விற்கவோ, மாற்றவோ தேவைப்பட்டால் அவை ஆதாரமாகப் பயன்படும்.

விலைச் சரிவு தந்திருக்கும் மகிழ்ச்சி, கவனக்குறைவால் நஷ்டமாக மாறிவிடாமல் இருக்க, ஒவ்வொரு வாடிக்கையாளரும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய தருணம் இது!

இதையும் படியுங்கள்:
எட்டாக்கனியாகும் தங்கம்: விலை குறையும்போது முன்பதிவு செய்வது எப்படி?
தங்கம் கலப்படம் - Rhenium Adulteration

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.