ஜியோ ஐபிஓ-வில் இரட்டை லாபம் பெறுவது எப்படி? 2026-ன் மாபெரும் முதலீட்டு வாய்ப்பு!

ஒரே PAN கார்டு மூலம் இரு பிரிவுகளில் விண்ணப்பித்து பங்கு ஒதுக்கீடு பெறும் எளிய முதலீட்டு உத்திகள்.
ஜியோ ஐபிஓ - Jio IPO Allotment
ஜியோ ஐபிஓ - Jio IPO Allotment
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on: 

இந்திய வர்த்தக உலகில் 'ரிலையன்ஸ்' என்ற பெயருக்குத் தனித்துவமான வரலாறும் வசீகரமும் உண்டு. 1977 நவம்பரில் திருபாய் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு வெளியிட்டபோது (IPO), சுமார் 58,000 முதலீட்டாளர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் பலர் முதல்முறையாகப் பங்குச்சந்தையில் நுழைந்தவர்கள். இதனால் இந்தியாவில் 'ஈக்விட்டி கலாசாரத்தைத்' தொடங்கி வைத்தவர் எனத் திருபாய் அம்பானி போற்றப்படுகிறார்.

அந்த ஐபிஓ-வில் போடப்பட்ட ஆயிரம் ரூபாய், 2012-ல் ₹7.78 லட்சமாக வளர்ந்திருந்ததாக (ஆண்டுக்கு 21.6% கூட்டு வளர்ச்சி) முகேஷ் அம்பானியே பங்குதாரர்களிடம் கூறியிருந்தார்.

அத்தகைய பாரம்பரியம் கொண்ட ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து, நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு 'ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்' (Jio Platforms Ltd) நிறுவனத்தின் ஐபிஓ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் பூர்வாங்கப் பங்களிப்பு ஆவணம் ((RHP - Red Herring Prospectus) ஆகியவை (அக்டோபர் 14, 2026 தேதியிட்டவை) வெளியாகியுள்ளன.

வரலாற்று சாதனை: இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ

27 கோடி புதிய பங்குகள் கொண்ட இந்த ஐபிஓ, உச்ச விலையில் ₹30,213 கோடி (குறைந்தபட்ச விலையில் ₹28,755 கோடி) அளவிலானது. இது இந்தியப் பங்குச்சந்தையின் 150+ ஆண்டுகால வரலாற்றின் மாபெரும் ஐபிஓ என்ற சாதனையை அடைந்துள்ளது. இதற்கு முன்பு வெளியான மிகப்பெரிய ஐபிஓக்களான ஹூண்டாய் மோட்டார் இந்தியா (₹27,870 கோடி - 2024) மற்றும் எல்.ஐ.சி (₹21,008 கோடி - 2022) ஆகியவற்றின் சாதனைகளை இது முறியடித்து முதலிடத்தைப் பிடிக்கிறது.

வழக்கமாக இந்தியாவில் வெளியாகும் பெரும்பாலான மிகப்பெரிய ஐபிஓக்கள் 'ஆஃபர் ஃபார் சேல்' (Offer for Sale - OFS) முறையில்தான் வருகின்றன. ஆனால், ஜியோ ஐபிஓ-வில் 100% புதிய பங்குகள் (Fresh Issue) மட்டுமே வெளியிடப்படுகின்றன என்பது கூடுதல் சிறப்பு. திரட்டப்படும் முழுப் பணமும் நேரடியாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்துக்கே செல்லும்.

ஜியோ ஐபிஓ - Jio IPO Allotment
ஜியோ ஐபிஓ - Jio IPO AllotmentImage credit: sushilfinance.com

ஆனால் அது முழுவதும் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படப்போவதில்லை. இதில் ₹27,500 கோடி (சுமார் 91%), ஜியோவின் தொலைத்தொடர்புப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் கடன்களை முன்கூட்டியே அடைக்கப் பயன்படுத்தப்படும் என்று ஆவணம் கூறுகிறது. எஞ்சியது பொதுவான நிறுவனத் தேவைகளுக்கானது.

ஷேர் ஹோல்டர் கோட்டா

இந்த ஐபிஓ 2026 அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரை நடைபெற உள்ளது. முதலீட்டு நிறுவனங்களுக்கான ஆங்கர் ஏலம் அக்டோபர் 19-ல்; பங்கு ஒதுக்கீடு அக்டோபர் 26-ல்; பங்குச்சந்தையில் பட்டியலிடல் அக்டோபர் 28-ல் நடைபெற உள்ளது.

இந்த ஐபிஓ-வில் ஜியோ ஊழியர்களுக்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக தாய் நிறுவனங்களிலிருந்து கிளை நிறுவனங்கள் பிரிந்து ஐபிஓ வெளியிடும்போது, தாய் நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு 'ஷேர் ஹோல்டர் கோட்டா' ஒதுக்கீடு செய்யப்படும். Record Date-க்கு முன்னதாக ஒரே ஒரு பங்கு வாங்கியிருந்தாலும் இந்த ஒதுக்கீடு கிடைக்கும்.

இதன்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) பங்குதாரர் களுக்காக (Shareholder Category) ₹2,500 கோடி மதிப்பிலான பங்குகள் பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 14, 2026 (RHP தாக்கல் செய்யப்பட்ட நாள்; இதுவே தகுதிக்கான கடைசி நாள்) நிலவரப்படி உங்களது டீமேட் கணக்கில் குறைந்தது ஒரு ரிலையன்ஸ் பங்கு இருந்தாலும் நீங்கள் இப்பிரிவில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

இதையும் படியுங்கள்:
71% GMP எட்டிய டான்போ இமேஜிங்: IPO-வில் முதலீடு செய்யலாமா? முழு அலசல்!
ஜியோ ஐபிஓ - Jio IPO Allotment

இரட்டை விண்ணப்ப வாய்ப்பு

ஒரே PAN கார்டு மற்றும் டிமேட் கணக்கைப் பயன்படுத்தி ‘Retail Category’ (₹2 லட்சம் வரை) மற்றும் ‘Shareholder Category’ (₹2 லட்சம் வரை) ஆகிய இரண்டிலும் விண்ணப்பிக்க சட்டப்பூர்வ அனுமதி உண்டு. இது உங்களுக்குப் பங்கு ஒதுக்கீடு (Allotment) கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கக்கூடும்.

உங்கள் வர்த்தகத் தளத்தில் (Zerodha, Groww போன்றவை) அல்லது நெட் பேங்கிங் ASBA-வில் ‘RIL Shareholder’ பிரிவைத் தேர்ந்தெடுத்து ‘Cut-off Price’ (₹1,119) கொடுத்து விண்ணப்பிக்கலாம். வழக்கம்போல ரீடெய்ல் பிரிவிலும் விண்ணப்பிக்கலாம்.

லிஸ்டிங் கெயின் Vs நீண்டகால முதலீடு

ஒருவேளை உங்களுக்கு ஐபிஓ ஒதுக்கீடு கிடைத்தால், அதை எவ்வாறு அணுகுவது என்ற கேள்வி எழலாம். சந்தை வல்லுநர்களின் பார்வையில் இதற்கான இருவேறு வாய்ப்புகள்:

1. லிஸ்டிங் கெயின் (Listing Gain)

தற்போது சாம்பல் சந்தையில் (Grey Market Premium - GMP) நிலவும் சாதகமான சூழலால், பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் முதல் நாளிலேயே கணிசமான லாபம் (Listing Gain) கிடைக்க வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
தொடர்ந்து 8 வாரங்களாகச் சாய்ந்த பங்குச்சந்தை; பயப்படாமல் லாபம் பார்ப்பது எப்படி?
ஜியோ ஐபிஓ - Jio IPO Allotment

GMP எப்போதும் மாறக்கூடியதும் அதிகாரப் பூர்வமற்றதுமாகும். என்றாலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரபலம் மற்றும் வணிகத் தகுதிகள் காரணமாக லிஸ்டிங் கெயினில் குறைவிருக்காது என எதிர்பார்க்கலாம்.

குறுகிய காலத்தில் விரைவான லாபத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள், பட்டியலிடப்படும் நாளில் கிடைக்கும் இந்த லாபத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுவதைப் பரிசீலிக்கலாம்.

நீண்டகால முதலீடு

இந்தியாவில் 52.4 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர் களையும் (மார்ச் 2026), அவர்களில் 26.85 கோடி 5G வாடிக்கையாளர்களையும் (ஜூன் காலாண்டில் இது 28.5 கோடியை எட்டியதாக நிறுவனம் அறிவித்துள்ளது) கொண்டு, டிஜிட்டல் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிறுவனமாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் திகழ்கிறது.

2026 நிதியாண்டில் இந்நிறுவனம் சுமார் ₹1.47 லட்சம் கோடி செயல்பாட்டு வருவாயையும், சுமார் ₹30,000 கோடி நிகர லாபத்தையும் ஈட்டியுள்ளது; 2026 ஜூன் காலாண்டில் நிகர லாபம் 9.2% உயர்ந்து ₹7,764 கோடியாக இருந்தது. மெட்டா (Meta) மற்றும் கூகுள் (Google) போன்ற சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகளும் (இரண்டும் சேர்ந்து சுமார் 17.7% பங்கு) இதன் பலமாகும்.

எனவே, இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் AI வளர்ச்சியில் பங்கேற்க விரும்பும் நீண்டகால முதலீட்டாளர்கள், அலாட்மென்ட் கிடைக்கும் பங்குகளைத் தங்களது போர்ட்ஃபோலியோவில் தொடர்ந்து வைத்திருப்பது நீண்டகால அடிப்படையில் நல்ல பலன்களைத் தரக்கூடும். எனினும், உச்ச விலையில் நிறுவனத்தின் மதிப்பு ஆண்டு லாபத்தைப் போல் சுமார் 34 மடங்கு என்பதையும், ஐபிஓ நிதியின் பெரும்பகுதி கடனை அடைக்கச் செல்கிறது என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தையில் தினமும் லாபம் ஈர்க்கும் 4 ட்ரேடிங் ரகசியங்கள்!
ஜியோ ஐபிஓ - Jio IPO Allotment

பின் குறிப்பாக எனது சொந்த அனுபவங்கள்:

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ வரவிருக்கும் செய்தி ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியானபோதே, 'ஷேர் ஹோல்டர் கோட்டா'வுக்காக 25-08-26 அன்று நான் ஒரே ஒரு பங்கு மட்டும் வாங்கி வைத்துவிட்டேன். சக பங்குச் சந்தையர்களுக்கும் இத்தகவலைத் தெரிவித்தேன். இந்த 'ஷேர் ஹோல்டர் கோட்டா' பற்றிய முழுமையான தகவல் இன்று 16-10-26 அன்று அதிகாலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியஸ் லிமிடெட்டிலிருந்து மின்னஞ்சலில் வந்திருக்கிறது. ஷேர் ஹோல்டர் கோட்டா, ரீடெய்ல் ஆகிய இரு பிரிவிலும் விண்ணப்பிக்க உள்ளேன்.

லலிதா ஜுவல்லரி, தேசியப் பங்குச்சந்தை ஆகியவற்றின் ஐ.பி.ஓ.க்களில் எனக்குக் கிடைத்த அலாட்மென்ட் வாய்ப்பைப் பயன்படுத்தி அந்த லாட்களை எனது ‘காஃபி கேன் போர்ட்ஃபோலியோ’வில் வைத்துவிட்டேன். ஜியோ ஐ.பி.ஓ.வில் எப்படியும் 'ஷேர் ஹோல்டர் கோட்டா'வில் ஒரு லாட் நிச்சயம். அதையும் ‘காஃபி கேன் போர்ட்ஃபோலியோ’வில் சேர்த்துவிடுவேன்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com