

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி மற்றும் லம்ப்சம் (Lumpsum vs SIP) எது சிறந்தது என்றால் இரண்டுமே சிறந்த முறைகள் தான். இதில் எது சிறந்தது என்பது நம் கையில் உள்ள பணத்தைப் பொறுத்தது. நம்மிடம் இருக்கும் பணம், ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் சந்தையின் போக்கைப் பொறுத்தே அமைவது. நாம் வழக்கமான மாத வருமானம் பெறுபவராக இருந்தால் எஸ்.ஐ.பி முறை சிறந்தது. ஒரே நேரத்தில் பெரிய தொகை கையில் இருந்தால் லம்ப்சம் முறையைப் பயன்படுத்தலாம்.
எஸ்.ஐ.பி. (Systematic Investment Plan -SIP):
SIP என்பது முறைப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டமாகும். இது சந்தையுடன் இணைக்கப்பட்ட நிதிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு முதலீட்டு உத்தியாகும். இதன் மூலம் ஒரே மொத்தத் தொகையாக முதலீடு செய்வதற்கு பதிலாக வாராந்திர, மாதாந்திர, காலாண்டு போன்ற சீரான இடைவெளிகளில் நிலையான தொகையை முதலீடு செய்யமுடியும்.
சந்தையைப் பற்றிய பெரிய புரிதல் இல்லாத புதிய முதலீட்டாளர்களுக்கு எஸ்.ஐ.பி-யே சிறந்தது. மாதச் சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் வழக்கமான வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்றது.
ஒவ்வொரு மாதமும் நம் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிக்க இது உதவும். குறைந்த இடர் ஏற்புத்திறன் கொண்ட முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி யை தேர்ந்தெடுக்கலாம். ஒரே நேரத்தில் பெரிய முதலீடு செய்வதை விட, தொடர்ந்து முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு SIPகளில் முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும்.
ஒரே சீரான முதலீட்டுப் பழக்கத்தை உருவாக்க விரும்புபவர்களும், ஓய்வு, உயர்கல்வி போன்ற இலக்குகளை நோக்கிச் செயல்படும் முதலீட்டாளர்களும், நீண்ட கால முதலீட்டிற்காக பெரும்பாலும் SIPகளைத் தேர்வு செய்கின்றனர்.
சந்தை நிலவரத்தை நம்மால் கணிக்க முடியாது என்பதால், சாதாரண மக்களுக்கு எஸ்.ஐ.பி முறையே பாதுகாப்பானது. இது ஒழுக்கமான சேமிப்புப் பழக்கத்தைத் தருவதோடு சந்தை ஏற்ற இறக்கத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.
லம்ப்சம் (Lump Sum):
மொத்த முதலீடு என்பது ஒரு நிதிக் கருவியில் ஒரு முறை செய்யப்படும் கணிசமான பண முதலீடாகும். மொத்த முதலீடானது, தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில் தொடக்கத்திலேயே ஒரு பெரிய தொகையை செலுத்துவது.
நீண்டகால முதலீட்டு நோக்கம் மற்றும் அதிக இடர் தாங்கும் திறன் கொண்டவர்களுக்கு ஏற்றது இது. அதிக வருமானத்திற்கான வாய்ப்பை இது வழங்கினாலும் அதிக சந்தை இடரையும் கொண்டது. அதாவது இது சந்தை நேர அபாயத்திற்கு உட்பட்டது. சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படக்கூடியது. மொத்த முதலீடுகள், முதலீடு செய்த நாளிலிருந்து சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு முழுமையாக உட்பட்டே இருக்கின்றன.
பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் பொழுது மியூச்சுவல் ஃபண்டுகளின் NAV விலை குறைவாக இருக்கும். அப்போது மொத்தமாக முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அதிக லாபம் பார்க்கலாம். நீண்டகால இலக்கு உள்ளவர்களுக்கு இந்த மொத்த முதலீடு நல்ல பலன் அளிக்கும். நம்மிடம் அதிகப் பணம் இருந்து, முழுத் தொகையையும் ஒரே பரிவர்த்தனையில் முதலீடு செய்ய தயாராக இருந்தால் மொத்தத் தொகை முதலீட்டை தேர்ந்தெடுக்கலாம்.
நிபுணர்களின் கருத்துப்படி, நம்மிடம் பெரிய தொகை இருந்து, சந்தை இப்போது உச்சத்தில் இருக்கிறது என்று பயந்தால், அந்தப் பணத்தை லிக்விட் ஃபண்டில் போட்டுவிட்டு, அங்கிருந்து STP (Systematic Transfer Plan) மூலம் ஈக்விட்டி ஃபண்டிற்கு மாற்றலாம். இது நமக்கு லம்ப்சம் மற்றும் எஸ்ஐபி இரண்டின் நன்மைகளையும் ஒரே நேரத்தில் தரும்.
மொத்தத் தொகையாகவோ அல்லது SIP முறையிலோ முதலீடு செய்வதை பொறுத்தவரை, அதற்கான சிறந்த நேரம், நம் நிதி இலக்குகள், கையிருப்பில் உள்ள நிதி, முதலீட்டுக் காலம், சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளிக்கும் திறன் மற்றும் சந்தையின் நிலை ஆகியவற்றை கணக்கில் கொள்ளவேண்டும். இரண்டு முறைகளுக்கும் அவற்றிற்கே உரிய நிறைகளும் குறைகளும் உள்ளன. எனவே முடிவெடுப்பதற்கு முன்பு, முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம், உங்கள் மாத வருமானம் மற்றும் கையிருப்பில் உள்ள பணத்திற்கு ஏற்ப சரியான முதலீட்டு முறையைத் தேர்வுசெய்து, சந்தை அபாயங்களைக் குறைத்து அதிகபட்ச லாபத்தை ஈட்டும் தெளிவான நிதி முடிவை உங்களால் எடுக்க முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: