

2026 ஆம் ஆண்டின் நிலையற்ற நிதிச் சூழலில், இந்திய ரிசர்வ் வங்கியின் 5.25% ரெப்போ வட்டி விகிதத்துடன், முழுமையான பாதுகாப்பு தேடும் சில்லறை முதலீட்டாளர் களுக்கு அரசு பத்திரங்கள் (G-Sec, T-Bills, SDL) முக்கிய விருப்பமாக மாறியுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசின் இறையாளுமை உத்தரவாதம், குறைந்தபட்சம் ரூ.10,000 முதலீட்டு வாய்ப்பு, நிலையான வட்டி, TDS இல்லாத வட்டி வருவாய் ஆகியவை இதன் முக்கிய பலன்கள்.
உறுதியான மற்றும் பாதுகாப்பான வருமானம் தரும் முக்கிய அரசு பத்திரங்கள் மற்றும் திட்டங்கள் ஜி-செக் (G-Sec) பத்திரங்கள், ஆர்பிஐ சேமிப்பு பத்திரங்கள் (RBI Bonds) மற்றும் மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை உள்ளன. இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் மத்திய அரசின் முழுமையான உத்தரவாதத்துடன் கூடிய லாபத்தைப் பெறலாம். இவற்றில் ஜி-செக் பத்திரங்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.
2026 ஆம் ஆண்டின் நிலையற்ற நிதிச் சூழலில், உலகளாவிய சந்தைகள் மாறிக்கொண்டிருக்கும் வேளையிலும், இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆக இருக்கும் நிலையிலும், முழுமையான பாதுகாப்பு என்ற தேடல் மில்லியன் கணக்கான இந்திய முதலீட்டாளர்களை மீண்டும் அரசுப் பத்திரங்களை நோக்கி ஈர்த்துள்ளது.
அரசு பத்திரங்கள் (G-Sec) இனி பெருநிறுவனங்களுக்கு மட்டுமானவை அல்ல. அவை இப்போது சில்லறை முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தொகுப்புகளுக்கும் ஒரு முக்கிய அங்கமாக மாறி உள்ளது.
அரசு பாதுகாப்பு பத்திரங்கள்(G-Sec & T-Bills):
அரசு ஜி-செக் பத்திரங்கள் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளால் நேரடியாக வெளியிடப்படுகின்றன. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதில் பணத்தை இழக்கும் ஆபத்து துளியும் இல்லை. டிரெசுரி பில்கள்(T-Bills), காலமுறைப் பத்திரங்கள் (Dated Securities) மற்றும் மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDL) ஆகியவை முக்கிய வகைகள் ஆகும். இவற்றுக்கு இந்திய அரசின் முழுமையான உத்தரவாதம் இருப்பதால் மூலதனம் மற்றும் வட்டிக்கு ஆபத்து இல்லை.
ஜி-செக் பத்திரங்களின் முக்கிய அம்சங்கள்:
இந்திய அரசின் இறையாளுமை உத்திரவாதம் உள்ளதால், முதலீடு முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை நிலையான வட்டி வழங்கப்படுகிறது. குறுகிய காலம் (1 ஆண்டுக்கும் குறைவான டி-பில்கள்) முதல் நீண்ட காலம் (5 முதல் 40 ஆண்டுகள் வரை) வரை கிடைக்கின்றன.
டேட்டட் ஜி-செக்(Dated G-Sec):
இவை 5 முதல் 40 ஆண்டுகள் வரையிலான நீண்ட காலப் பத்திரங்களாகும். இதற்கான வட்டி அரையாண்டுக்கு ஒரு முறை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
டி-பில்ஸ்(Treasury Bills):
இவை 91,182 மற்றும் 364 நாட்கள் கொண்ட குறுகிய காலப் பத்திரங்களாகும். இதில் வட்டி தனியாக வராது. முகப்பு மதிப்பை விடக் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு, முதிர்வின்போது முழுத் தொகையும் திருப்பித் தரப்படும்.
மாநில மேம்பாட்டுக் கடன்கள்(SDLs): மாநில அரசுகள் தங்களின் நிதித் தேவைக்காக வெளியிடும் பத்திரங்கள் இவை. மத்திய அரசுப் பத்திரங்களை விடச் சற்று கூடுதல் வட்டி தரக்கூடியவை.
ரிசர்வ் வங்கி ரீடெய்ல் டைரக்ட் போர்டல் அல்லது பங்குச் சந்தைகள் வழியாக முதன்மைச் சந்தையில் குறைந்தபட்சம் ரூபாய் 10,000 முதல் முதலீட்டைத் தொடங்கலாம். இரண்டாம் நிலைச் சந்தையில், சில சமயங்களில் ரூபாய் 1,000 முதல் தொடங்கும் யூனிட்களைக் காணலாம்.
முதலீடு செய்யும் முறைகள்:
RBI Retail Direct Portal:
ரிசர்வ் வங்கியின் RBI Retail Direct அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பான் கார்டு, ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து நேரடியாகப் பத்திரங்களை வாங்கலாம். இதில் எந்தவிதமான புரோக்கரேஜ் அல்லது மறைமுகக் கட்டணங்களும் கிடையாது.
பங்குச்சந்தை தளங்கள்:
என்.எஸ்.இ (NSE goBID) அல்லது பி.எஸ்.இ (BSE Direct) செயலிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள் வழியாகவும் வர்த்தகம் செய்யலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகள்:
கில்ட் ஃபண்டுகள் (Gilt Funds) மூலமாகவும் மறைமுகமாக முதலீடு செய்ய முடியும்.
முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள்:
சில்லரை முதலீட்டாளர்கள் வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலே இதில் முதலீட்டைத் தொடங்கலாம்.
சந்தையில் வட்டி விகிதங்கள் குறையும் பொழுது, இந்த பத்திரங்களின் மதிப்பு அதிகரிக்கும். அப்போது இவற்றை இரண்டாம் நிலைச் சந்தையில் விற்று கூடுதல் லாபம் பார்க்கலாம்.
மூலதனத்தில் வரி பிடித்தம் இல்லை(No TDS). அதாவது இந்த பத்திரங்களின் வட்டி வருவாய்க்கு டிடிஎஸ் (TDS) பிடிக்கப் படுவதில்லை. இருப்பினும் உங்கள் வருமான வரி வரம்பின்படி நீங்கள் வரி செலுத்தவேண்டும்.
தற்போதைய சூழலில் அரசுப் பத்திரங்கள் நிலையான மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான காரணங்கள்:
முதலீட்டை பல்வேறு சொத்துகளில் வைத்திருக்க நினைப்பவர்களுக்கும், பாதுகாப்பான உறுதியான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கும் அரசு பத்திரங்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: