

இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் (Hyundai), பாதுகாப்பான, நவீன வசதிகள் கொண்ட ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி (SUV) ரக கார்களை உற்பத்தி செய்கிறது. க்ரெட்டா, வென்யூ, எக்ஸ்டர், மற்றும் ஐ20 ஆகியவை இந்த நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடல்களாகும். தற்போது, எலக்ட்ரிக் வாகனங்களிலும் (IONIQ 5, Creta EV) நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஸ்போர்ட்டியான ஹேட்ச்பேக் மாடல், ஹூண்டாய் ஐ20. சமீபத்தில் இந்த வரிசையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் குறைவான விலை கொண்ட புதிய தொடக்க நிலை வேரியண்டான எராவை (ERA) வெளியிட்டுள்ளது ஹூண்டாய். வெறும் ரூ.5.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த புதிய ஐ20 வேரியன்ட் வெளியாகியிருக்கிறது.
இதன் மூலம், ஐ20 வேரியண்டில் குறைந்த விலை காராக இது அமைந்துள்ளது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 எரா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ற ஒரேயொரு என்ஜின் தேர்வை மட்டுமே கொடுத்துள்ளது ஹூண்டாய். இந்த என்ஜினானது 83 எச்.பி பவர்மற்றும் 115 என்.எச். டார்க்கை உற்ப்த்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளை கொடுத்துள்ளது ஹூண்டாய். மேலும் இந்த காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
இந்த வேரியன்ட்களில் தொடக்க நிலையான ஏரா மற்றும் மேக்னா எக்ஸிக்யூட்டிவ் ஆகிய இரண்டை தவிர மற்ற அனைத்து வேரியன்ட்களிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தலைமுறை மாடலாக வந்திருக்கும் இந்த புதிய ஐ20 எரா கார் முந்தைய மாடல்களைவிட முற்றிலும் வேறுபட்ட வகையிலும், புதுமையான டிசைன் அம்சங்கள், கனெக்ட்டிவிட்டி வசதிகள் என அனைத்து இந்த காருக்கு வலுசேர்க்கின்றன.
ஐ20 ஏரா வேரியன்டில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVMகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், முன்பக்க கதவுகளுக்கு பவர் விண்டோக்கள், முன்பக்க இருக்கைகளுக்கு அட்ஜெஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்கள், டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட், ஸ்டீயரிங்-மவுண்டட் ஆடியோ மற்றும் ப்ளூடூத் கட்டுப்பாடுகள், ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஐசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்கள், ஹாலஜன் முகப்பு விளக்குகள், பேப்ரிக் சீட்கள், யூ,எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் போர்ட், ரியர் ஸ்பாய்லர், வீல் கவர்களுடன் கூடிய 14 அங்குல ஸ்டீல் வீல்கள் உள்ளிட்ட கூர்மையான டிசைன் அம்சங்களுடன் அதிக வசீகரமாக உள்ளது.
புதிய ஹூண்டாய் ஐ20ஏரா காரில் புதிய பம்பர் அமைப்பு, புரொஜெக்டர் பனி விளக்குகள், பெரிய ஏர் இன்டேக் அமைப்பு, முன்புறத்தில் கருப்பு வண்ண ஸ்கர்ட் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. மேலும் காரின் ஜன்னல் கண்ணாடிகளுக்கு கீழாக க்ரோம் பீடிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காரின் பின்புறத்தில் Z வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் இரண்டையும் க்ரோம் பீடிங் மூலமாக இணைத்தது போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனுடன், ஹூண்டாய் நிறுவனம் , ஸ்பீக்கர்கள், குரூஸ் கண்ட்ரோல், சன்ரூப், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், பின்பக்க கதவுகளுக்கும் பவர் விண்டோக்கள், கீலெஸ் எண்டரி, எல்.இ.டி.விளக்குகள், லெதர் போன்ற சீட்கள், டேஷ்கேம் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகள் வேண்டும் என்றும் விரும்பும் வாடிக்கையாளர்கள் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும் ஐ20யின் மற்ற வேரியண்டுகளில் ஒன்றையே தேர்வு செய்து கொள்ளலாம்.
அமேசான் கிரே, அட்லஸ் ஒயிட், பியரி ரெட், டைபூன் சில்வர், டைட்ன் கிரே மற்றும் ஸ்டாரி நைட் ஆகிய 6 விதமான அசத்தலான நிறங்களில் இந்த ஐ20 ஏரா ஹேட்ச்பேக் கிடைக்கிறது. இந்த நிறங்கள் நிச்சயம் வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளும் என்பது நிச்சயம்.
இந்திய சந்தையில், ஹூண்டாய் i20, மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா மற்றும் டாடா அல்ட்ரோஸ் போன்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறது.