

இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிக அதிகத் தொகை அளவிலான சாதனையைப் படைத்து, வெளியீடு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஒட்டுமொத்த சப்ஸ்கிரிப்ஷனும் பூர்த்தியான பெருமை ஜியோ (Jio) நிறுவனத்தின் மெகா ஐபிஓ-வைச் சேரும்.
கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த ஐபிஓ-வின் லிஸ்டிங் இன்று நடைபெறுகிறது. இதன் நிலவரங்கள் இனிமேல்தான் தெரியவரும். இந்த சூழலில் பொதுவாக ஐபிஓ-க்களில் சிறு முதலீட்டாளர் பிரிவில் அலாட்மென்ட் கிடைப்பதற்கான வாய்ப்பு மற்றும் பங்குதாரர் ஒதுக்கீடு பிரிவில் அலாட்மென்ட் கிடைப்பதற்கான வாய்ப்பு ஆகியவை தொடர்பாக சில முக்கிய விஷயங்களைப் பார்ப்போம். அதோடு இவை தொடர்பாக ஜியோ ஐபிஓ-வில் எனது அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.
குலுக்கல் முறை
பொதுவாக ஐபிஓ-க்களில் சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட அளவுக்குள் மட்டுமே விண்ணப்பங்கள் சந்தா ஆகியிருந்தால், தகுதியுள்ள மற்றும் சரியானபடி விண்ணப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் அலாட்மென்ட் கிடைக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட லாட்கள் விண்ணப்பித்திருந்தால், லாட்கள் இருந்தால் கேட்ட எண்ணிக்கையில் கிடைக்கவும் செய்யும். ஒதுக்கப்பட்ட அளவைவிட விண்ணப்பங்கள் அதிகமாகவும், சில பல மடங்கும் சந்தா செய்யப் பட்டிருந்தால் குலுக்கல் முறை பின்பற்றப்படும். தேர்வாகிறவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட லாட்களுக்கு விண்ணப்பித்திருந்தாலும், சம வாய்ப்பு முறையில் அனைவருக்கும் ஒரு லாட்தான் ஒதுக்கப்படும்.
இதனால் அலாட்மென்ட் கிடைப்பதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ள, ஒரே கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட லாட்டுகளை (சில்லறை முதலீட்டாளர் பிரிவின் உச்ச வரம்பான 14 லாட்டுகள் வரை) விண்ணப்பிப்பதை விட, குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் தனித்தனி டீமேட் கணக்குகள் தொடங்கி, அந்தக் கணக்குகள் மூலமாகவும் விண்ணப்பிப்பதே சிறந்த உத்தியாகும்.
குறிப்பாக, ₹500 கோடி அல்லது ₹1,000 கோடி போன்ற சிறிய அளவிலான ஐபிஓ-க்களில் சில்லறை முதலீட்டாளர் களுக்கு அலாட்மென்ட் கிடைப்பது மிக அரிது என்பதால் அவற்றில் இத்தகைய உத்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பெரிய அளவிலான மற்றும் ஜியோ போன்ற ப்ரம்மாண்ட அளவிலான ஐபிஓ-க்களில் அலாட்மென்ட் வாய்ப்புகள் சற்று கூடுதலாகவே இருக்கும். என்றாலும், இந்த வாய்ப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, எனது கணக்கு மற்றும் குடும்ப நபரின் கணக்கு ஆகிய இரண்டின் மூலமாகவும் இந்த ஜியோ ஐபிஓ-விற்கு விண்ணப்பித்திருந்தேன்.
பங்குதாரர் ஒதுக்கீடும் பரவலான தவறான கருத்தும்!
ஒரு தாய் நிறுவனம் தனது கிளை நிறுவனத்தின் ஐபிஓ-வைக் கொண்டு வரும்போது, தாய் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு 'பங்குதாரர் ஒதுக்கீடு' (Shareholder Quota) வழங்கப்படும். இதற்காகப் பெரிய எண்ணிக்கையில் பங்குகள் வைத்திருக்க வேண்டியதில்லை; ஒரே ஒரு பங்கு வைத்திருந்தாலும் போதுமானது.
இதனால் ஜியோ ப்ளாட்பார்ம் ஐபிஓ பற்றிய அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்தபோதே அதன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரே ஒரு பங்கை எனது கணக்கிலும், பிறகு குடும்ப உறுப்பினரின் கணக்கிலும் வாங்கி வைத்திருந்தேன். இதன் மூலம் ஜியோ ஐபிஓவுக்கு இருவரின் கணக்குகளிலிருந்தும் 'சில்லறை முதலீட்டாளர் பிரிவு' மற்றும் 'பங்குதாரர் பிரிவு' ஆகிய இரண்டிலுமே விண்ணப்பித்தேன்.
முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பரவலான கருத்து உண்டு; அதாவது, "சில்லறை முதலீட்டாளர் பிரிவில் அலாட்மென்ட் கிடைப்பதைவிட, பங்குதாரர் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தால் நிச்சயமாக அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு லாட்டாவது ஒதுக்கி விடுவார்கள்" என்று பலர் நம்புகிறார்கள்.
ஆனால், எனது நேரடி அனுபவம் இந்த நம்பிக்கையை முற்றிலும் பொய்ப்பித்துள்ளது!
எங்கள் இருவரின் விண்ணப்பங்களுக்கும் சில்லறை முதலீட்டாளர் பிரிவில் தலா ஒரு லாட் அலாட்மென்ட் கிடைத்த நிலையில், பங்குதாரர் பிரிவில் இருவருக்குமே அலாட்மென்ட் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக ஜியோ ப்ளார்பார்ம் நிறுவனத்திலிருந்து ‘அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்ததன் காரணமாக ஒதுக்கீடு கிடைக்கப்பெறவில்லை’ என்று மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அலாட்மென்ட் கிடைக்காததன் பின்னணியில் உள்ள காரணங்களும் கருதுகோளும்.
சில்லறை முதலீட்டாளர் பிரிவிலும் பல மடங்கு விண்ணப்பங்கள் குவிந்திருந்திருந்தன. எனினும் இருவருக்குமே அலாட்மென்ட் கிடைத்திருக்கிறது. அதே சமயம் பங்குதாரர் பிரிவில் கிடைக்காமல் போனது ஏன்?
இந்தக் கேள்விக்கு விடை தேடியதில் SEBI விதிகளும் சில நடைமுறைகளுமே காரணம் எனத் தெரிய வருகிறது.
1. சில்லறை முதலீட்டாளர் பிரிவில் கணினி குலுக்கல் (Draw of Lots): சில்லறை பிரிவில் அதிகப்படியான விண்ணப்பங்கள் வரும்போது, கணினி குலுக்கல் முறை மூலம் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆளுக்கு ஒரு லாட் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும். எனது பெயரிலும், குடும்ப நபர் பெயரிலும் விண்ணப்பித்ததால், அதிர்ஷ்டவசமாகக் குலுக்கல் முறையில் இருவருக்குமே அலாட்மென்ட் கிடைத்தது.
2. பங்குதாரர் பிரிவில் 'உத்தரவாத அலாட்மென்ட்' என்பது கட்டுக்கதை: பங்குதாரர் பிரிவில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 100% நிச்சயம் அலாட்மென்ட் கிடைக்கும் என்பது முற்றிலும் தவறான தகவல். அங்கேயும் தேவையைவிட விண்ணப்பங்கள் அதிகமாக வரும்போது குலுக்கல் முறையோ அல்லது விகிதாச்சார முறையோதான் பின்பற்றப்படும்.
