

எதிர்பாராத செலவுகளுக்குக் கடன் வாங்காமல் வரும் முன் காத்துக்கொள்வதற்கு காப்பீடு அவசியம். அந்தக் காப்பீடுகளை நாம் நான்கு வகைகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.
1) அவசரகாலக் காப்பீடு அல்லது அவசர கால நிதி
2) ஆயுள் காப்பீடு
3) மருத்துவக் காப்பீடு
4) வாகனக் காப்பீடு, வீட்டுக் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்ற இதர காப்பீடுகள்
இவற்றில் மூன்றாவதான மருத்துவக் காப்பீடு பற்றி விரிவாகப் பார்ப்போம்.
மருத்துவக் காப்பீடு என்றால் என்ன ?
மருத்துவக் காப்பீடு என்பது மருத்துவம் சார்ந்த செலவுகளுக்கு நிதி உதவி செய்து, மருத்துவ செலவுகளைக் கையாள உதவுவது. இதன் மூலம் மருத்துவம் சார்ந்த செலவுகளைக் கடன் வாங்காமல் எளிதில் கையாள முடியும்.
மருத்துவக் காப்பீடினை ஏன் வாங்க வேண்டும்?
பண வீக்கத்தின் காரணமாக மருத்துவச் செலவுகள் வருடா வருடம் அதிகரித்து வருகின்றன. மருத்துவம் சார்ந்த செலவுகள் வருடா வருடம் 14% அதிகரிப்பதாக ஆக்கோ இந்தியா மருத்துவக் காப்பீடு குறியீடு 2024 தெரிவிக்கிறது. பொதுவாக பணவீக்கமானது 8% என்று கணக்கிடப்படுகிறது. ஆனால், மருத்துவச் செலவுகளின் பணவீக்கம் இதனைவிட மிக அதிகமாக உள்ளது. எனவே, இத்தகைய பெரிய மருத்துவச் செலவுகளை மருத்துவக் காப்பீடின் மூலம் நாம் எளிதில் கையாள முடியும்.
மருத்துவக் காப்பீடு எவ்வளவு வைத்திருக்க வேண்டும்?
மருத்துவக் காப்பீடில் மூன்று வகைகள் உள்ளன.
1. அடிப்படைக் காப்பீடு(Base insurance) - ஒரு மருத்துவச் செலவு கோரலில் (claim) முதன் முதலில் செயல்படும் காப்பீடு
2. மேலடுக்குக் காப்பீடு(Top up insurance) - ஒரு மருத்துவச் செலவு கோரலில், அடிப்படைக் காப்பீடு கொடுத்த பணம் போக, மீதமுள்ள பணத்திற்குக் கோரப்படும் காப்பீடு.
3. மிக மேலடுக்குக் காப்பீடு(Super top up insurance) - ஒரு வருடத்திற்கான மருத்துவச் செலவு கோரல்களில், அடிப்படைக் காப்பீடு முழுமையாக கோரிய பிறகு, மீதமுள்ள பணத்திற்காக கோரப்படும் காப்பீடு
இவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
உதாரணமாக, இராமு மற்றும் சோமு என்ற இருநபர்களைக் கணக்கில் கொள்வோம். இருவரும் அடிப்படைக் காப்பீடு 5 இலட்ச ரூபாய் வைத்துள்ளனர். இராமு மேலடுக்குக் காப்பீடு 20 இலட்சம் வைத்துள்ளார். சோமு மிக மேலடுக்குக் காப்பீடு 20 இலட்ச ரூபாய் வைத்துள்ளார். இருவருக்கும் மேலடுக்கு காப்பீடுகளுக்கான கழிப்புத் தொகை(deductible) 5 இலட்ச ரூபாய். அது அடிப்படைக் காப்பீடு தொகையுடன் ஒத்து போகிறது.
இருவரும் ஒரே வருடத்தில் மூன்று முறை காப்பீடு கோரலைச் செய்வதாக கணக்கில் கொள்வோம்.
1. முதல் முறை - 5 இலட்ச ரூபாய்.
2. இரண்டாம் முறை - 8 இலட்ச ரூபாய்
3. மூன்றாம் முறை - 10 இலட்ச ரூபாய்
இராமு எடுத்திருந்த மேலடுக்குக் காப்பீடின் படி, செலுத்திய பணம்;
1. இராமு - முதல் முறை - அடிப்படைக் காப்பீடு மூலம் 5 இலட்ச ரூபாய்
2. இராமு - இரண்டாம் முறை - 5 இலட்ச ரூபாய் சொந்தப் பணம். 3 இலட்ச ரூபாய் மேலடுக்குக் காப்பீடு. அடிப்படைக் காப்பீடு இப்போது இல்லை.
3. இராமு - மூன்றாம் முறை - 5 இலட்ச ரூபாய் சொந்தப் பணம். 5 இலட்ச ரூபாய் மேலடுக்குக் காப்பீடு. அடிப்படைக் காப்பீடு இப்போது இல்லை.
இராமு மொத்தமாக கைப்பட செலுத்திய பணம் - 10 இலட்ச ரூபாய்
சோமு எடுத்திருந்த மிக மேலடுக்கு காப்பீடின் படி, செலுத்திய பணம்;
1. சோமு - முதல் முறை - அடிப்படைக் காப்பீடு மூலம் 5 இலட்ச ரூபாய்
2. சோமு - இரண்டாம் முறை - 8 இலட்ச ரூபாய் மிக மேலடுக்கு காப்பீடு. அடிப்படைக் காப்பீடு முடிந்து விட்டது.
3. சோமு - மூன்றாம் முறை - 10 இலட்ச ரூபாய் மிக மேலடுக்கு காப்பீடு. அடிப்படைக் காப்பீடு முடிந்து விட்டது.
சோமு மொத்தமாக கைப்பட செலுத்திய பணம் - 0 ரூபாய்
மேலடுக்குக் காப்பீடில், ஒவ்வொரு காப்பீடுக் கோரலின் போதும், தனித்தனியாக கழிப்புத்தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, ஒவ்வொரு காப்பீடுக் கோரலின் போதும், கழிப்புத்தொகை 5 இலட்சம் கணக்கில் கொண்டு, மீதமுள்ள பணத்திற்கு மேலடுக்குக் காப்பீடு வழங்கப்படுகிறது.
மிக மேலடுக்குக் காப்பீடில், காப்பீடு கோரலின்போது, ஒரு வருடத்தின் மொத்த கழிப்புத் தொகை கணக்கிடப் படுகிறது. முதல் முறை அடிப்படை காப்பீடு கழிப்புத்தொகையை பூர்த்தி செய்த பின்னர், பின்வரும் எல்லா மருத்துவக் கோரல்களின் போதும், கழிப்புத் தொகை 5 இலட்சத்தை கணக்கில் கொள்ளாமல், மீதமுள்ள பணத்திற்கு மிக மேலடுக்குக் காப்பீடு வழங்கப்படுகிறது.
எனவே, அடிப்படைக் காப்பீடு மற்றும் மிக மேலடுக்குக் காப்பீடு என்ற கலவையை நாம் எடுத்துக்கொள்வதன் மூலம், குறைந்த பணத்தில், அதிக மருத்துவக் காப்பீடு பெறமுடியும்.
ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடனேயே மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது நலம். அலுவலகத்தின் மருத்துவக் காப்பீடினை சார்ந்து இருந்தால், வேலை மாறும் போது காப்பீடு இல்லாமல் இருந்தால், அது அபாயகரமானது. சிறு வயதிலேயே எடுத்துக்கொள்வது நலம். குறைந்தபட்சம் 1 இலட்சம் எனத் தொடங்கி, 10 முதல் 15 இலட்சம் வரை அடிப்படைக் காப்பீடு எடுத்துக் கொள்வது நலம். மிக மேலடுக்குக் காப்பீடு 10 இலட்சம் தொடங்கி, 50 இலட்சம் முதல் 1 கோடி வரை எடுத்துக் கொள்வது நலம். குடும்பத்தில் நபர்களின் உடல்நலத்திற்கு ஏற்றவாறு தனித்தனியாக எடுத்துக்கொண்டால், காப்பீடுத் தவணையைக் குறைக்கலாம். குடும்பத்தின் இளவயதினருக்கு ஒரு குடும்பக் காப்பீடும், வயதானவர்களுக்குத் தனியாக குடும்பக் காப்பீடும் எடுத்துக்கொண்டால், காப்பீடு தவணைத் தொகை குறையும்.
மருத்துவக் காப்பீடு எங்கு வாங்க வேண்டும்?
மருத்துவக் காப்பீடுகளை இணையத்தில் ஒப்பிட்டு எந்த காப்பீடு நிறுவனம் குறைந்த பணத்தில் காப்பீடு தருகிறார்கள் என்று பார்க்க வேண்டும். காப்பீடு என்பது தனிநபர் சம்பந்தப்பட்டது.
வீட்டின் அருகிலுள்ள மருத்துவமனை எந்த காப்பீடின் கூட்டமைப்பில் (Network) வருகிறது என்று கண்டு, அந்தக் காப்பீடினை வாங்குவது நலம். மருத்துவக் காப்பீடு கோரலின் போது, எந்த ஒரு கழிப்புத் தொகையும் இல்லாத காப்பீடு தேர்ந்தெடுப்பது நலம். மருத்துவக் காப்பீடு கோரலில் எந்த ஒரு உள்வரம்பு (Sublimit) இல்லாத காப்பீடு தேர்ந்தெடுப்பது நலம். ஏற்கனவே உள்ள நோய்கள் (Pre-existing disease) எந்தக் காப்பீடில் ஒப்புக் கொள்ளப்படும் என்றும், நோய்க் காத்திருப்புக் காலம்(waiting period) எவ்வளவு என்றும் கண்டு, குறைவான காத்திருப்புக் காலம் உள்ள காப்பீடினைத் தேர்ந்தெடுப்பது நலம். எந்த நிறுவனத்தில் அடிப்படைக் காப்பீடு மற்றும் மிக மேலடுக்குக் காப்பீடு வழங்கப்படுகின்றன என்று கண்டு, அந்தக் காப்பீடு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம், மிக மேலடுக்குக் காப்பீடு சார்ந்த காப்பீடுக் கோரல்கள் எளிதாக இருக்கும். பணமில்லா மருத்துவமனை சேர்ப்பினை(cashless hospitalization) எளிதாக செய்யமுடியும்.
மருத்துவக் காப்பீட்டினை எப்படி பயன்படுத்த வேண்டும்?
மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பே பணம் இல்லாத மருத்துவமனை சேர்ப்பதற்கு அனுமதி பெற்றுவிட்டால், பணம் செலவின்றி நம்மால் மருத்துவச் செலவுகளைக் கையாள முடியும். ஒருவேளை பணமில்லாத மருத்துவமனை சேர்ப்புக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் அல்லது தாமதமாகும் பட்சத்தில், அவசர கால நிதியைப் பயன்படுத்தி மருத்துவ செலவுகளைக் கையாண்டு, பின்னர் காப்பீடு கோரலாம்.
மருத்துவக் காப்பீடு என்ற அருமையான திட்டத்தைப் பயன்படுத்தி, மருத்துவ செலவுகளைக் கடனில்லாமல் நம்மால் கையாள முடியும்.