
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம்தேதி வரை நடைபெற உள்ளது. உலகின் மிக பெரிய ஆன்மிக கூடல் என்பதால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்று வருகின்றனர். கங்கா, யமுனா, சரஸ்வதி (மாயநதி) சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த 15 நாட்களில் இதுவரை 14.52 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராடியுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் வந்து திரிவேணி சங்கமத்தில் புனிதி நீராடி வருகின்றனர். மக்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
வட இந்தியாவில் மவுனி அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் இந்த நாளில் கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடுவது ஆன்மாவை சுத்தமாக்கும் என்பது ஐதீகம். நேற்று மௌனி அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் படுகாயம் அடைந்ததாகவும், மேலும் உயிரிழந்தவர்களில் 25 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மகா கும்பத்தின் துணை ஆய்வாளர் (டிஐஜி) திரு கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசலுக்கான காரணங்களை விசாரிக்க, நீதிபதி ஹர்ஷ் குமார், முன்னாள் இயக்குநர் ஜெனரல் விகே குப்தா, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விகே சிங் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை நீதித்துறை ஆணையம் நியமித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பக்தர்களின் தேவை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் 5 முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.
* பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து வகையான வாகனங்களும் மகா கும்பமேளா பகுதியில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
* விவிஐபி பாஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* பக்தர்களின் நடமாட்டத்தை சீரமைக்க ஒருவழி போக்குவரத்து முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
* கூட்ட நெரிசலைக் குறைக்க பக்கத்து மாவட்டங்களான பிரயாக்ராஜிலிருந்து வரும் வாகனங்கள் மாவட்ட எல்லைகளில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* பிப்ரவரி 4-ம்தேதி வரை நான்கு சக்கர வாகனங்கள் நகருக்குள் நுழைவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக, பெரிய அளவிலான நிகழ்வுகளைக் கையாள்வதில் அனுபவம் வாய்ந்த ஐந்து சிறப்புச் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பக்தர்களும் நகரத்திலிருந்து பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் புறப்படுவதை உறுதிசெய்யுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஆய்வு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பக்தர்கள் தங்கும் பகுதிகளில் உணவு, குடிநீர், தடையில்லா மின்சாரம் ஆகியவற்றுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாநில அரசு உறுதியளித்துள்ளது. அயோத்தி, கான்பூர், ஃபதேபூர், லக்னோ, பிரதாப்கர் மற்றும் வாரணாசி உட்பட பிரயாக்ராஜுக்கு செல்லும் முக்கிய வழித்தடங்களில் ரோந்து மற்றும் சீரான போக்குவரத்துக்கு வழிவகைசெய்யப்பட்டுள்ளது.