3. பங்குகளின் எண்ணிக்கையும் முன்னுரிமையும்: பங்குதாரர் பிரிவில் ஆயிரக்கணக்கான பங்குகளை வைத்திருக்கும் பெரிய முதலீட்டாளர்களும், ஒரே ஒரு பங்கு வைத்திருக்கும் சில்லறை பங்குதாரர்களும் ஒரே பிரிவில் போட்டியிடுகிறார்கள். இங்கே ஒரு கருதுகோள் (Hypothesis) என்னவென்றால், அதிக எண்ணிக்கையிலான பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீட்டில் அல்லது குலுக்கல் முன்னுரிமையில் சாதகமான சூழல் அமைந்திருக்கலாம்.
இதனால் ஒரே ஒரு பங்கு மட்டும் வைத்திருந்த எங்கள் இருவரின் விண்ணப்பங்களும் குலுக்கல் வாய்ப்பைக்கூடப் பெறாமல் தள்ளுபடியாகி இருக்கக்கூடும். இது யூகம்தானே தவிர உறுதியானதல்ல.
எது எப்படியாயினும், ஒரே PAN கார்டைப் பயன்படுத்தி சில்லறை முதலீட்டாளர் மற்றும் பங்குதாரர் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே விண்ணப்பிப்பது, அலாட்மென்ட் கிடைப்பதற்கான வாய்ப்பை இரண்டு மடங்காக உயர்த்தும் ஒரு சிறந்த உத்தி.
எனது எதிர்கால நகர்வு: காஃபி கேன் போர்ட்ஃபோலியோ!
தற்போது எனது கணக்கிலும் குடும்ப நபரின் கணக்கிலும் அலாட்மென்ட் ஆகியுள்ள இந்த ஜியோ ஐபிஓ பங்குகளை இன்றோ அல்லது வரும் நாட்களிலோ விற்கப்போவதில்லை. இவற்றை 'காஃபி கேன் போர்ட்ஃபோலியோவில்' (Coffee Can Portfolio - Buy & Forget) நிரந்தரமாகச் சேர்த்து வைக்கத் தீர்மானித்துள்ளேன்.
ஜியோ என்பது மாபெரும் சந்தை ஆதிக்கம் கொண்ட, பிரகாசமான எதிர்காலம் கொண்ட ஒரு நிறுவனம். அடுத்த 10 ஆண்டுகளில் இத்துறை அடையப்போகும் வளர்ச்சியைக் கணக்கிட்டால், இப்பங்குகளை விற்காமல் வைத்திருப்பது பல மடங்கு லாபத்தைத் தரும் என்பது வலுவான பொது நம்பிக்கை.
இதேபோல, இந்தியச் சந்தையால் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் 'டாடா சன்ஸ்' (Tata Sons) ஐபிஓ வரும்போதும் இதே உத்தியையே பின்பற்றவுள்ளேன். டாடா குழுமப் பங்குகளை முன்கூட்டியே கைவசம் வைத்துக்கொண்டு, சில்லறை முதலீட்டாளர் மற்றும் பங்குதாரர் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே விண்ணப்பிப்பேன். அப்போதும் அலாட்மென்ட் கிடைக்கிறபட்சத்தில், அந்தப் பங்குகளையும் விற்பனை செய்யாமல் காஃபி கேன் போர்ட்ஃபோலியோவிலேயே பாதுகாப்பாகச் சேர்த்து வைப்பேன்.
அதிர்ஷ்டம் மட்டுமல்ல
ஐபிஓ அலாட்மென்ட் என்பது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல; முறையான திட்டமிடுதலும்கூட. தவறான கருத்துக்களை நம்பாமல், விதிகளைப் புரிந்துகொண்டு குடும்ப உறுப்பினர்களின் கணக்குகள் மற்றும் பங்குதாரர் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி விண்ணப்பிப்பதே வாய்ப்புக்கான வழி. தரமான நிறுவனங்களின் பங்குகளை விற்காமல் நீண்டகாலத்திற்குக் காஃபி கேன் முறையில் சேமிப்பது சிறு – குறு முதலீட்டாளர்களுக்கு செல்வப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: