

பங்குச்சந்தையில் ஐபிஓ (IPO) முதலீடு செய்வது என்பது பல நேரங்களில் லாட்டரிச் சீட்டு போன்ற அனுபவமாகும். நல்ல கிரே மார்க்கெட் பிரீமியம் (GMP) இருக்கும் ஐபிஓ-வில் அலாட்மென்ட் கிடைத்தால் லிஸ்டிங் நாளன்றே 20%, 30% லாபத்தை அள்ளிவிடலாம் என்ற கனவோடுதான் ஒவ்வொரு சில்லறை முதலீட்டாளரும் விண்ணப்பிக்கிறார்கள்.
ஆனால், சந்தையின் நிஜ நிலவரம் எப்போதும் நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி அமைவதில்லை. சில நேரங்களில், நல்ல பிரீமியத்தில் வர்த்தகமான பங்குகளும் லிஸ்டிங் நாளன்று தலைகீழாக மாறி நஷ்டத்தில் பட்டியலிடப்படும். அத்தகைய ஒரு சூழலில் பதற்றமடைந்து நஷ்டத்தில் விற்றுவிட்டு ஓடுவதா, அல்லது நிதானத்தைக் கடைபிடித்து அசல் தொகையை மீட்டு லாபம் பார்ப்பதா?
இதோ எனது நேரடி அனுபவத்திலிருந்து ஒரு களப்பார்வை!
நஷ்டத்தில் தொடங்கிய லிஸ்டிங் அதிர்ச்சி!
சமீபத்தில் வெளியாகி, முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'போன்ஃபிக்லியோலி டிரான்ஸ்மிஷன்ஸ்' (Bonfiglioli Transmissions) ஐபிஓ-வில் எனக்கு ஒரு லாட் (25 பங்குகள்) அலாட்மென்ட் ஆகியிருந்தது.
ஐபிஓ வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, 14-10-26 அன்று இதன் ஜிஎம்பி (GMP) 30% வரை உச்சத்தில் இருந்தது. ஆனால், அதன் அளவு படிப்படியாகக் குறைந்து, ஐ.பி.ஓ.வின் இரண்டாம் நாளில் 21.3% ஆகியது.
இது இனியும் குறையலாம் என்பது தெரிந்தது. என்றாலும், லிஸ்டிங் நாள் அன்றோ, அதைத் தொடர்ந்து வரும் நாட்களிலோ, 10% லாபம் கிடைத்தால் கூடப் போதும் என்கிற எண்ணத்தில்தான் விண்ணப்பித்தேன்.
ஆனால், லிஸ்டிங் நாளான அக்டோபர் 23 அன்று காலை 10 மணிக்குச் சந்தையில் நடந்த நிகழ்வு பேரதிர்ச்சியாக இருந்தது!
ஒட்டுமொத்த சந்தையில் நிலவிய சரிவு மற்றும் பிரீ-ஓபன் வர்த்தகத்தில் எழுந்த அவசர விற்பனை அழுத்தத்தால் (Selling Pressure), இந்தப் பங்கு அதன் பிரைஸ் பேண்ட்டின் குறைந்தபட்ச விலையான ₹558-ஐ விடக் கடுமையாகச் சரிந்து, ₹551 என்ற தள்ளுபடி விலையிலேயே (Discount Listing) பட்டியலிடப்பட்டது. அதாவது, லிஸ்டிங் ஆன நிமிடத்திலேயே எனது முதலீடு சுமார் 6% நஷ்டத்தில் (சிவப்பு நிறத்தில்) தத்தளித்துக்கொண்டிருந்தது.
பதற்றத்தை வென்ற நிதானம்: ஏன் உடனே விற்கவில்லை?
பொதுவாக, லிஸ்டிங் நாளில் ஒரு பங்கு நஷ்டத்தில் தொடங்கும்போது, பெரும்பாலான சில்லறை முதலீட்டாளர்கள் "ஐயோ, இன்னும் விலை சரிந்துவிடுமோ" என்ற பயத்தில், வந்த விலைக்குப் பங்கை விற்றுவிட்டு நஷ்டத்தைப் பதிவு செய்துவிட்டு வெளியேறி விடுவார்கள் (Panic Selling).
ஆனால், அந்த நேரத்தில் நான் சட்டென்று முடிவெடுக்காமல், சில அடிப்படைகளை நிதானமாக யோசித்தேன்.
