நமது பணத்தை ஒரு வங்கியில் போட்டு அதற்கான வட்டியைப் பெறுகிறோம்.
ஆனால் எவ்வளவு பணம் எப்போது சேரும் என்பதற்கு ஒரு பேப்பரையும் பேனாவையும் வைத்துக் கொண்டோ அல்லது ஒரு கால்குலேட்டரை வைத்துக் கொண்டோ கணக்கிடுகிறோம்.
ஆனால் 72 என்ற எண் தரும் ஒரு விதி இந்தக் கணக்கைச் சுலபமாக்கி விடுகிறது.
இருந்த இடத்தில் இருந்தே மனக்கணக்காக விடையை ஒரு நொடியில் கண்டு பிடித்து விடலாம். இது சுமாரான விடை தான். என்றாலும் உடனடியாக உங்களுக்கு ஒரு விடையைத் தந்து விடுகிறது.
எப்படி?
வங்கி உங்களுக்கு 12% வருடாந்திர வட்டி தருகிறது என்றால் உங்களது வைப்புத் தொகை இரண்டு மடங்காக எத்தனை காலம் ஆகும்?
72ஐ பன்னிரெண்டால் வகுத்துப் பாருங்கள்; வருவது தான் விடை.
72/12 = 6
ஆறு வருடங்களில் உங்களது வைப்புத் தொகை இரு மடங்காகும்.
(இப்போது யார் 12% தருகிறார்கள் என்று கேட்க வேண்டாம். பழைய காலத்தில் இது சர்வ சாதாரணமாகத் தரப்படும் வட்டி விகிதமாகும். அந்தக் காலத்தில் 15% தருவதும் கூட வழக்கம் தான்!)
1% தான் வட்டி என்றால் 72 / 1 = 72, உங்கள் பணம் 72 வருடங்களில் இரட்டிப்பாகும்.
3% தான் வட்டி என்றால் 72 / 3 = 24, உங்கள் பணம் 24 வருடங்களில் இரட்டிப்பாகும்.
4% தான் வட்டி என்றால் 72 / 4 = 18,, உங்கள் பணம் 18 வருடங்களில் இரட்டிப்பாகும்.
6% வட்டி என்றால் 72 / 6 = 12,, உங்கள் பணம் 12 வருடங்களில் இரட்டிப்பாகும்.
8% வட்டி என்றால் 72 / 8 = 9,, உங்கள் பணம் 9 வருடங்களில் இரட்டிப்பாகும்.
9% வட்டி என்றால் 72 / 9 = 8, உங்கள் பணம் 8 வருடங்களில் இரட்டிப்பாகும்.
இன்னும் துல்லியமாகத் தெரிய வேண்டுமென்றால் 70 அல்லது 69.3 என்பதை வைத்துக் கொண்டு கணக்கிட்டுப் பார்க்கலாம். ஆனால் 72 என்பது எல்லா விதமான எண்களுக்கும் உடனடியாக மனக்கணக்காகவே விடையைத் தருகிறது.
அடுத்த விதி: எண் 114 விதி
உங்கள் பணம் மூன்று மடங்காக எப்போது ஆகும். இருக்கவே இருக்கிறது விதி எண் 114.
114 ஐ வட்டி விகிதம் 10ஆல் (10% வட்டி) வகுத்துப் பாருங்கள்
வரும் விடை : 11.4 (சுமார் 11 வருடங்கள் ஆகும் என்கிறது விடை)
அடுத்த விதி : எண் 144 விதி
உங்கள் பணம் நான்கு மடங்காக எப்போது ஆகும் என்பதைக் கணக்கிட உதவுவது விதி எண் 144.
144 ஐ வட்டி விகிதம் 10ஆல் வகுத்துப் பாருங்கள்
வரும் விடை : 14.4 (சுமார் பதிநான்கரை வருடங்கள் ஆகும் என்கிறது விடை.
இது போன்ற இன்னும் பல எளிமையான சூத்திரங்கள் உண்டு. அவற்றையும் தெரிந்து கொண்டால் மனக்கணக்கே எல்லா விடைகளையும் தரும்!