

உள்வரும் சுற்றுலா (Inbound tourism) என்பது வெளிநாட்டுப் பயணிகள் ஓய்வு அல்லது வணிக நோக்கங்களுக்காக ஒரு நாட்டிற்குப் பயணம் செய்வதாகும். அது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன், கலாச்சார பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் ஷாப்பிங் போன்ற பல்வேறு வழிகளில் வருவாய் ஈட்ட உதவுகிறது. இது அந்நிய செலாவணியை ஈட்டுகிறது. உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிக்கிறது.
1) உள்வரும் சுற்றுலாவின் பொருளாதார நன்மைகள்:
a) தேசிய வருவாய் அதிகரிப்பு:
உள்வரும் சுற்றுலா ஒரு நாட்டிற்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக அமைகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை ஹோட்டல் தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் உள்ளூர் பொருட்கள் வாங்குதல் போன்ற செலவுகள் மூலம் நாட்டின் தேசிய வருவாயை அதிகரிக்கிறது.
b) சமூக கலாச்சார நன்மைகள்:
சுற்றுலாப் பயணிகளின் வருகையால், கலாச்சார பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு வழி வைக்கிறது. இது உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கை முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமூக வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கிறது. அத்துடன் இது வெவ்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே பரிமாற்றத்தை எளிதாக்கவும் உதவுகிறது.
c) வேலைவாய்ப்பு உருவாக்கம்:
சுற்றுலாத்துறை மிகவும் உழைப்பு மிகுந்த துறைகளில் ஒன்றாகும். இது விருந்தோம்பல், சுற்றுலா வழிகாட்டிகள், போக்குவரத்து சேவைகள், ஹோட்டல்கள், சில்லறை விற்பனை, நினைவு பரிசு கடைகள் மற்றும் சுற்றுலா தொடர்பான பல்வேறு துறைகளில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
உள்வரும் சுற்றுலா என்பது வெளிநாட்டினர் ஒரு நாட்டிற்குப் பயணம் செய்வதை குறிக்கும். அதுவே உள்நாட்டு சுற்றுலா என்பது ஒரு நாட்டில் வசிக்கும் மக்கள் தங்கள் நாட்டிற்குள் மட்டுமே பயணம் செய்வதை குறிக்கும்.
d) அந்நிய செலாவணி ஈர்ப்பு:
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த நாணயத்தை உள்ளூர் நாணயமாக மாற்றுவதால் நாட்டிற்குள் அந்நிய செலாவணி பாய்கிறது. இது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க உதவுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செலவழிக்கும் பணம், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் சேர்க்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.
அவர்கள் உள்ளூர் சந்தைகளில் செலவழிக்கும் பொழுது, அது உள்ளூர் வணிகங்கள், கைவினைஞர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு நேரடியாக பயனளித்து உள்ளூர் பொருளாதரத்தை மேம்படுத்துகிறது.
e) பொருளாதார வளர்ச்சி:
சுற்றுலா பயணிகள் செலுத்தும் வரி மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இது விமான நிலைய வரிகள், ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கான விற்பனை வரிகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கான நுழைவுக் கட்டணங்கள் ஆகியவை அடங்கும். இந்த நிதி உள் கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் முதலீடுகளை ஈர்க்கிறது. இது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.
2) உள்வரும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிகள்:
அரசாங்கம் மற்றும் சுற்றுலாத்துறை இரண்டும் இணைந்து செயல்பட்டு, உள்வரும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
உள்வரும் சுற்றுலாவை மேம்படுத்த, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும். சுற்றுலாத் தளங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஆன்லைன் முன்பதிவு வசதிகளை மேம்படுத்துதல்.
வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான அணுகலை உறுதி செய்ய, உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் பிற வசதிகளை மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியான பயணத்தை உறுதி செய்தல் வேண்டும்.
தனித்துவமான கலாச்சார அனுபவங்கள், திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றை மையப்படுத்தி விளம்பரங்களை உருவாக்கலாம்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு தரமான சேவைகளை வழங்குதல்.
சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், பல்வேறு நாடுகளின் சந்தைப்படுத்தல் தேவைகளுக்கு ஏற்ப விளம்பர உத்திகளை வகுத்தல் போன்றவை உள்வரும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிகளாகும்.