1. போன்ஃபிக்லியோலி என்பது தொழிற்துறை கியர்பாக்ஸ்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் கடனில்லாத (Debt-free), வலுவான ROCE (>30%) கொண்ட நிறுவனம். எனவே, அடிப்படை பலம் (Fundamentals) இருக்கிறது.
2. இந்தச் சரிவு நிறுவனத்தின் பிரச்னையால் வரவில்லை; ஒட்டுமொத்தப் பங்குச்சந்தையில் நிலவும் வீழ்ச்சியால்தான் நிகழ்ந்துள்ளது.
3. எப்படியானாலும் அன்று பிற்பாடு விலை ஏறினாலும் அதிகபட்சமாக ஒரு லாட்டுக்கு சுமார் ₹300 - 500 லாபம் வேண்டுமானால் கிடைக்கலாம்; இப்போதைவிட விலை இறங்கினாலும் இறங்கலாம் என யூகித்தேன்.
எதற்கும், பொறுத்திருந்து பார்ப்போம் என முடிவு செய்தேன்.
பங்கை வாங்குவோர் எண்ணிக்கை மெல்ல அதிகரிக்கத் தொடங்கி, நஷ்ட அளவு குறைந்துகொண்டே வந்தது. பதினோரு மணி வாக்கில் விலை பச்சை நிறம் கண்டது. “அப்பாடா...!” என்று மனதில் ஆசுவாசம். விலை ₹140க்கு மேல் போயிற்று. ஆனால் பச்சை நிறம் அதிக நேரம் நீடிக்காமல் மீண்டும் சிவந்தது.
அதே நாளில் லிஸ்டிங் ஆனதும், எனக்கு அலாட்மென்ட் கிடைக்காததுமான டோன்போ இமேஜிங் ஐ.பி.ஓ. லாபத்தில் தீபாவளி கொளுத்திக்கொண்டிருந்தது. அதன் விலை விறுவிறுவென மேலேறிக்கொண்டிருக்க, போன்ஃபிக்லியோலி சரிவதும் சற்று உயர்வதுமாகத் தடுமாறிக்கொண்டிருந்தது. அன்று சற்று நேரம் சுமார் ₹200-க்கு சமீபமாக மொத்த லாபத்தில் செல்லவும் செய்தது. ஆனால், நான் விற்கவில்லை.
நிறுவனத்தின் அடிப்படை பலத்தின் மீது நம்பிக்கை வைத்து, “சந்தை நிலைபெறும் வரை சில நாட்கள் பொறுமையாகக் காத்திருப்போம்" என்ற முடிவை உறுதியாக எடுத்தேன்.
தொடர்ந்த காத்திருப்பும் வந்தடைந்த மீட்சியும்!
எனது கணிப்பும் நிதானமும் வீண் போகவில்லை.
· இரண்டாம் நாள் (நேற்று - 26-10-26): லிஸ்டிங் நாளன்று சிவப்பு நிறத்திலேயே தத்தளித்த பங்கு விலை, இரண்டாம் நாளில் மெல்ல மீண்டு பச்சை நிறத்திற்கு வந்து, அசல் விலையான ₹586-ஐக் கடந்து உயர்ந்தது.
· மூன்றாம் நாள் ( 27-10-26): சந்தை மேலும் சாதகமாக மாறவே, பங்கு விலை ₹630 - 635 என்ற நல்ல நிலையை எட்டியது!
பங்கு விலை பத்து மணிவாக்கில் ₹628-ஐ அடைந்தபோது முதல் தவணையாக 6 பங்குகளை விற்பனை செய்தேன். பிறகு மீண்டும் சரிவு. ஸ்டாப் லாஸ் வைக்கலாமா, எவ்வளவுக்கு வைக்கலாம் என சற்று நேரம் என்னோடே மல்லுக்கட்டல். 620, 618 எனத் தோன்றிய எண்களை அப்போதைய சரிவு விரைவாகவே தொட்டுவிட்டது. ஐ.பி.ஓ. நாளிலும், அதற்கடுத்த சில நாட்களிலும் விலை ஏற்ற இறக்கங்கள் ஓத அலைகள் போல இருக்கும். எனவே, இப்போது ஸ்டாப் லாஸ் வைக்க வேண்டாம் எனத் தீர்மானித்தேன்.
இந்த மாதிரியான நேரங்களில் ஏற்ற இறக்கங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் தேவையில்லாத பதற்றம் உண்டாகும். எனவே, 6 பங்குகளை ₹630-க்கு லிமிட் ஆர்டர் போட்டுவிட்டு லாக் அவுட் செய்துவிட்டேன்.
தொடர்ந்து 12 மணி வாக்கில், அந்த விலையை அடைந்து அப்பங்குகள் விற்பனையாகின.
ஆக, மொத்தம் 12 பங்குகள் ₹7,548 தொகையில் விற்பனையாயின. பிரைஸ் பேண்ட் விலையான ₹586-டன் ஒப்பிடும்போது, இந்த 12 பங்குகளில் மட்டும் ₹516 லாபம் (7.33% லாபம்) கிடைத்தது.
7.33% லாபம்: சிறியதா, பெரியதா?
சிலருக்கு 7.33% என்பது சிறிய லாபமாகத் தோன்றலாம். ஆனால் நிதி மேலாண்மை ரீதியாகப் பார்த்தால்:
· வங்கிகள் அல்லது அஞ்சலகங்களில் ஓராண்டு முழுவதும் பணத்தை முடக்கி வைத்தால்தான் 6.5% முதல் 7.5% வரை வருடாந்திர வட்டியே கிடைக்கும்.
· அதை வெறும் 10 - 15 நாட்களுக்குள்ளாக ஐபிஓ மூலம் ஈட்டுவது என்பது மிகச் சிறந்த குறுகிய கால வருவாயாகும்!
அனைத்திற்கும் மேலாக, லிஸ்டிங் நாளன்று ₹551-க்கு வந்தபோது பயந்துபோய் விற்றிருந்தால் நஷ்டத்தைச் சந்தித்திருப்பேன். ஆனால் நிதானமாக இருந்ததால், முதலீடு செய்த அசல் தொகையில் பாதிக்கும் மேல் (₹7,548) கைக்குத் திரும்ப வந்ததோடு, நல்ல லாபமும் கிடைத்தது.
மீதமுள்ள 13 பங்குகள் இப்போதைக்கு ஆபத்தற்ற (Risk-Free) நிலையில் எனது டிமேட் கணக்கில் உள்ளன. மேலும் விலை உயரும்போது இன்னும் 6 பங்குகளை விற்றுவிட்டு, மீதியை நீண்டகாலத் துணை முதலீட்டு போர்ட் ஃபோலியோவில் வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளேன்.
முதலீட்டாளர்களுக்குப் பகிர விரும்பும் 3 டிப்ஸ்கள்:
1. பதற்றப்பட்டு விற்காதீர்கள்: ஐபிஓ நஷ்டத்தில் பட்டியலிடப்பட்டால் உடனடியாக விற்றுவிடாதீர்கள். சந்தை நிலைபெற சில வர்த்தக நாட்கள் அல்லது ஓரிரு வார அவகாசம் கொடுங்கள்.
2. நிறுவனத்தின் தரத்தைப் பாருங்கள்: நீங்கள் விண்ணப்பித்த நிறுவனம் நல்ல அடிப்படை பலம் கொண்டதா என்பதைப் பாருங்கள். பலமான நிறுவனங்கள் தற்காலிகமாகச் சரிந்தாலும், விரைவில் அசல் விலையைத்தாண்டி மீண்டு வரும்.
3. தவணைகளாக விற்கவும் (Staggered Selling): அனைத்துப் பங்குகளையும் ஒரே விலையில் விற்காமல், இலக்கு விலைகளை நிர்ணயித்துத் தவணை முறையில் விற்பது லாபத்தை அதிகரிக்கும் அல்லது நஷ்டத்தைக் குறைக்கும்.
பங்குச்சந்தையில் லாபத்தைத் தீர்மானிப்பது நமது பணத்தைவிட, நாம் கடைபிடிக்கும் "மனக்கட்டுப்பாடும் நிதானமுமே" ஆகும்! நஷ்டத்தைக் கண்டு பயந்து ஓடாமல், சூழ்நிலையை ஆராய்ந்து நிதானமாகச் செயல்பட்டால், நஷ்டத்தில் பட்டியலிடப்படும் ஐபிஓ-க்களிலிருந்து கூட கணிசமான லாபத்துடன் வெளியேற முடியும் என்பதற்கு இந்த அனுபவமே சான்று!
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: